Friday, April 15, 2011

ஜக்காத் சொத்திற்கா அல்லது வருமானத்திற்கா..? தொடர்-7

எவற்றின்மீதெல்லாம் ஜக்காத் கடமையாகும்?
ஜக்காத் சொத்திற்கா அல்லது வருமானத்திற்கா..? தொடர்-7

எவற்றின் மீதெல்லாம் ஜகாத் கடமை என்பதில் சொந்தத் தேவைக்குப் போக மீதமுள்ளதில் ஜகாத் கடமை என்பதை அறிந்தோம்;. சொந்தத் தேவை என்றால் என்ன என்பதையும் முந்தைய தொடரில் விளக்கியுள்ளோம். இப்போது 'மீதமுள்ளவை' என்றால் என்னென்ன..? என்பது பற்றி வரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும். 'மீதமுள்ளவை என்பவற்றின் மீது ஜகாத் கடமையாகும் என்பதால் அவற்றை அறிவதில் கூடுதல் கவனம் வேண்டும்.

மீதமுள்ளவைகள்.

வருமானம் வரும் வியாபாரத் தளங்களும், பொருள்களும்.

ஒரு முஸ்லிம் ஹலாலான வழியில் தமது வருவாயை எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக் கொள்ளலாம் இதில் இஸ்லாம் எந்தக் கட்டுப்பாடும் போடவில்லை. அந்த வகையில் நபி(ஸல்) காலத்தில் மக்கள் பலதரப்பட்ட வியாபாரத்தில் - பண்ணை பராமரிப்பில் ஈடுபட்டு பொருள் திரட்டியுள்ளார்கள். ஆனாலும் இன்றைய மற்றும் சென்ற நூற்றாண்டின் சந்தை மற்றும் தொழிற்புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவை மிக மிக சொற்பமே.! அதிகப்பட்சமாக அன்றைய காலத்தில் ஒட்டகப் பண்ணைகள் - ஆட்டுப் பண்ணைகள் - அபூர்வமாக மாட்டுப் பண்ணைகள் இருந்துள்ளன. ஜவுளி வியாபாரம் என்பது மிக சொற்ப அளவில் நடந்து வந்தது. அவை வசதி வாய்ப்பற்ற - வளர்ச்சியடையா காலப் பொழுதாகும். ஆனால் இன்றைக்கு நிலைமை எல்லைகளைக் கடந்துப் போய் விட்டது.
இன்றைக்குரிய வியாபாரம் மற்றும் தொழில் அனைத்தும் சர்வதேச எல்லைக்குட்பட்டே நடக்கின்றன. அந்த வகையில் பொருள் திரட்ட முனையும் ஒவ்வொரு முஸ்லிமும் சர்வதேச அங்கத்தினராகின்றனர். பரந்து விரிந்த - தொழில் மயமாக்கப்பட்ட உலகில் ஒரு முஸ்லிம் கால் பதிக்கும் போது அவன் தனது வளர்ச்சியில் மார்க்க மரபுகளை அவசியம் பின் பற்றியாக வேண்டும். பெரும் தொழில் வளம் மிக்க முஸ்லிம்கள் தங்கள் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் அளவிற்கு அந்தத் தொழிலின் மீதான இஸ்லாமிய வரியை(ஜகாத்தை) ப் பற்றி கண்டுக் கொள்ளாமலிருக்க முடியாது.

விவசாயம் பற்றி தனிச் சட்டம் உள்ளதால் விவசாயமல்லாத அனைத்துத் தொழில் மற்றும் வியாபாரத் தளங்களும் அதன் முதலீடுகளும் 'மீதமுள்ளவை'களில் வந்து விடும்.

தொழில் மற்றும் வியாபாரத் தளங்கள் ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்க முடியாது என்றாலும் பெரும் தொழில் - வர்த்தக வளங்களை ஓரளவு இங்கு சுட்டிக் காட்டலாம்.

கட்டிடங்கள்.

கடைகள் - ஹோட்டல்கள் - லாட்ஜ் - வீடுகள் என்று வருமானத்திற்கு வழி வகுக்கும் எந்த ஒரு கட்டிடமும் அதன் வருமானமும் உரிமையாளருக்கு 'மேலதிகமானவை' தான். அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுத்தாக வேண்டும்.

வாகனங்கள்.

லாரி - பஸ் - வேன் - டிராக்டர் - பெரும் டிரக்குகள் - கட்டர் பிள்ளர் போன்ற (மலைகளை உடைக்கும் பணிகளுக்கப் பயன்படுபவை) பெரும் இயந்திர வாகனங்கள். மற்றும் கார், இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் பைக் - சைக்கில் போன்றவை) தண்ணீரில் இயங்கும் கப்பல்கள் உட்பட விசைப் படகுகள் போன்ற அனைத்தும் அவை விற்பனைக்ககாக இருந்தாலும் சரி வாடகைக்கு செல்பவையாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் 'மேலதிகமானவை' என்பதில் வந்து விடும். அவற்றிற்கும் ஜக்காத் கொடுத்தாக வேண்டும்.

இயந்திரங்கள்.

அனைத்துவகை உதிரிப் பாகங்கள் உட்பட முழுமையான இயந்திர வகைகள் அனைத்தும் இதில் அடங்கி விடும். இவைகளும் அதன் உரிமையாளர்களைப் பொருத்தவரை மேலதிகமானவைகளே. இவைகளும் ஜகாத் கணக்கிற்குள் வந்து விடும்.

நிலங்கள்.

பயிரிடப்படாத விளைச்சல் நிலமாகட்டும், விற்பனைக்குரிய நிலங்களாகட்டும், சேமிப்பின் நோக்கத்தில் வாங்கிப் போடப்பட்டுள்ள நிலங்களாகட்டும் (தெளிவாக சொல்ல வேண்டுமானால் விளைச்சலுக்காக இல்லாத அனைத்து நிலங்களும்) இவை அனைத்தும் 'மேலதிகமானவை'களில் அடங்கி விடும்.

ஜவுளி.

உலகில் தட்டுப்பாடு இல்லாமல் நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் தொழில்களில் ஒன்று ஜவுளி. மேலதிக வருமானத்திற்காக பெருவாரியான செல்வந்தர்கள் இதில் முதலீடு செய்கிறார்கள். எனவே அவைகளும் ஜகாத் விதிக்குள் வரும்.

நகைகள்.

தங்கம், இவை நகை வடிவிலோ இதர எந்த வடிவிலிருந்தாலும் அதன் அளவை கடந்து விட்டால் (88 கிராம் என்பது அதற்குரிய அளவு) அவையும் மேலதிக சொத்தாக கருதப்பட்டு ஜகாத் விதியின் நிபந்தனைக்குள் அடங்கி விடும். நகைக் கடைக்காரர்கள் - ஆர்டர் பேரில் நகை செய்யும் தரகர்கள் இவர்கள் ஆர்டர் பேரிலுள்ள நகைகளை கழித்து விட்டு இதர சொந்த நகைகளை கணக்கு பார்த்தாக வேண்டும்.

வங்கி மற்றும் ஷேர்.

வங்கியில் தேவைக்குப் போக சேமிக்கப்படும் - பாதுகாக்கப்படும் தொகை அனைத்துமே 'மேலதிகமானவை' லிஸ்டில் இடம் பெற்று விடும். ஷேர் மார்க்கட்டில் முதலிடு செய்துள்ளத் தொகைகள் - பங்கு பத்திரங்கள் இதர வழிகளில் வந்து சேரும் பெரும் அன்பளிப்புகள் இவைகளும் 'மேலதிகமானவை'களாகி விடும்.

கோழிப் பண்ணைகள் - இரால் பண்ணைகள்.

ஆடு, மாடு, ஓட்டகப் பண்ணைகள் அதன் எண்ணிக்கைகள், அவற்றிற்கு கொடுக்க வேண்டிய ஜகாத் குறித்து தெளிவான ஆதாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி - தனியாக இருப்பதால் (அவற்றைப் பின்னர் விளக்குவோம்) அதுவல்லாத இதர அனைத்துப் பண்ணைகளும் பொதுவாக 'மேலதிகமானவை' என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு விடும். ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றின் மதிப்புக்கு ஜகாத் வழங்காமல் அதன் எண்ணிக்கையைப் பொருத்தே ஜகாத் தீர்மானிக்கப்படும். ஆனால் கோழி - இரால் போன்ற பண்ணைகளில் அவற்றின் எண்ணிக்கைகளைப் பொருத்து ஜகாத் தீர்மானிக்கப்படாது. அவற்றின் மொத்த மதிப்பே கருத்தில் எடுக்கப்படும். அந்த வகையில் 'மேலதிகமான' மொத்த சொத்துக்களாகவே இவை கருதப்பட வேண்டும்.

தேவைக்குப் போக மீதமுள்ளதை செலவிட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டதிலிருந்து மேலதிகமாக உள்ள இவை அனைத்தின் மீதும் ஜகாத் கடமையாகி விடும் என்பதை நாம் விளங்கலாம்.

வாடகை - வருமனாத்திற்கு ஜகாத்தா.. சொத்தின் மொத்த மதிப்பிற்கு ஜகாத்தா..?

கட்டிடங்களை வாடகைக்கு விட்டு பொருளீட்டும் ஒருவர் அதே போன்று வியாபாரத்தில் முதலீடு செய்து லாபமீட்டும் ஒருவர் இவர்கள் தங்கள் வருமானத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது வருமானம் உட்பட மொத்த சொத்தையும் மதிப்பிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா.. என்பதில் அறிஞர்கள் உலகில் கருத்த வேறுபாடு நிலவுகின்றது.

வாடகையாக வரும் பணத்திற்கும் வியாபாரத்தில் வரும் வருமானத்திற்கும் மட்டும் அவற்றை கணக்கிட்டு ஜகாத் கொடுத்தால் போதும் என்பது சிலரது வாதம். இதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம்:

விளைச்சலைப் பற்றிக் குறிப்பிடும் ஆதாரங்கள் விளைச்சலுக்குரிய ஜகாத்தை கொடுக்குமாறு தெளிவாகக் கூறுகின்றன. அந்த ஆதாரங்கள் விளைச்சல் ஏற்பட்ட நிலங்கள் பற்றியோ அதன் மதிப்புப் பற்றியோ பேசவில்லை. விளைச்சலுக்கு மட்டுமே ஜகாத் என்பதால் அதை தழுவி வருமானத்திற்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும்.

மழையினாலும், ஊற்றுகள் - நிலத்தடி நீர் ஆகியவைகளாலும் விளைபவற்றில் 10 சதவீதமும், தண்ணீர் பாய்ச்சி விளைக்கப்படுபவற்றில் 5 சதவீதமும் ஜகாத் கடமையாகும் என்று நபி(ஸல்) நடைமுறைப் படுத்தினார்கள். (இப்னு உமர் - அபூஹூரைரா போன்றோர் திர்மிதி 578-579 மற்றும் புகாரி - நஸயி அபூதாவூத்)

(5 வஸக் அதாவது ஏறத்தாழ 400 கிலோ எடை அளவுக்குக் குறைவான விளைச்சலுக்கு ஜகாத் இல்லை என்பதற்குரிய ஆதாரத்தை சென்ற தொடரில் குறிப்பிட்டுள்ளோம்)

விளைச்சலுக்கே ஜகாத் விளை நிலங்களுக்கல்ல என்ற இந்த ஹதீஸை காரணம் காட்டி வருமானத்திற்கு மட்டும் ஜகாத் என்ற வாதத்தை முன் வைப்பதை நம்மால் சரிகாண முடியவில்லை.

விளைச்சல், விளை நிலங்களுக்கும் வாடகை மற்றும் தொழில் வருமனாங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டிலிருந்தும் வரும் வருமானத்தை மட்டும் கருத்தில் எடுப்பது முறையல்ல. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. (அல் குர்ஆன் 2:267)

இங்கு வருமானத்தையும் - விளைச்சலையும் இறைவன் பிரித்துச் சொல்கிறான். இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த வசனம் அமைந்துள்ளது.

விளைச்சலைப் பொருத்தவரை அதன் அறுவடை நாளில் - அது பலன் தரும் நாளில் அதன் ஜகாத்தை வழங்கி விட வேண்டும். அது ஆண்டுக்கு ஒரு முறையோ - இருமுறையோ - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறையோக் கூட இருக்கலாம். இதர சொத்துக்கு இந்த விதி இல்லை ஆண்டுக் கொருமுறை என்ற சட்டம் உள்ளது.

விளை நிலங்களில் விளைச்சலுக்குரிய காலகட்டங்களில் மட்டும் தான் பயிரிட முடியும். வாடகை இதர தொழில் வருமானங்கள் அப்படியல்ல. அவை தொடர்ச்சியாக பண புழக்கத்தையும் வருமானத்தையும் ஈட்டித் தரும் நிலையில் உள்ளதாகும்.

விளைச்சல்களைப் பொருத்தவரை அதன் லாப நஷ்டங்களை உரிமையாளர்களால் முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது. அறுவடையின் போதே அவை பற்றிய அறிவு சரியாக கிடைக்கும். ஆனால் வாடகை மற்றும் வியாபார பொருளின் மீதான லாபங்கள் அப்படிப்பட்டதல்ல. அதன் லாபத்தை முன் கூட்டியே அதன் உரிமையாளரால் தீர்மானிக்க முடியும். வீட்டுக்குரிய அடைமானம் இவ்வளவு, அதன் வாடகை இவ்வளவு என்றும் பொருளுக்கு இத்துனை சதவிகிதம் லாபம் வைத்து விற்க வேண்டும் என்றும் அதன் உரிமையாளர்களால் தீர்மானித்த விட - கணித்து விட முடியும்.

இப்படி ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும் போது 'இரண்டும் ஒன்றுதான்' என்று முடிவெடுப்பதில் எவ்வித நியாயமுமில்லை. எனவே விளைச்சல் - அறுவடையல்லாத மற்ற எல்லாவற்றிற்கும் வருமானம் மற்றும் சொத்தின் மொத்த மதிப்புக்கும் சேர்த்துதான் ஜகாத் கணக்கிடப் பட வேண்டும்.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து (பிறருக்குரிய)தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக. (அல் குர்ஆன் 9:103)

இந்த வசனத்தில் செல்வத்தி(அம்வா)லிலிருந்து ஜகாத்தை எடுக்க வேண்டும் என்று இறைவன் கூறுகிறான். அம்வால் என்றால் என்ன என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். ஒருவனுக்கு வழங்கப்படும் அனைத்தும் அவனுக்குரிய செல்வம் தான். செல்வத்திலிருந்து ஜகாத்தை எடுக்க வேண்டும் என்று கூறுவதிலிருந்து முதலீடு - வருமானம் அனைத்தும் ஜகாத்திற்கு உட்பட்டு விடும்.

இந்த வசனத்தில் செல்வம் (அம்வால்) என்று குறிப்பிடும் இறைவன் விளைச்சலைப் பற்றிக் குறிப்பிடும் போது 'விளைச்சலுக்குக் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு சொல்லுவதால் விளைச்சலுக்குரிய நிலங்கள் ஜகாத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது என்பதை விளங்கலாம். விளைச்சல் - விளைச்சலுக்குரிய நிலங்கள் தவிர்த்து மீதி எல்லாமும் ஜகாத் வழங்க வேண்டிய அம்வால் என்ற பதத்தில் அடங்கி விடுகிறது.

'அவர்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தை எடுப்பீராக' என்ற சட்டம் பிறக்கப்பிக்கப்பட்டப் பிறகும் கூட நபி(ஸல்) விளை நிலங்களுக்குரிய ஜகாத் வழங்க வேண்டும் என்று சொன்னதாகவோ - அவற்றிற்கு ஜகாத் வசூல் செய்ததாகவோ நாமறிந்தவரை எந்த ஆதாரமும் இல்லை.

தேவையும் அதற்கெதிரான கருத்தோட்டமும்!

பில்லியன்கணக்காக பணம் முதலீடு செய்யப்படும் தொழில் மற்றும் வியாபார தளங்கள் இவைகளில் வருமானத்திற்கு மட்டும் ஜகாத் என்றால் நிலமை என்னவாகும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கட்டிடங்களை எடுத்துக் கொள்வோம்.

வாடகை - அடைமானம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பில்லியன்கணக்கில் கட்டிடங்களில் முதலீடு செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். இவற்றில் வாடகை வருமானத்திற்கு மட்டும் தான் ஜகாத் என்றால் சந்தேகமின்றி லட்சக்கணக்கான - கோடிக்கணக்கான ரூபாய்கள் ஜகாத்திலிருந்து விடுபட்டு முடக்கப்பட்டு விடும்.

50லட்சம் பெருமானமுள்ள திருமண மண்டபத்தை ஒருவர் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 'உங்கள் கட்டிடத்திற்கு ஜகாத் தேவையில்லை அதில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான வாடகைகளைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஜகாத் கொடுத்தால் போதும்' என்ற தீர்ப்பை யாராவது முன் வைத்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

சீசன்களில் தொடராக அதிக வருமானத்தைப் பெரும் அவர் சீசன்களுக்கு பிறகு பல மாதங்கள் வருமானம் ஏதுமின்றி அல்லது குறைந்த வருமானத்தை பெரும் நிலையை அடைவார். அந்த மண்டபத்திலிருந்து சராசரியாக அவர் ஆண்டொன்றிற்கு 5 லட்சம் நிகர லாபத்தைப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவரது சொத்தின் மதிப்பு 55 லட்சங்களாகின்றன. இந் நிலையில் ஐந்து லட்சங்களுக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும் என்று அவர் முடிவெடுத்தால் அவரிடம் அம்வாலாக இருக்கும் ஐம்பது லட்சத்திலிருந்து உரியவர்களுக்கு போய் சேர வேண்டிய தொகை வெளியேறாமல் போய் விடும். ஜகாத் எந்த நோக்கத்திற்காக நிருவப்பட்டதோ அது பாழ்பட்டுப் போகும்.

அதே 50 லட்சத் தொகையை முடக்கி ஒருவர் காம்ப்லக்ஸ் கட்டுகிறார். எதிர்பார்த்த அளவு வாடகைக்கு ஆள் கிடைக்காததால் பூட்டி வைத்துள்ளார் என்றால் அதிலிருந்து வருமானமே இல்லை என்பதால் அதற்குரிய ஜகாத்தும் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.

வாடகை வருமானத்திற்கு மட்டும் ஜகாத் போதும் என்பது ஜகாத்தின் பால் தேவையுள்ளவர்களை மேலும் தேவையின் பக்கம் தள்ளி வறுமையின் பிடிக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நிலை இயல்பாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

வருமானமற்ற நிலையில் சந்ததிகளுக்காக சொத்த சேர்க்கும் எண்ணத்தில் செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் பணங்களை முடக்கி ஆங்காங்கே நிலங்களை வாங்கிப் போட்டிருப்பார்கள். அதிலிருந்து எந்த வருமானமும் வராத நிலையில் அவற்றை பராமரிக்கவோ - பாதுகாக்கவோ அவர்கள் செலவு செய்யும் நிலையில் இருப்பார்கள். வருமானம் - வாடகை இருந்தால் மட்டும் ஜகாத் எனில் பல கோடிகள் பத்திரமாக ஜகாத்திலிருந்து தப்பிக் கொள்ளும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இரண்டு நோக்கங்களை கருத்தில் கொண்டே நாம் முடிவெடுக்க வேண்டும்.

1 - ஜகாத் கடமையாக்கப்பட்டதற்கான நோக்கம்.

எட்டு வகையினருக்கு ஜகாத் பிரிக்கப்பட வேண்டும் என்கிறது குர்ஆன். அவர்களில் அதிகப்படியாக நம்மை சுற்றி வாழ்பவர்கள் மூன்று வகையினர். பரம ஏழைகள். ஏழைகள். கடன்காரர்கள். (ஜகாத் பெறுபவர்கள் பற்றி பின்னர் விரிவான விளக்கம் வரும்) இவர்களின் தேவைகள் பூர்த்தியாவதற்கு ஜகாத் தொகையையும் கடந்து இன்னும் கூடுதலாக பொருளாதாரம் தேவைப்படும் நிலை இருக்கும் போது முறையாக வெளியேற வேண்டிய ஜகாத் தொகையையும் குறைப்பது (அதாவது லாபத்திற்கு மட்டும் ஜகாத் என்பது) ஜகாத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து விடும்.

2 - ஜகாத் பற்றி கூறும் இறைவன் லாபம் பற்றியெல்லாம் பேசாமல் 'அம்வால் - செல்வ'த்திலிருந்து ஜகாத் எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது.

இந்த இரண்டையும் சிந்தித்தால் 'மேலதிகமாக உள்ள' செல்வம் அனைத்தின் மீதும் ஜகாத் கடமையாகும் அவற்றிற்கான ஜகாத்தை பிரித்தெடுத்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks