Saturday, April 2, 2011

மனோதத்துவ ரீதியில் மரியாள் உருவாக்கப்படுதல் - வரலாறு 3

யூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.

அற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம்.

மரியாளை மனோதத்துவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.

மரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.

குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இவை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.
கட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.

மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா...

கணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

இந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.

மரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.

இறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள்! நீ வேண்டுதலை செவியேற்பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)

அவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)

எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும்? என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)
இந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.

ஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார். என் இறைவனே! என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை. எனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.

ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.

இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்! நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.

அது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.

எனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா! என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)

மரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.

முதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
இது எப்படி சாத்தியம்?

குழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.

ஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.

ஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.

இயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.

இறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.

இது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.

குழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.

மரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.

மரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

நர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் கூறப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது.

(முஹம்மதாகிய இறைத்தூதரே!) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக. தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)

(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)

(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தருவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)

எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

பின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)

இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.

மர்யமே! இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)

இறைவா! எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் 'ஆகுக' என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)

மரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)

இனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks