Saturday, April 23, 2011
எதிரொலி - 2 'இறைவனின் அடியாட்கள்'
எதிரொலி - 2
இறைவனின் அடியாட்கள் என்ற விமர்சனக் கட்டுரைக்கு மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக இத் தொடர் கட்டுரை எழுதப்படுகிறது.
விமர்சனம் 2
''ஆண்கள் பெண்களைவிட ஒருபடி மேல்'' (அல்-குர்ஆன் 2 : 228) என்று மேற்கோள் காட்டுகிறார் நிஜாமுத்தீன். 'அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்' (அல்-குர்ஆன் 33 : 35) என்கிறார் அஸ்கர் அலி என்ஜினீயர். ''குடும்பத்தில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்றால், ஒரு தலைவன் வேண்டும். அந்தப் பதவியை இஸ்லாம் கணவனுக்குத்தான் கொடுக்கிறது'' என்கிறார் மவுதூதி. எது குர்ஆனின் முடிவு? எது இஸ்லாத்தின் வழி காட்டுதல்? பதில்:-ஆண்கள் பெண்களை விட ஒரு படி மேல்' என்பதும்
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும், பெண்ணும் சமம்தான்' என்பதும்
முரண்பட்ட இரண்டு சித்தாந்தமாக கருதிக் கொண்டுதான் கட்டுரையாளர் அதை விமர்சனமாக்கியுள்ளார். கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் இதில் முரண்பாடு எதுவுமில்லை என்பதும் ஆண்கள் மீதான கூடுதல் சுமை என்ன என்பதும் தெளிவாக விளங்கி விடும்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் விளக்கலாம்.
இந்த விமர்சனக் கட்டுரை எழுதிய கட்டுரையாசிரியருக்கு ஒரு மகனும், மகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பேட்டியில் 'என் பார்வையில் ஆணும் பெண்ணும் (அதாவது மகனும் மகளும்) சமம் தான் என்கிறார். இன்னொரு சந்தர்பத்தில் மகளை விட மகன் கூடுதல் பலம் பொருந்தியவன் என்கிறார். அல்லது மகனை விட மகள் தாய்மை அடைவதை கூடுதல் தகுதியாக சொல்லிக் காட்டுகிறார் என்றால் இதை இவர் முரண்பாடாக பேசுகிறார் என்று யாராவது விளங்குவார்களா..? அப்படி விளங்கினால் அவர்கள் விபரமுள்ளவர்களாக இருப்பார்களா..?
தந்தையின் பார்வையில் குழந்தைகள் அனைவரும் சமம் என்பதற்கும், குழந்தைகளுக்கு மத்தியில் தகுதியில் இயல்பில் வித்தியாசம் இருக்கிறது என்பதற்கும் வேறுபாடு உண்டு.
என்பார்வையில் மகனும் மகளும் சமம் என்று கூறும் தந்தை 'நான் சமம் என்று கூறிவிட்டதால் என் மகனுக்கும் மகளுக்கும் மத்தியில் தகுதியில் இயல்பில் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது' என்று விளங்குவாரா..
பெற்றவர் என்ற அடிப்படையில் மகளுக்கும் மகனுக்கும் மத்தியில் வித்தியாசம் காட்டக் கூடாது. அன்பு செலுத்துவதில், அரவணைப்பதில், கல்வி புகட்டுவதில், இன்ன பிற காரியங்களில் பாகுபாடு காட்டக் கூடாது. 'என்பார்வையில் சமம்' என்பதற்கு இதுதான் அர்த்தம்.
தகுதியில் இயல்பில் வேறுபாடு இருக்கக் கூடாது என்பது அதன் அர்த்தமல்ல என்பதை இப்போது விளங்கி இருக்கலாம்.
இறைவன் என்ன சொல்கிறான்?
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்.
அல்லாஹ்வின் பார்வையில் சமம் என்பது தந்தையின் பார்வையில் குழந்தைகள் எப்படி சமமோ அந்த அர்த்தத்தை கொடுப்பதாகும்.
ஆண் உயர்வான படைப்பு, இறைவன் அப்படிதான் படைத்துள்ளான், அவன் ஆணை நேசிக்கிறான் என்றெல்லாம் ஆணாதிக்க போக்கிற்கு தாளம் போடும் மார்க்கமல்ல இஸ்லாம். படைத்தவன் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் தான் என்பதை இந்த வசனத்திலும் இன்னும் சில வசனங்களிலும் குர்ஆன் தெளிவாக பிரகடனப் படுத்தியுள்ளது.
பெண்ணை மிகக் கேவலமாக நடத்திக் கொண்டிருந்த காலத்தில் (இன்றைக்கும் இந்தியாவின் பல இடங்களிலும் மேற்கத்திய நாடுகளிலும் இதுதான் நிலை) இஸ்லாம் மட்டும் தான் முதன் முதலில் இந்த புரட்சி பிரகடனத்தை உலகில் முழங்கியது. இன்றைக்கு ஓரளவு கல்வியறிவு வளர்ந்த பெண்களுக்கு மத்தியில் தன்னுடைய நிலைப்பற்றி - உரிமைப்பற்றி சிந்தனையோட்டம் வளர்ந்திருக்கலாம். அதிலும் ஒருசில பெண்களிடம் தான் இந்த சிந்தனை வந்துள்ளது. ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கை வெளிபட்ட காலகட்டத்தில் இந்த சிந்தனை என்றால் என்னவென்றே தெரியாத சூழுல்தான் மண்டி கிடந்தது. அந்த மக்களுக்கு புரியாவிட்டாலும் பிரச்சனையில்லை(அந்த பெண்கள் புரிந்துக் கொண்டு உரிமையுடன் வாழ்ந்தார்கள் என்பது தனி விஷயம்) பின்னாட்களில் கல்வியறிவு வளர்ந்த மக்களிடம் இந்த சிந்தனை வலுப் பெற வேண்டும் என்பதற்காக 'இறைவனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்' என்ற கொள்கை அன்றைக்கே எடுத்து வைக்கப்பட்டு விட்டது.
முரண்படுவதாக இரண்டு வசனங்களை எடுத்துக் காட்டி எது இஸ்லாமிய சட்டம்? என்று கேட்கிறார் கட்டுரையாளர். இறைவனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதும் இஸ்லாமிய கொள்கை தான். இறைவனின் பார்வையில் என்பதை ஹைலைட் பண்ணி சிந்திக்க வேண்டும்.
'ஆண்கள் பெண்களை விட ஒரு படி உயர்வு பெற்றவர்கள்' (2:228) என்கிறது அடுத்த வசனம். அல்லாஹ்விடத்தில் உயர்வு பெற்றவர்கள் என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படவில்லை. இதை அதே வசனத்தின் முற்பகுதியையும் இதற்கு விளக்கமாக வரும் மற்றொரு வசனத்தையும் பார்த்து விளங்கலாம்.
2:228 வசனம், கணவர்களுக்கு(ஆண்களுக்கு) மனைவிகள்(பெண்கள்) மீது இருக்கும் உரிமைப் போன்றே மனைவிகளுக்கு(பெண்களுக்கு) கணவர்கள்(ஆண்கள்) மீது உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு ஒரு படி உயர்வுண்டு.
ஆண்களுக்கு பெண்கள் மீதும் பெண்களுக்கு ஆண்கள் மீதும் உரிமையுண்டு என்று தெளிவு படுத்தப்பட்டு விட்டதால் 'கொஞ்சம் உயர்வு உண்டு' என்பது உரிமைகளில் உயர்வு கொடுக்கப்பட்டதாக இருக்க முடியாது.
ஒருவரையொருவர் சார்ந்து நிற்கும் போது அவர்களுக்கு மத்தியில் உள்ள உரிமைகள் என்ன என்பதை விளங்குவோம்.
1. பாலியல் உரிமை. கணவனின் தேவையை நிறைவேற்றுவது மனைவியின் கடமை. அதை அவள் நிறைவேற்ற மறுத்தால் - அதாவது தொடர்ந்து மறுத்தால் - அவளை விவாகரத்து செய்யும் உரிமையை கணவன் பெறுகிறான். அதே போன்று இல்லறத்தில் இருபாலாருக்கும் உச்சகட்ட திருப்தி முக்கியம் என்பதால் தன் மனைவியை திருப்தி படுத்தும் கடமை கணவனுக்கு உண்டு. இதில் ஒரு கணவன் குறைப்பாட்டுடன் நடந்துக் கொண்டால் விரும்பினால் அவனிடமிருந்து பிரியும் உரிமையை மனைவி பெறுகிறாள்.
2. புரிந்துணர்வு உரிமைகள். கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். கணவனுடைய கோப தாபங்களை, ஆசைகளை, எதிர்பார்ப்புகளை மனைவி மட்டும் தான் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும். அவளுடைய மன நிலையை, ஆசைகளை, எதிர்பார்ப்புகளை கணவன் புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்று இஸ்லாம் சொல்லவில்லை. புரிந்துணர்வில் இடையூறுகள் ஏற்படும் போது அது குடும்ப வாழ்வை சிதைக்கும் என்பதால் இவனுக்கு உள்ள உரிமையையே அவளும் பெறுகிறாள்.
இந்த இரண்டு உரிமைகளில் கிட்டத்தட்ட குடும்பம் பற்றிய எல்லா விபரமும் அடங்கி விடும். அப்படியானால் பெண்களை விட ஆண்கள் உயர்வு பெறுவது எங்கே?
இறைவன் சிலரை விட சிலரை மேன்மை படுத்தி வைத்திருக்கிறான். தங்கள் சொத்துக்களிலிருந்து செலவு செய்வதால் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள் (அல் குர்ஆன் 4:34)
ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு என்று இறைவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்று இந்த வசனம் தெளிவாக்கி விடுகிறது. அதாவது உழைத்து பொருள் திரட்டுவதில் ஆண் பெண்ணை விட வலிமை மிக்கவன் என்பதால் அவனது தகுதிக்கு ஏற்ற பொறுப்பை - பெண்களுக்கு தேவையானதை கொடுக்கும் கடமையை - அவன் மீது விதித்து அவன் சிறப்பை கூட்டுகிறது. தகுதிக்கு ஏற்றவாறு ஒருவனை - ஒருவளை பாராட்டுவதிலோ, மதித்து பேசுவதிலோ எந்த தவறும் இருக்க முடியாது.
ஒரே கல்லூரியில் படிக்கும் கட்டுரையாளரின் மகனைவிட மகள் நல்ல மதிப்பெண் பெற்றுவந்தால் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக அவள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக அவளை பாராட்டுவார். இந்த பாராட்டால் மகனுக்கு குறைவு ஏற்பட்டு விடாது. இது மகன் மகள் என்ற அடிப்படையிலான பாராட்டு அல்ல. உழைப்பிற்கும் முயற்சிக்குமான பாராட்டு. இதை போன்ற ஒரு பாராட்டை குடும்ப பொறுப்பை சுமந்துக் கொண்ட ஆண் பெறுகிறான்.
இது ஆண் என்பதற்கான பாராட்டு - உயர்வு - அல்ல. அவன் பொறுப்பிற்கும் கடமைக்கும் கிடைக்க வேண்டிய பாராட்டாகும். 'தங்கள் சொத்துக்களிலிருந்து செலவு செய்வதால் ஆண் உயர்வு பெறுகிறான்' என்று உயர்வு பெறுவதற்குரிய காரணத்தை இறைவன் இங்கு தெளிவாக வரையறுத்துவிட்டதால் அந்த காரணத்திற்கு உட்படாத எவரும் அந்தப் பாராட்டை பெறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.
வாழ்க்கை - குடும்ப - பகிர்ந்தளிப்பில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே அளவிளான ஆனால் வெவ்வேறான பணிகள் வெவ்வேறான இடங்களில் சுமத்தப்படுகின்றன. வீடு, அலுவலகம் என்று கணவனுக்கும் மனைவிக்கும் வேலை செய்யும் இடங்கள் மாறலாம். வேலையின் தன்மைகள் கூட மாறுபடலாம். ஆனால் இருவரும் உழைக்கிறார்கள் என்பது மட்டும் மாறுபடாதது. இவள் தன் சொந்த இடத்தில் உழைக்கிறாள். அதனால் கூலி என்ற எந்த சட்டமும் இங்கு இல்லை. அவன் அந்நிய இடத்தில் உழைக்கிறான். அதனால் அங்கு கூலி கடமையாகிறது. இஸ்லாம் இங்குதான் ஆண்கள் மீது கூடுதல் சுமையை வைக்கிறது.
உன்னைப் போன்றே உன் மனைவியும் உழைக்கிறாள், நீ உன் உழைப்பிற்கு கூலி பெற்றுவிடுகிறாய். உன் வட்டாரத்தில் உனக்காக உழைக்கும் உன் மனைவிக்கு கூலி இல்லை, நீ அவளுக்கு கூலி கொடுக்கவும் முடியாது ஏனெனில் நீங்கள் இருவரும் அந்நியரல்ல. அதனால் உங்கள் இருவருக்கும் மத்தியில் பிணைப்பு மேலும் வலுப் பெறுவதற்காக அவளது பராமறிப்பு பொறுப்பு முழுவதையும் நீ ஏற்றுக் கொள் அது உன்மீது கடமையும் கூட என்கிறது இஸ்லாம்.
கணவனைப் போன்றே வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்கும் தகுதி பெண்களுக்கும் உண்டு இஸ்லாம் இதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்லாம் அதை அவள் மீது கடமையாக்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் குடும்ப அமைப்பை மன குழப்பமற்ற ஒரே சீரான போக்கில் இயக்க ஆசைப்படுகிறது.
கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் போது இவர்கள் இருவரின் வேலைகளை முடிக்க இன்னொரு ஆள் தேவைப்படுகிறது. அதாவது இவர்களின் குடும்ப அமைப்பிற்கு சம்பந்தமில்லாத, கூலியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட ஒரு ஆள் வசம் இவர்களின் வேiலையை ஒப்படைக்கும் சூழல் ஏற்படுகிறது. இது குடும்பத்தில் குறிப்பாக குழந்தைகளின் உள்ளத்தில் - வாழ்வில் - பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி தாய் பற்றிய பாச பிணைப்பை துண்டித்து தாயிடமிருந்து குழந்தைகள் பெற வேண்டிய அரவணைப்பையும் மென்மையான மன ஓட்டத்தையும் இல்லாமலாக்கி வெறுமையை அவர்களின் மனங்களில் விதைத்து விடுகிறது. உளநல, குழந்தைகள் நல ஆய்வாளர்கள் அனைவருமே இந்த கருத்தை மொத்தமாக பிரதிபளிக்கிறார்கள்.
பொருள் முதல் வாதம் பேசுபவர்கள் மட்டுமே கூலியை அல்லது சம்பளத்தை மையமாகக் கொண்ட வேலையின் பக்கம் ஆண்களையும் பெண்களையும் பாகுபாடின்றி ஓட்டி செல்ல முனைவார்கள். இவர்களுக்கும் குடும்ப அமைப்பு பற்றிய அக்கறையெல்லாம் இருக்காது. அது எப்படியாவது இயங்கிவிட்டுப் போகட்டும் என்பது தான் இவர்களின் நிலைப்பாடு.
பொருள் முதல்வாதத்தை வாழ்வியல் ஆதாரத்துக்குரிய முதல் தகுதியாக இஸ்லாம் வைக்கவில்லை. வாழ்க்கைக்குரிய தேவைகளில் பொருளாதாரமும் ஒன்று என்ற கண்ணோட்டம் தான் இஸ்லாமிய பொருளியல் கண்ணோட்டமாகும். அதனால் தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்த பொருள் திரட்ட வேண்டும் என்ற கொள்கையை இஸ்லாம் மொழியவில்லை. மன அமைதி தவழ வேண்டிய குடும்பம் என்ற பூங்காவிற்கு மனைவியை பொறுப்புதாரியாக்கி பொருள் திரட்டும் பொறுப்பை கணவனிடம் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.
பெண்களுக்கு உழைக்கும் தகுதி இருந்தாலும் கணவன் கையால் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் கூலியோ சம்பளமோ ஈடாகாது என்பது அவர்களின் மனநிலையாகும். அதாவது பெண்ணிய இயல்பாகும்.
குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத்தை திரட்ட வேண்டியுள்ளதால் ஆண்களுக்கு கூடுதல் கடமையும் உழைக்கும் தகுதியும் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. 'ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு' என்பது இந்த கருத்தோட்டத்தில் சொல்லப்பட்டதாகும்.
எனவே
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதும்
ஆணுக்கு ஒருபடி உயர்வு உண்டு என்பதும்
முரண்பாடானவையல்ல என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளங்கட்டும்.
Labels:
அ,
எதிரொலி - 2 அடியாட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment