Friday, April 15, 2011
செல்வம் அனைத்தும் ஜக்காத்திற்குள் அடங்குமா..? தொடர் - 6
எவற்றின்மீதெல்லாம் ஜக்காத் கடமையாகும்?
- தேவைக்கு போக மீதமுள்ளவற்றிர்க்கே ஜக்காத் தொடர் - 2
- விளைச்சலுக்கான நிபந்தனைகள் தொடர் - 3
- கடனாளி - கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள் தொடர் - 4
செல்வம் அனைத்தும் ஜக்காத்திற்குள் அடங்குமா..? தொடர் - 6
ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளை இதுவரை விரிவாகக் கண்டோம். இனி நமக்கு சொந்தமான - சொந்தமாகக் கூடிய - எவற்றின் மீதெல்லாம் ஜகாத் கடமையாகும் என்பதை விரிவாக அறிந்துக் கொள்வோம்.
இந்தத் தலைப்பை நாம் விரிவாக அனுகுவதற்கு முதலாவது அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள குர்ஆன் வசனத்தை ஆழமாக மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும்.
'நபியே! இவர்களுடைய 'அம்வால்'களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக. நல்வழியில் அவர்களை முன்னேறச் செய்வீராக! அவர்களின் நலனுக்காக பிரார்த்தனையும் செய்வீராக! உம்முடைய பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு சாந்தியளிக்கும் (அல் குர்ஆன் 9:103)
இறைவன் தன் அடியார்களின் மன்னிப்பை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், அவர்கள் செய்யும் தர்மங்களைப் பெற்றுக் கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா..! (அல் குர்ஆன் 9:104)
அவர்களின் 'அம்வால்'களில் வாய் திறந்து கேட்போருக்கும் வசதியில்லாதோருக்கும் உரிமையுண்டு (அல் குர்ஆன் 51:19)
இந்த வசனங்களில் 'அம்வால்' என்ற பதம் வந்துள்ளது. 'மால்' என்ற பதத்தின் பன்மையே அம்மால் என்ற பதமாகும். இந்தப் பதமும் இதன் துணைப் பதங்களுக்கும் குர்ஆனில் ஏறத்தாழ 76 இடங்களில் வந்துள்ளன.
எதன் மீதெல்லாம் ஜகாத் கடமையாகும் என்பதை விளங்குவதற்கு 'அம்வால்' என்றால் என்ன? என்பதை விளங்குவது அவசியமாகின்றது.
இந்த பதத்திற்கு தமிழில் 'செல்வம்' என்று அழகான வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும் செல்வம் என்றால் என்ன என்று கூடுதலாக விளங்க வேண்டியுள்ளது.
ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனது வாழ்வாதார தேவைக்காக கொடுக்கப்படும் அனைத்தும் செல்வம் தான். ஆனாலும் ஜகாத் கடமையாவதற்குறிய செல்வமாக இவை அனைத்தும் கருதப்படாது. ஜகாத் கடமையாக வேண்டுமானால் அந்த செல்வத்திற்கு சில நிபந்தனைகளும் அளவு கோல்களும் இருக்கின்றன.
செல்வங்களும் அதன் தன்மைகளும்!
அசையும் சொத்துக்கள்.
சொந்தமான கார், பஸ், (ரயில் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால்) கப்பல், விமானம், மற்றும் ஆடு - மாடு கோழிப் பண்ணைகள்.
அசையா சொத்துக்கள்.
சொந்த வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஹோட்டல்கள், சொந்தக் கடைகள், வாடகைக் கட்டிடங்கள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், சுரங்கங்கள்.
மற்றும்,
தங்கம், வெள்ளி, கரண்சி, விலைச்சல்கள், புதையல்கள் உட்பட அனைத்து உலோகப் பொருட்களும்!
இவை அனைத்தும் 'அம்வால்' (செல்வங்)களாகும். 'அம்வால்களிலிருந்து ஜகாத்தை எடுப்பீராக..' என்ற மேற்கண்ட வசன அடிப்படையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள (குறிப்பிடாமல் விடுபட்டுப்போன) அனைத்திலிருந்தும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று விளங்க வழி இருந்தாலும் இவற்றில் விதிவிலக்கு ஏதும் உண்டா... என்பதை காண்பது அவசியமாகும். ஏனெனில் இந்த வசனத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஜகாத்திலிருந்து ஏழைப் பணக்காரர் என்று ஒருவருமே விதிவிலக்குப் பெற மாட்டார். இன்னும் சொல்லப் போனால் ஏழையோ பணக்காரரோ இவர்கள் அனைவருமே கூடுதலாகவோ - குறைவாகவோ 'அம்வாலுக்கு' சொந்தக் காரரராகிறார்கள். தினக் கூலிக் கூட ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அது அவருக்கு வழங்கப்பட்ட அம்வாலாகும். அவர் அம்வாலுக்கு சொந்தக்காரராகிறார். மேற்கண்ட வசன அடிப்படையில் அவரும் ரூ 50க்கு ஜகாத் வழங்க வேண்டும். அதாவது மேற்கண்ட வசனத்தை மட்டுமே விளங்கி ஜகாத் கொடுப்பதாக இருந்தால் இந்த முடிவுக்குத் தான் வர முடியும். இந்த முடிவுக்கு யாராவது வந்தால் பிறகு அனைவர் மீதும் ஜகாத் கடமையாவதால் ஜகாத் பெறுவதற்கு உலகில் ஆளில்லாமல் போய் விடும்.
ஆனால்,
இறைவன் ஜகாத் பெற தகுதியானவர்களை பட்டியல் போட்டு காட்டுகிறான். (அவர்கள் யார் என்பதை வரும் தொடர்களில் பார்க்கவிருக்கிறோம்) ஜகாத் பெறத் தகுதியானவர்கள் என்று ஒரு குழு இருக்கும் போதே அவர்களுக்கு எதிர்புறமாக ஜகாத் கொடுக்க தகுதியானவர்கள் என்று ஒரு சாரார் இருந்தாக வேண்டும். எனவே 'அம்வால்' என்பதை பொதுவாக விளங்கி அனைவர் மீதும் ஜகாத் கடமை என்ற முடிவுக்கு வந்து விட முடியாது.
9:103 வது வசனத்தில் 'அவர்களின் செல்வங்களிலிருந்து ஜகாத்தை எடுப்பீராக..' என்ற உத்திரவு வந்துள்ளது. 'ஜகாத்தை எடுப்பீராக' இந்த அதிகாரம் ஆட்சியாளருக்குத் தான் உண்டு. ஜகாத்தை எடுக்கும் தகுதிப் பெற்ற ஆட்சியாளர்கள் எந்த 'அம்வால்'களிலிருந்து ஜகாத்தைப் பெற வேண்டும் என்ற அறிவைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 'அம்வால்' என்பதை பொதுவாக எந்த ஆட்சியாளராவது விளங்கினால் - அந்த அடிப்படையில் ஜகாத்தை செயல்படுத்த முயன்றால் - அவர் குடிமக்கள் மீது அநீதி இழைத்து விடுவார்.
எனவே இறைவன் அம்வால்களில் விதிவிலக்கு அளித்துள்ளானா.. என்பதை பார்த்து அது இல்லாத மற்றவற்றின் மீதே ஜகாத் கடமையை நிர்ணயிக்க வேண்டும். இந்த பொதுவான கருத்தை மனதில் கொண்டு நாம் குர்ஆன் சுன்னாவை அலசினால் விதிவிலக்கும், ஜகாத் நிர்ணயமும், காலஅளவும் வேறுபட்டிருப்பதை கண்டுக் கொள்ளலாம்.
செல்வத்தில் ஜகாத்திலிருந்து விடுபடுபவை.
(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)
இவ்வளவு இருந்தால் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லாமல் 'தேவைக்கு போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்' என்கிறான் இறைவன்.
'மீதமுள்ளதை' என்று இறைவன் கூறியதிலிருந்து ஒருவருடைய அம்வால் (செல்வம்) அவருடைய அவசியத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளங்கலாம்.
தேவைக்கு போக மீதமுள்ளதை என்றால் தேவையின் அளவு என்ன?
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரிது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும் போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே.
வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தொலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)
மனிதர்களுக்கு மனிதர்கள் அவர்கள் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேவைகள் வித்தியாசப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் பிரயாணம் செய்யும் போது அரசு வாகனத்தையோ (பஸ் - ரயில் போன்றவை) தனியார் வாகனத்தையோ பிடித்து சென்று விடுகிறார்கள். தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று ஒரு சொந்த வாகனம் வேண்டும் என்ற மனநிலையோ அதற்கான முயற்சியோ அவர்களிடம் இருப்பதில்லை. (விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வாகனம் வாங்குவதற்குரி பொருளாதாரம் தன்னிடம் இருப்பினும் அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் (அரபு பிரதேசங்கள்) மற்றும் மேலை நாடுகளில் இந்நிலையை உங்களால் பார்க்க முடியாது. அங்கெல்லாம் குறைந்தது வீட்டுக்கு ஒரு வாகனமாவது வேண்டும் என்பது சராசரியான தேவைக்குள் வந்து விட்டது. குறைந்த வருவாயைப் பெறுபவர்கள் கூட தவணை முறையில் பணத்தை செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
பனிபடர்ந்த - ஐஸ் உரைந்த நிலையில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை வசதிக்கான தேவை என்பது மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. ஆடம்பரமான வீடுகள் ஆடம்பரமான வாகனங்கள் போன்றவற்றையெல்லாம் அந்த மக்கள் நாடுவதில்லை. மனம் விரும்பினாலும் சூழ்நிலை அவற்றையெல்லாம் அனுபவிக்க தடையாக இருக்கின்றன.
அதே போன்று கப்பல்களில் குடி இருக்கும் மக்களை எடுத்துக் கொள்வோம். (வாடகை கொடுத்து காலம் முழுவதும் கப்பலிலேயே தங்கி விடலாம் என்ற வசதிகள் இருக்கின்றன) இந்த மக்களின் தேவைகளும் குறைவு.
மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கான தேவைகளில் பெருத்த வேறுபாடு இருப்பதை இவற்றின் மூலம் விளங்கலாம்.
முஸ்லிமாக இருக்கும் நிலையில் நாகரீக வளர்ச்சியற்றுப் போன பகுதியில் வாழும் செல்வந்தர் கொடுக்க கடமைப்பட்ட ஜகாத் தொகையை விட அதேயளவு செல்வத்தைப் பெற்று நாகரீகம் வளர்ந்த இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அவரை விட குறைந்த அளவே ஜகாத் கொடுக்க வேண்டிவரும். காரணம் இவர்களுக்கு மத்தியில் உள்ள தேவைகளின் வித்தியாசங்களே!
எனவே முஸ்லிம்கள் தங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ளதில் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்தால் போதும்.
வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போடுகிறார் வீடு கட்டும் அளவு நிலமாக அது இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு அதில் வீடு கட்டப்படா விட்டாலும் அந்த நிலத்திற்கு ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது ஏனெனில் அது அத்தியாவசிய தேவைக்குறியதாகும். வீடு கட்டுவதற்கு இந்த அளவுதான் நிலம் இருக்க வேண்டும் என்ற விதிகள் எதுவுமில்லை. 60-40 என்றோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ கூட ஒருவர் வீடு கட்ட நிலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது வீடுகட்டும் அளவுக்குள்ளதாக இருக்க வேண்டும். 5 செண்ட் நிலத்தில் வீடு கட்டினால் போதும் என்ற நிலையை ஒருவர் உணர்ந்தால் அது மட்டும் தான் ஜகாதிலிருந்து விலக்கு பெறும்.
மாதம் ஒன்றிர்க்கு ரூ10-000 சம்பாதிக்கும் ஒருவர் வாடகை வீட்டில் இருக்கிறார். சொந்த வீடு கட்டுவதற்காக தன் சம்பளத்திலிருந்து ரூ-5000 ஒதுக்கி சேர்த்து வருகிறார். அது ஜகாத்திற்குறிய அளவை கடந்து செல்கின்றது - அதாவது லட்சங்களை கடக்கின்றது என்றால் இப்போதும் இவர் மீது ஜகாத் கடமையாகாது. காரணம் இவர் தன் தேவைக்குப் போக மீதமுள்ளதை சேமித்து வரவில்லை. தன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே சேமித்து வருகிறார்.
இறைவனை ஏமாற்ற முடியாது என்பதை முஸ்லிம்கள் உணர்வதும் - அறிவதும் கடமையாகும். இந்த அறிவைப் பெற்ற ஒரு முஸ்லிம் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தையும் காட்டி இது என் தேவைக்குறியதுதான் என்று சொல்ல மாட்டான். தேவைகளின் அளவை நிர்ணயித்துக் கொண்டு மீதமுள்ளதற்கு ஜகத்தை வழங்கியாக வேண்டும்.
இந்த சொந்தத் தேவை என்பது விளைச்சலில் பொருந்தாது அதாவது மிக சிறிய அளவில் நிலம் வைத்துள்ள ஒருவர் தன் குடும்பத்திற்காக அதில் பயிரிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 10 - 15 மூட்டை நெல்லை அவர் அறுவடை செய்கிறார் என்றால் 'இது ஒரு ஆண்டுக்கு என் குடும்பத்திற்காக உள்ளது எனவே இதற்கு ஜகாத் கொடுக்க முடியாது' என்று அவரால் சொல்ல முடியாது. ஏனெனில் விலைச்சல்களைப் பொருத்தவை அதன் அளவை விட 'அறுவடைநாளை' மட்டுமே இஸ்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
படர்ந்துக் கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்களையும் பேரித்த மரங்களையும் மாறுபட்ட உணவு தானியங்களையும் மாதுளை ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அதற்குறிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 6:141)
'அறுவடை செய்யும் நாளில் அவற்றிர்க்குறியதை வழங்கி விடுங்கள்' என்று இறைவன் கூறுவதால் விளைச்சல்களைப் பொருத்தவரை 'தன் தேவைக்குப் போக மீதமுள்ளது' என்பது பொருந்தாது.
ஒருவர் தன் வீட்டு தோட்டத்தில் சிறிய அளவு குடும்பத்திற்காக தக்காளி - கத்தரிகாய் - பச்சை மிளகாய் போன்றதை பயிர் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இவர் அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா... என்றால் 'இல்லை' என்று கூறிவிடலாம். எந்த அளவு விளைச்சல் இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவு படுத்தியுள்ளார்கள்.
ஐந்து 'வஸக்'கை விட குறைவான தானியத்திற்கு (விளைச்சலுக்கு) ஜகாத் இல்லை என்பது நபிமொழி. அபூஸயீத் - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவிக்கிறார்கள். (புகாரி - முஸ்லிம் - திர்மிதி 568)
இந்த செய்தியில் 'வஸக்' என்ற அளவு வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எந்த அளவைக் கொண்டது என்பதற்கான அடிக்குறிப்பையும் திர்மிதி அவர்கள் கொடுக்கிறார்கள்.
ஒரு 'வஸக்' என்பது அறுபது 'ஸாஃ'க்களைக் கொண்டதாகும். நபி(ஸல்) பயன்படுத்திய ஸாஃ என்பது ஐந்தே முக்கால் ராத்தல்களைக் கொண்டாகும் என்ற விபரத்தை கொடுக்கிறார். நம் பகுதிகளில் இந்த அளவைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். எனவே நாம் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டுமானால் ஒரு ஸாஃ என்பது நமது இரண்டுக் கைகளாளும் நான்கு முறை அள்ளி போடும் அளவைக் கொண்டதாகும்.ஏறத்தாழ ஒன்றரை லிட்டர் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு வஸக் என்பது அறுபது ஸாஃக்கள் என்றால் தொண்ணூரு லிட்டர் வருகிறது. ஐந்து வஸக் என்றால் 450 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாகும். கிலோவில் சொல்வதாக இருந்தால் 400கிலோ என்று கொள்ளலாம்.
400 கிலோ எடைக் கொண்ட தானியங்களுக்கு குறைவாக விளைச்சல் இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று இந்த செய்தியிலிருந்து விளங்குகிறது. அதை கடக்கும் போது அவற்றின் மீது ஜகாத் கடமையாகும். (தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்)
Labels:
ஜக்காத் சட்டங்கள் - 6
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment