Friday, April 15, 2011
1 - ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜக்காத்
ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் - சட்டங்கள்
வாசகர்கள் கவனத்திற்கு: ஜகாத் என்பது ஒரு உயர்ந்த பொருளாதார திட்டம். எனினும் நாம் அதன் லட்சியத்தையோ, சிறப்பையோ இந்த தொடரில் எழுதப்போவதில்லை மாறாக அந்த பொருளாதா திட்டத்தின் சட்டங்கள் பற்றி மட்டுமே எழுதப்போகிறோம். இதன் உள் சட்டங்களில் உலகம் முழுதும் சிற்சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் இருதரப்பு கருத்துக்களையும் எடுத்துக் கூறி அதில் நம்முடைய நிலைப்பாடு எது என்பதையும் விளக்குவோம். ஒரு பொருளுக்கு அல்லது ஒரு தொகைக்கு ஒரு முறை மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமா... அல்லது ஆண்டு தோரும் கொடுக்க வேண்டுமா... என்பது பற்றி இரு சாராரின் வாதங்கள், அது பற்றிய ஆதாரங்கள், அவற்றின் நம்பகத் தன்மைகள் எல்லாமும் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த தொடரில் ஏற்படும் இடற்பாடுகளை வாசகர்கள் தங்கள் கருத்துக்களாக பதிக்கலாம்.
வாசகர்கள் கவனத்திற்கு: ஜகாத் என்பது ஒரு உயர்ந்த பொருளாதார திட்டம். எனினும் நாம் அதன் லட்சியத்தையோ, சிறப்பையோ இந்த தொடரில் எழுதப்போவதில்லை மாறாக அந்த பொருளாதா திட்டத்தின் சட்டங்கள் பற்றி மட்டுமே எழுதப்போகிறோம். இதன் உள் சட்டங்களில் உலகம் முழுதும் சிற்சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் இருதரப்பு கருத்துக்களையும் எடுத்துக் கூறி அதில் நம்முடைய நிலைப்பாடு எது என்பதையும் விளக்குவோம். ஒரு பொருளுக்கு அல்லது ஒரு தொகைக்கு ஒரு முறை மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமா... அல்லது ஆண்டு தோரும் கொடுக்க வேண்டுமா... என்பது பற்றி இரு சாராரின் வாதங்கள், அது பற்றிய ஆதாரங்கள், அவற்றின் நம்பகத் தன்மைகள் எல்லாமும் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த தொடரில் ஏற்படும் இடற்பாடுகளை வாசகர்கள் தங்கள் கருத்துக்களாக பதிக்கலாம்.
விளக்கம் 1 - ஜகாத் யார் மீது கடமை, கொடுக்க கடமைப்பட்டவர்கள் யார்?
ஒருவருக்கு ஜகாத் கடமையாக வேண்டுமானால் பல நிபந்தனைகள் உண்டு. அந்த நிபந்தனைக்கு உட்பட்டோர் மீது மட்டும் தான் ஜகாத் கொடுக்கும் பொறுப்பை இஸ்லாம் விதிக்கிறது.
நிபந்தனை ஒன்று - ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை ('கலீபாக்களாக') பிரதிநிதிகளாக ஆக்கி இருக்கிறானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 57:7)
உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். (அல் குர்ஆன் 24:33)
நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள் (அல் குர்ஆன் 2:3)
இந்த மூன்று வசனங்களில் மனிதன் வாரிசுரிமை அடிப்படையிலோ அல்லது தனது சொந்த திறமையின் வழியாகவோ அல்லது பிறர் கொடுக்கும் அன்பளிப்புகளின் வழியாகவோ செல்வத்திற்கு சொந்தக்காரனாகிறான் என்பது தெரிகிறது. 'உங்கள் செல்வம்' என்று இறைவன் கூறியிருப்பதிலிருந்து இறைவனின் வழியில் செலவு செய்யும் எது ஒன்றிர்க்கும் செலவு செய்பவர் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தனது அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் சொத்திற்கு சுய அதிகாரம் பெறாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமைப் பெற்றவர்கள் மீதே ஜகாத் கடமையாகும். ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனையில் 'உங்கள் செல்வம்' என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
எவரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாத எந்த சொத்திற்கும் அது எத்துனை கோடி மதிப்புள்ளதாக இருந்தாலும் சரி அதன் மீது ஜகாத் கடமையில்லை.
அரசு கருவூலங்களுக்கு அரசாங்கம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை ஏனெனில் அது எவருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. அந்த செல்வத்திற்கு நான் தான் சொந்தக்காரன் என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜகாத் நிதிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் இவைகள் அரசாங்கத்திடம் மலைப்போல் குவிந்திருந்தாலும் அவற்றிர்க்கு கணக்கு பார்த்து அரசாங்கம் ஜகாத் கொடுக்க முடியாது ஏனெனில் 'உங்கள் செல்வம்' என்ற நிபந்தனை இங்கு பொருந்தவில்லை.
பள்ளி வாசல்களுக்காகவோ - இன்னபிற நற்காரியங்களுக்காகவோ வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகளும் ஜகாத் கடமையாவதிலிருந்து விலக்கு பெறுகின்றன. ஏனெனில் இவைகளும் வக்ஃப் செய்யப்பட்டு விட்ட பிறகு தனிமனிதர்களுக்கு சொந்தமானவை என்பதிலிருந்து மாறுபட்டு விடுகிறது. 'உங்கள் செல்வம்' என்பது இங்கும் பொருந்தாது என்பதால் அவற்றிர்க்கும் ஜகாத் கடமையில்லை.
முஸ்லிம் உம்மத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் மக்களிடமிருந்து நற்பணிகளுக்காக பணம் வசூலித்தால் அதன் மூலம் இயக்கதிற்காக சொத்துக்கள் (நிலங்கள் - கட்டிடங்கள் - வாடகை வருமானங்கள் - வாகனங்கள் - பத்திரங்கள் எல்லாம் இதில் அடங்கி விடும்) வாங்கப்பட்டால் அந்த சொத்துக்களுக்கோ சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கோ ஜகாத் கடமையில்லை ஏனெனில் 'உங்கள் செல்வம்' என்ற நிபந்தனையை இந்த சொத்துக்கள் எதுவொன்றின் மீதும் பொருத்திக் காட்ட முடியாது. இவைகள் எந்த தனி மனிதர்களுக்கும் சொந்தமானவையல்ல.
கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் பிரிக்கப்படாத சொத்துக்கள் ஜகாத்திலிருந்து விதி விலக்கு பெறாது. அவை பிரிக்கப்படா விட்டாலும் 'உங்கள் செல்வம்' என்ற தகுதியைப் பெறும் பலருக்கு அது சொந்தமாக இருப்பதால் அவற்றிலிருந்து ஜகாத் பிரிக்கப்பட வேண்டும். (இது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்)
'உங்கள் செல்வத்தில்' சேராத இன்ன பிற சொத்துக்கள்.
லஞ்சம் - வட்டி - திருட்டு - லாட்டரி - சூது இவற்றால் பெறப்பட்ட சொத்துக்கள் - செல்வங்கள் எதுவொன்றும் ஜகாத் திட்டத்தில் இடம் பெறாது ஏனெனில் பிறருடைய செல்வமாகும். முறையற்ற வழியில் அவை அபகரிக்கப்பட்டுள்ளதால் அவை இறைவன் வழங்கிய செல்வமாகவோ, வாரிசுரிமை வழியில் பெறப்பட்ட செல்வமாகவோ கருதப்படாது. எனவே இத்தகைய சொத்துக்களுக்கு ஜகாத் கொடுக்கும் படி இஸ்லாம் ஏவவில்லை. ஜகாத் கொடுத்து விட்டால் அத்தகைய சொத்துக்கள் தூய்மையடைந்து விடும் என்பதையும் இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த செல்வங்களை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவதும், அதற்கு வழியில்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் அனைத்தையும் வறுமையில் உழன்றுக் கொண்டிருப்பவர்களிடம் (நன்மையை நாடாமல்) சேர்ப்பித்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதும் தான் இதற்கான மாற்று வழியாகும்.
விபச்சாரம் - போதைப் பொருட்கள் போன்று இஸ்லாம் ஹராமாக்கியுள்ள காரியங்களின் வழியாக ஈட்டப்படும் தொகை எதுவாக இருந்தாலும் அவைகளிலிருந்து ஜகாத் தொகையை பிரித்தெடுக்க முடியாது. இவைகளும் இறைவன் வழங்கிய செல்வம் அல்லது வாரிசுரிமையால் கிடைத்தது என்ற தகுதியை இழந்து விடுகிறது.
அல்லாஹ் இறையச்சம் உடையவர்களிடமிருந்துதான் எதையும் அங்கீகரிக்கிறான். (அல் குர்ஆன் 5:27)
இன்றைக்கு முஸ்லிம்களில் பலர் 'சம்பாதிக்கும் வழியைப்பற்றி கவலை இல்லை கிடைக்கும் செல்வத்தில் ஜகாத் - தர்மம் என்று நல்வழியில் செலவிட்டு கணக்கை சரிப்படுத்திக் கொள்ளலாம்' என்ற எண்ணத்தில் இருப்பதை காண்கிறோம். இவர்கள் தங்கள் எண்ண ஓட்டங்களை நியயாப்படுத்தி ஜகாத் வழங்கினாலும் அவை எந்த மதிப்பையும் பெறாது என்பதை மேற்கண்ட வசனம் அறிவித்து விடுகிறது.
இறை வழியில் செலவு செய்பவற்றில் பரிசுத்தமானதை தவிர வேறெதையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி 1410)
எனவே ஜகாத்தை கடமையாக்கும் நிபந்தனைகளில் முதலாவது செல்வத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் முஸ்லிம்கள் அதை ஹலாலான - இஸ்லாம் அனுமதித்த - வழிகளில் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.
நிபந்தனை இரண்டு.
ஹலாலான செல்வத்திலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முதல் நிபந்தனையை சற்று ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இது.
செல்வத்திலிருந்து ஜகாத் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் செல்வம் என்றால் என்ன? அதன் தன்மையும், மதிப்பும் ஒரே தரத்தை சார்ந்தவைதானா என்ற வினாக்கள் இங்கு பிறக்கின்றன.
மனிதர்களின் பயன்பாட்டிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப உலகில் பலதரப்பட்ட செல்வங்கள் குவிந்துக் கிடக்கின்றன. இஸ்லாம் இதன் தன்மைகளையும், மதிப்பையும் ஒரே மாதிரியாக கருதவில்லை. தேவைகளையும் - பயன்பாட்டையும் - மதிப்பையும் பொருத்து அதன் மீதான சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.
இது பற்றி விரிவாக அணுகுவோம்.
முதல் நிபந்தனையில் நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களில் 'உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வம்' என்ற வார்த்தை பிரயோகத்தில் செல்வத்தின் அளவு எதுவும் கூறப்படவில்லை. அதாவது ஒருவருக்கு முறையான வழியில் 100 ரூபாய் கிடைத்தால் அதுவும் செல்வம்தான். 1000ஆகவோ - லட்சமாகவோ - கோடியாகவோ இருந்தாலும் அதுவும் செல்வம்தான். அப்படியானால் 100 ரூபாய் வைத்திருப்பவரும் இது இறைவன் வழங்கிய செல்வம் என்ற அடிப்படையில் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவரா... அல்லது செல்வத்திற்கு எதாவது உச்சவரம்பு உண்டா... என்ற வினா அடுத்து எழுகிறது.
நிச்சயமாக செல்வத்திற்கு உச்சவரம்பு உண்டு. அந்த உச்சவரம்பு மனிதர்களின் தேவைக்கேற்ப மாறுபடும் என்பதை குர்ஆன் வசனங்களிலிருந்து பரிந்துக் கொள்ளலாம்.
ஒருவர் தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மாத வருமானம் ரூ 15000. வருடத்திற்கு 180,000. இது சராசரியான வருமானத்தை கடந்த அளவாகும். இது நல்ல வருமானமாக கருதப்பட்டாலும் மாதத்திற்கு 15 ஆயிரம் என்றவுடனோ, அல்லது வருடத்திற்கு 180 ஆயிரம் என்றவுடனோ அவர் ஜகாத் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று யாரும் வலியுறுத்திவிட முடியாது. ஏனெனில் வருமானத்தை மட்டும் அளவுகோலாக கொண்டு கடமையாக்கப்பட்ட சட்டமல்ல ஜகாத். வருமானத்தை போன்றே மனிதர்களின் தேவைகளையும், செலவீனங்களையும் ஜகாத் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)
இவ்வளவு இருந்தால் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லாமல் 'தேவைக்கு போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்' என்கிறான் இறைவன்.
'மீதமுள்ளதை' என்று இறைவன் கூறியதிலிருந்து ஒருவருடைய வருமானம் அவருடைய அவசியத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளங்கலாம்.
தேவைக்கு போக மீதமுள்ளதை என்றால் தேவையின் அளவு என்ன?
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும் போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே.
வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)
வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. தொடரும் இறைநாட்டப்படி
Labels:
ஜக்காத் சட்டங்கள் - 1
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment