Saturday, April 23, 2011

எதிரொலி - 3 'இறைவனின் அடியாட்கள்'

எதிரொலி - 3

இறைவனின் அடியாட்கள் என்ற விமர்சனக் கட்டுரைக்கு மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக இத் தொடர் எழுதப்படுகிறது.

விமர்சனம் - 3
இஸ்லாமியச் சட்டங்கள் என்பவையெல்லாம் பெண்களை நசுக்குவதற்கு மட்டும்தான் இந்த நாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. மற்ற இஸ்லாமியச் சட்டங்களெல்லாம் எங்கே? திருட்டுக்கு கையை வெட்டுவது தானே! கள்ள உறவுக்கு கல்லாலும் பிறம்பாலும் அடிப்பது தானே! இந்த குற்றங்களெல்லாம் ஆண்களுக்கு பழக்கமானவை என்பதால் தானே ஆணாதிக்கவாதிகளான தலைவர்கள் இவற்றை அமல்படுத்தவில்லை? 
பதில் : - பொதுவாக விமர்சனங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
  • ஒன்று - தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை திருத்தப்படவதற்கான ஆரோக்யமான கருத்துக்களை முன் வைப்பதாகும்.
  • மற்றொன்று - சத்தற்றுப் போய் காழ்ப்புணர்ச்சியுடன் வெளிபடுவதாகும்
  • மூன்றாவது விமர்சிப்பவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும்.
இறைவனின் அடியாட்கள் விமர்சனக் கட்டுரையை பொருத்தவரை இந்த மூன்று வகையான விமர்சனங்களும் இப்படியும் அப்படியுமாக வெளிப்பட்டுள்ளது. இப்போது இடம் பெறும் மூன்றாவது விமர்சனம் இரண்டாவது தன்மையை - சத்தற்ற தரத்தை - எடுத்துக் காட்டுகிறது.

ஆண்கள் திருடினால் கையை வெட்டுவதில்லையாம்.

ஆண்கள் விபச்சாரம் செய்தால் தண்டனை கொடுப்பதில்லையாம் அதனால் இஸ்லாம் ஆண்களுக்கு துணைப் போகக் கூடிய மார்க்கமாம் இப்படி கற்பனை செய்துள்ளார் விமர்சகர்.

பெண்கள் திருடினால் மட்டும் இந்தியாவில் இஸ்லாமிய முறைப்படி கைகள் வெட்டப்படுகிறதோ..

முஸ்லிம் பெண்கள் விபச்சாரம் செய்தால் மட்டும் இந்தியாவில் இஸ்லாமிய முறைப்படி தண்டனை வழங்கப்படுகிறதோ...

இந்த குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் முறைப்படி தண்டனை கிடைப்பதில்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவு உண்மை பெண்களுக்கும் தண்டனை கிடைப்பதில்லை என்பதில் பொதிந்துள்ளது.

ஏதோ முஸ்லிம் ஆண்கள் இத்தகைய குற்றங்களை செய்ய உரிமைப் பெற்றவர்கள் என்பது போலவும் அதனால் அவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு பெறுகிறார்கள் என்பது போலவும் பெண்களாக பார்த்து குற்றவியல் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது போலவும் கற்பனையை விமர்சனமாக்கியுள்ளார் கட்டுரையாளர்.
திருட்டு விபச்சாரம் போன்ற தீய காரியங்களில் முஸ்லிம் ஆண்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஈடுபடுவார்கள் என்பது உண்மைதான் ஆண்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட குறைச்சலான பெண்களும் இத்தகைய காரியங்களில் ஈடுபடத்தான் செய்வார்கள். அப்படி ஈடுபடும் எந்த பெண்ணுக்காவது இந்தியாவில் இஸ்லாமிய குற்றவியல் தண்டனை கிடைத்துள்ளதா... ஆண்கள் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்வது போலவே தண்டனைப் பெற வேண்டிய பெண்களும் தப்பித்தான் கொள்கிறார்கள்.

இதற்கு காரணம் இஸ்லாத்தில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறும் அந்த கற்பனையல்ல மாறாக இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடை முறைப்படத்த முடியாத சூழ்நிலையேயாகும்.

உலக நாடுகளில் குற்றங்களை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள்.

ஒன்று, 'சிவில்' மற்றொன்று, 'கிரிமினல்'

சிவில் விவகாரங்களைப் பொருத்தவரை விவகாரத்துக்குட்பட்ட குடும்பமோ சமூகமோ தங்களுக்குள் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம். விரும்பினாலோ அல்லது முடியாத பட்சத்திலோ நீதி மன்றத்தை நாடலாம்.

கிரிமினல் வழக்கிற்கு இந்த விதி சற்றும் பொருந்தாது. கிரிமினல் விவகாரங்கள் இந்திய அரசியல் சாசனப்படி அரசின் கண்காணிப்பிற்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டதாகும். கிரிமினல் விவகாரங்களுக்கு தண்டனையோ மன்னிப்போ வழங்கும் அதிகாரம் அரசுக்கும் நீதி மன்றங்களுக்கும் மட்டும் தான் உண்டு.

ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை என்று கட்டுரையாளர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சிவில் விவகாரமல்ல அவை கிரிமினல் குற்றங்களாகும். அவற்றிர்க்கு நீதி மன்றங்கள் தான் தண்டனை வழங்க முடியும். அதனால் தான் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் வழங்க முடிவதில்லை குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். (பெண்களுக்கும் அத்தகைய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்)

அதிகாரமற்ற நிலையில் ஆர்வமுள்ள ஜமாஅத் தலைவர்கள் திருடினால் கைகளை வெட்டவேண்டும் விபச்சாரம் செய்தால் கல்லால் அல்லது பிரம்பால் அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினால் நமது நாட்டு அரசியல் சாசனப்படி தீர்ப்பு கூறியவரையே நீதி மன்றத்தில் குற்றவாளியாக ஏற்றி விடலாம்.

பெண்களின் மீதே சட்டம் பாய்கிறது என்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளான பர்தா, தலாக், ஜீவனாம்சம் போன்றவை சிவில் சட்டத்திற்கு உட்பட்டுவிடும். அதனால் தான் இவற்றை ஊர் ஜமாஅத்தினர்களோ - பொதுவானவர்களோ பேசி தீர்த்து விடுகிறார்கள். இவற்றில் தேக்கம் கிடைக்காமல் உடனுக்குடன் பேசி தீர்த்து நடை முறைப்படுத்தி விடுவதால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பெண்கள் மீது தான் அதிகமாக சட்டங்கள் பாய்கிறது என்ற தோற்றம் தென்படுகிறது. (பெண்களுக்கு எதிராக பாய்வதாக இவர்கள் சொல்லும் எந்த சட்டமும் பெண்களின் பாதுகாப்பையும் உயர்வையும் கவுரவத்தையும் கருத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது என்பதை அந்த சட்டங்களை ஆழமாக சிந்திக்கும் போது விளங்கலாம் அவற்றை எதிர்காலத்தில் விரிவாக விவாதிப்போம் இறைவன் நாடட்டும்)

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் சிக்கலற்ற தன்மைகளை மிகத் தெளிவாக விளங்கியுள்ளவர்கள் தான் கட்டுரையாளரும் அவரின் சிந்தனையை சார்ந்தவர்களும். விளங்கிய நிலையிலேயே சிவில் மற்றும் கிரிமினல் விவகாரங்களை ஒன்றாக குழப்பி மேற்கண்ட விமர்சனத்தை செய்துள்ளார்கள்.

விமர்சகரின் மகளுக்கு திருமணம் நடப்பதாக வைத்துக் கொள்வோம். இது சிவில் விவகாரம். இந்த திருமணம் முழுக்க முழுக்க அவரது கட்டுப்பாட்டை சார்ந்ததாகும். மாப்பிள்ளை பார்ப்பது, நாள் குறிப்பது, நிச்சயதார்த்தம் செய்வது, திருமணம் நடப்பது என்று எல்லாம் அவர் விரும்பிய படியே அவர் எதிர்பார்க்கும் நாளிலேயே நடந்து முடியும். அதே சமயம் அவர் வீட்டில் ஒரு திருட்டு போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் நினைக்கும் நாளில் திருடன் கிடைக்க மாட்டான். அவர் நினைக்கும் நாளில் காவல் துறை அவனை கைது செய்யாது. அவர் நினைக்கும் நாளில் அவன் கோர்ட்டில் ஏற மாட்டான். அவர் நினைக்கும் நாளில் நீதிபதி வழக்கை விசாரிக்க மாட்டார். அவர் நினைக்கும் நாளில் குற்றவாளிக்கு தண்டனையும் கிடைக்காது.

திருமணமும் திருட்டும் அவர் வீட்டில் தான் நடக்கிறது. திருமணத்தை அவர் விரும்பிய படி நடத்தி விடுகிறார். ஆனால் திருட்டு பிரச்சனையை எவ்வளவு தான் அவர் விரும்பினாலும் அவர் விரும்பிய படி தீர்ப்பு கிடைப்பதில்லை. இதிலிருந்து சிவில் - கிரிமினலுக்கு மத்தியிலுள்ள வேறுபாட்டை - அது எவ்வளவு அகளமானது என்பதை - விளங்கலாம்.

திருட்டு விபச்சாரம் போன்றவை கிரிமினலை சார்ந்ததாகி விடுவதால் தான் ஆயிரக்கணக்கான திருடர்களும் விபச்சார விரும்பிகளும் தண்டனையிலிருந்து தப்பி சுகமாக திரிகிறார்கள்.

விபச்சாரத்துக்கு - திருட்டுக்கு சிவில் விவகாரம் போன்று அந்தந்த சமூகத்தாரே அவர்கள் சார்ந்த மத நம்பிக்கை அடிப்படையில் தண்டனை வழங்கலாம் என்று புதிய சட்ட மாற்றம் கொண்டுவந்தால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் கணிசமானவர்கள் தண்டனை பெறுவார்கள் என்பதை நம்மால் திடமாக சொல்ல முடியும். இன்றைக்கும் இத்தகைய ஒழுக்க கேட்டில் விழும் பலருக்கு ஊர் பஞ்சாயத்திலோ - ஜமாஅத்திலோ அபராதமோ, ஊர் விலக்கமோ கிடைக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். அதில் பெண்களை விட ஆண்களே அதிகமாக தண்டனைப் பெறுகிறார்கள். ஜமாஅத்திற்குரிய அதிகார வரம்பு உயர்த்தப்படும் போது குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகளும் உயர்த்தப்பட்டு குற்றவாளிகள் குறைவார்கள்.

இத்தகைய மாற்றங்கள் நிகழாத வரை கிரிமினல்களை சிவில் விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி விமர்சிப்பது சத்தற்றுப் போன காழ்ப்புணர்சிக்குரிய விமர்சனமாகவே இருக்கும். இந்த மூன்றாவது விமர்சனத்தின் நிலையும் இதுதான்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks