Tuesday, April 19, 2011
அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? - 4
திருக்குர்ஆன் விளக்கம் 3:31
அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? தொடர் - 4
அலு இம்ரான் 3:31 வது வசனத்தின் விளக்கத்தைப் பார்த்து வருகிறோம்.
'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' என்பது அந்த வசனத்தின் பொருள்.இறைவனை நேசிப்பதற்கும் முஹம்மத் என்ற மனிதரைப் பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஆன்மீகம் என்பது இறைவனை நாம் நேசிப்பதால் முழுமைப் பெறுமா.. இறைவன் நம்மை நேசிப்பதால் முழுமைப் பெறுமா... இறைவன் நம்மை நேசிக்க வேண்டுமென்றால் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ஏற்பட வேண்டும்? முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த வசனத்தில் என்ன பாடம் உள்ளது என்பதையெல்லாம் இதற்கு முந்தைய தொடர்களில் விளக்கியுள்ளோம்.
கல்வியறிவு மிக்க முஸ்லிம்கள் இந்த வசனத்தை இன்னும் ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூடுதலாக சில விபரங்களை கூறவிரும்புகிறோம்.
முஹம்மத்(ஸல்) அவர்களும் - வரலாற்றுப் பதிவுகளும்!
முஹம்மத்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இஸ்லாமிய சட்டங்கள் தான் என்று அகில உலக முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் கல்வியறிவு மிக்க முஸ்லிம்கள் பலர் பற்பல ஆட்சேபனைகளை அவ்வப்போது முன்வைத்துக் கொண்டிருந்துள்ளார்கள். இன்றைக்கும் சில ஆட்சேபனைகள் வரத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்பது சிலரது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடு இல்லை.
முஹம்மத் இறைத்தூதரே கிடையாது என்று அன்றைக்கு பலர் ஆட்சேபனைப் பண்ணும் போது அதை மறுத்து அவர் இறைத்தூதர் தான் என்பதற்குரிய அத்தாட்சிகளை இறைவன் மிக பலமாக குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான். எதிர்வாதங்களும் - ஆட்சேபனைகளும் வரும்போதே ஒரு பிரச்சனையின் மீதான கூடுதல் விபரங்கள் - தெளிவுகள் பிறக்கும் என்பதால் இஸ்லாம் அதை தன்னில் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டுள்ளது. யூத - கிறிஸ்துவ - மக்கத்து காபிர்கள் என்ற முத்தரப்பு எதிர்வாதங்களையும் - விமர்சனங்களையும் குர்ஆன் எதிர்கொண்டுள்ளது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். என் வழி தனி வழி என்று எத்தகைய எதிர்வாதங்களையும் கண்டுக் கொள்ளாமல் தன் அறிவுரைகளை செய்துவிட்டு போகக்கூடியதாக குர்ஆன் இறங்கவில்லை. குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் போதே இதை விளங்கலாம். அந்த குர்ஆனை முன்னுதாரணமாகக் கொண்டுதான் நாம் எதிர் கேள்விகளையும் - வாதங்களையும் - விமர்சனங்களையும் சந்திக்கிறோம்.
முஹம்மத் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றால் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பது உலக முஸ்லிம் அறிஞர்களின் முடிவு. எத்தகைய ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உள்ளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் தென்பட்டாலும் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கடந்தக் காலங்களில் ஷியா முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.
(ஷியாக்களைப் பற்றி இங்கு விவாதிப்பது பொருத்தமில்லை என்பதால் அந்த விவாதத்தில் தற்போதைக்கு நுழைய வேண்டாம்)
முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தில் காலாகாலமாக பிரபல்யமாக இருந்து வரும் ஹதீஸ் தொகுப்புகளுக்கும் இருந்த கால இடைவெளிகளையெல்லாம் உலக அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கால இடைவெளிகளை நிரம்பும் மனிதத் தொடர்கள் அறிவுப்பூர்வமானவைதான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். சில அறிஞர்கள் கால இடைவெளியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹதீஸ்களைப் புறக்கணிக்கும் மனநிலையைப் பெற்றுவிட்டார்கள்.
ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் 'அஹ்லுல் குர்ஆன்' என்பவர்கள் 'குர்ஆன் மட்டும் போதும்' என்றக் கொள்கையை மக்களிடம் முன் வைக்கிறார்கள். இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் படித்த - சிந்தனை தெளிவுமிக்க சிலர் கூட தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமானால் எப்படி எதைப் பார்த்துப் பின்பற்றுவது என்றத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும்.
குர்ஆனில் ஏராளமான வசனங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்றக் கட்டளையை முன் வைக்கிறது. அவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்தால் குர்ஆனோடு சேர்த்து 'இது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாடம் தான்' என்று நிரூபணமான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை ஐயமின்றி விளங்கலாம்;.
முதலில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய வசனங்களைப் பார்ப்போம்.
1)மக்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் (அதை) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் நாம் இதை இறக்கி வைத்துள்ளோம். (அல் குர்ஆன் 16:44)
2)(நபியே!) அவர்கள் முரண்பட்டு நிற்பதை அவர்களுக்கு நீர் விளக்குவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் அருளினோம். (அல் குர்ஆன் 16:64)
இந்த இரண்டு வசனங்களில் 'நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும்' என்று இறைவன் கூறுவதின் விளக்கம் என்ன என்பதை ஆராய முற்படும் எவரும் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிகப் படியான விளக்கம் நபி(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்வர்.
குர்ஆனில் பார்த்தவுடன் - படித்தவுடன் சட்டென்று புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும் சற்று சிந்தித்தவுடன் புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும், 'இதற்கு ஏதாவது விளக்கம் இருக்க வேண்டும்' என்று கூடுதலாக ஆய்வு செய்யத் தூண்டும் வசனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும் சஹாபாக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கவுமில்லை. நபி(ஸல்) விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவுமில்லை. ஏனெனில் பெருவாரியான வசனங்கள் பார்த்தவுடன், கேட்டவுடன் விளங்கி விடும் விதத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தன. சில வசனங்கள் சிலருக்கு புரியாத தருணங்களில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டு தெரிந்துள்ளனர். இன்னும் சில வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வலியவே விளக்கமளித்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவைகளையெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை. இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் 'நீர் அவர்களுக்கு விளக்குவதற்காக..' என்று இறைவன் குர்ஆன் விளக்கவுரையாளராக நபி(ஸல்) அவர்களை குறிப்பிடுவதிலிருந்து 'குர்ஆனுக்கு நபி(ஸல்) மேலதிக விளக்கம் கொடுத்துள்ளார்கள் அதை இறைவன் அங்கீகரித்துள்ளான்' என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இறைச் செய்தி வெளிப்படும் விதங்கள்.
3)இறைவன் எந்த ஒரு மனிதரிடத்திலும் பேசுவதாக இருந்தால்,
வஹியின் மூலமாகவோ அல்லது
திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது
ஒரு தூதர் வழியாக அவன் நாடியதை அறிவிப்பதன் மூலமாகவோ தவிர வேறு விதத்தில் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 42:51)
இந்த வசனத்தில் 'தூதர் வழியாக நாடியதை அறிவிப்பதன் மூலமாக..' என்பது எதைக் குறிக்கிறது? பெரிய ஆராய்ச்சியே தேவையில்லை. ஜிப்ரயீல் வழியாக வந்த குர்ஆன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். (வானவர்கள் நேரடியாக நபிமார்களை சந்தித்து உரையாடியுள்ள விதமும் இதில் அடங்கும் இப்ராஹீம்(அலை) லூத்(அலை) ஆகியோரை வானவர்கள் சந்தித்து உரையாடியுள்ளார்கள்).
நபிமார்களுக்கு வானவ தூதர்கள் மூலம் சொல்லப்பட்டு - வெளிப்பட்டு தொகுக்கப்பட்டது வேதங்கள் என்றால் 'வஹியின் மூலமாகவோ..' என்று இறைவன் குறிப்பிடும் அந்த வஹி என்ன?
ஜிப்ரயீல் வழியாக குர்ஆன் வந்து விட்டது. இது இறைவன் பேசக்கூடிய ஒரு விதம். வஹியின் மூலம் பேசுவேன் என்று இறைவன் கூறுகின்றானே அந்த வஹி எது? இது நிச்சயம் நபிமார்களுக்கு மனஉதிப்பை ஏற்படுத்தும் வஹியாகவே இருக்க முடியும். குர்ஆன் மட்டுமில்லாமல் மன உதிப்பின் மூலமாகவும் இறைச் செய்தி வெளிப்படும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக உள்ளது. அப்படியானால் மன உதிப்பின் மூலமாக வந்த அந்த செய்திகள் எங்கே? குர்ஆனோடு நிருத்திக் கொள்ளலாம் என்று கூறுவோர் குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனத்திற்கு என்ன விளக்கமளிப்பார்கள்?. மன உதிப்பின் வழியாக வந்த வஹியின் தொகுப்புகளே ஹதீஸ்களாகும். (தொகுப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் வஹிதானா.. என்று அவசரமாக யாரும் கேள்வி கேட்டுவிட வேண்டாம். எத்தகைய ஹதீஸ்கள் வஹியின் வெளிபாடு என்பதை பின்னர் விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்)
திரைக்கு அப்பாலிருந்து பேசுவேன் என்கிறான் இறைவன். மூஸா(அலை) அவர்களோடு நடந்த உரையாடல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. முஹம்மத்(ஸல்) அவர்களோடும் உரையாடல் நடந்துள்ளது இதை பலமான ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது.
4)எந்த ஒரு தூதரையும் அந்த சமுதாயம் பேசும் மொழியிலேயே அனுப்பினோம் அந்த சமுதாயத்திற்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக. (அல் குர்ஆன் 14:4)
வெறும் வேத வெளிப்பாடு மட்டுமே போதும் என்ற நிலை இருந்தால் விளக்கிக் கூறும் தகுதி தேவையில்லாமல் போயிருக்கும். விளக்கிக் கூறும் தகுதியை இறைவன் பிரத்யேகப் படுத்துவதிலிருந்தே வேதங்களுக்கு நபிமார்கள் மேலதிக விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.
வேதம் என்று ஒன்று வந்து விட்டால் போதும் அதை தேவையான இடங்களில் மேலதிகமாக விளக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றால் எந்த சமுதாயத்திற்கு வேதம் வருகிறதோ அந்த சமுதாயத்தின் மொழியில் வேதம் மட்டும் இருந்தால் போதும். வேதத்தை வெளிபடுத்தும் தூதரருக்கு குறைந்தபட்சம் அந்த மொழி பேச தெரிந்தால் போதும். வேதத்திற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் தூதருக்கு 'விளக்கும் திறன்' அவசியப்பட்டிருக்காது. ஆனால் இந்த வசனத்தில் 'அவர் தம் சமுதாயத்திற்கு விளக்குவதற்காக அவர்களின் மொழியில் அனுப்பினோம்' என்கிறான் இறைவன். வேதத்திற்கு மேலதிக விளக்கம் நபிமார்களால் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது என்பதை இந்த வசனம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனை!
5)என் இறைவா! என் உள்ளத்தை எனக்கு விரிவாக்கு. எனது பணியை எனக்கு எளிதாக்கு. என் நாவில் உள்ள முடுச்சுகளை அவிழ்த்து விடு (அப்போதுதான்) என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். (அல் குர்ஆன் 20:25-28)
ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய வேண்டிய மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் ஏற்கனவே எழுதப்பட்ட தவ்ராத் என்ற ஏட்டை(வேதத்தை) வழங்கி இருந்தான். தவ்ராத்தைப் பெற்ற நிலையில்தான் அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்க செல்கிறார்கள். இந் நிலையில் வேதத்தை மட்டும் சமர்பித்துவிட்டு வருவது அவர்களின் பணி என்றால் திக்குவாயைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். தன் நாவில் உள்ள முடுச்சால் தன்னால் இறைச் செய்திகளை ஒழுங்காக விளக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் இறைவனிடம் முறையிடுகிறார்கள். 'அவர்கள் என் சொல்லை விளங்கிக் கொள்வதற்காக என் நாவின் முடுச்சை அவிழ்த்து விடு' என்ற மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனையும் அதை ஏற்றுக் கொண்டேன் (20:36) என்ற இறைவனின் உத்திரவாதமும் மூஸா(அலை) வேதத்தை மேலதிகமாக விளக்கும் கடமையில் இருந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவில்லையா..?
6)(முஹம்மத்) உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார். உங்களைத் தூய்மைப் படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் (அதன்) ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். (அல் குர்ஆன் 2:151)
இந்த வசனத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதில் நபி(ஸல்) அவர்களின் பணி பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார்.
உங்களைத் தூய்மைப் படுத்துவார்;.
வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்.
அறியாதவற்றையும் கற்றுக் கொடுப்பார்.
உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பிப்பார் என்பதோடு இறைவன் நிருத்தி இருக்கலாம் அதாவது நபிமார்களுக்கு மேலதிக பணி இல்லையென்றால். உங்களைத் தூய்மைப் படுத்துவார் என்கிறான். இது ஆன்மீகத் தூய்மையைக் குறிப்பதாகும். பின்னர் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்கிறான் இறைவன்.
வேதத்தை ஓதிகாண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டும் அவர்களின் பணியாக இல்லாமல் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் அதன் ஞானத்தை விளக்குவதும் கூட அவர்களின் பணியாக இருந்துள்ளது.
இங்கு கற்பித்தல் என்பது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கற்பித்தல்: விளக்குவது.
கற்பித்தல்: வாழ்ந்துக் காட்டவது
வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இறைவன் சொல்வதிலிருந்தே அவைகள் பதிவு செய்யப்பட வேண்டும் - அடுத்தடுத்தத் தலைமுறைக்காக அவை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது விளங்குகிறது.
குர்ஆன் மட்டுமே போதும் என்றால் இறைத்தூதர் கற்பித்த அந்த ஞானம் எங்கே என்பதற்கு பதிலில்லாமல் போய் விடும்.
எனவே இன்றைக்கும் அந்தத் தலைவர் பின்பற்றத்தக்கவராகத் தான் இருக்கிறார் என்பதை குர்ஆன் மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவரைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன குர்ஆனில் அவைகளையும் இனி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
Labels:
அவரை பின்பற்ற வேண்டுமா? - 4
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment