Thursday, April 21, 2011

இறைவனின் அடியாட்கள்

எதுப் பெண்ணுரிமை! என்ற நமது புத்தகத்திற்கு மறுப்பாக 'இறைவனின் அடியாட்கள்' என்ற தலைப்பில் ம.க.இ.க வின் ஏடான புதிய கலாச்சாரம் ஒரு விமர்சனக் கட்டுரை வெளியிட்டது. அதை முழுமையாக இங்கு வெளியிடுகிறோம். இதில் சொல்லப்பட்டுள்ள மாற்று கருத்துக்களுக்கு அடுத்துத் தொடர்ச்சியாக விளக்கம் இடம் பெறும்.- ஜி.என் - 
இறைவனின் அடியாட்கள்

இந்த நாட்டில் இஸ்லாம் அரசாங்க மதம். எனக்கோ எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் முத்திரையை என் தலைமேல் குத்துகிறது இந்த அரசாங்கம். பள்ளியில், பனியாற்றும் இடத்தில், சமூகத்தில் --- என்று எல்லா இடங்களிலும் நான் முஸ்லிம் என்று அடயாளப்படுத்தப்படுகிறேன். குர்ஆன் வேதங்கள், பைபில் ஆகியவை காலப் பொறுத்தமற்றவை. எனவே அவை நம்மை வழி நடத்தக்கூடாது என்றார் தஸ்லீமா.

'எது பெண்ணுரிமை;;;'; என்று ஒரு வெளியீடு போட்டிருக்கிறார் அல்-ஹக் எனும் இதழின் ஆசிரியர் நிஜாமுதீன். பிற மதங்களும் பண்டைய தமிழர் பண்பாடும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறித்தியபோது பெண்ணுக்கு உரிமை வழங்கியது இஸ்லாம் தான் என்கிறார்.

;சம உரிமை என்ற வார்த்தை கேட்பதற்கு புரட்சிகரமாகவும் அறிவு ஜீவிகளுக்கு ஆனந்தமாகவும் அறியாப்பெண்களுக்கு இனிதையாகவும் இருக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்.

மாதர்சங்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் கூட சம உரிமை என்ற சல்லாபச் சொற்களுக்கு மனதைப் பறிகொடுத்து போராட்டங்கள் நடத்துவதைக் கண்டிக்கிறோம்... பர்தாவால் பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது என்ற இவர்களது கூச்சல் பெண்ணுரிமையை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பர்தாவிற்குள் மறைந்திருக்கும் பெண் அழகை அவளது கவர்ச்சி பிரதேசத்தை காண முடியவில்லையே... தனது சிற்றின்ப நினைவுக்குத் தீனி போட முடியவில்லையே... என்பதுதான். எந்தெந்த வகையில் பெண்களுக்குப் பாதிப்பை, தீராத இழிவை ஏற்படுத்த வேண்டுமோ அத்தகைய இழிவுகளுக்கெல்லாம் தாளம் போடுவதற்காகத் தான் சோஷலிஸம் என்ற தபோலாக்களை தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள். (அல்-ஹக் வெளியீடு)

சமஉரிமை என்பதே சல்லாபச்சொல்லாம். பெண்ணுக்கு சமஉரிமை தர வேண்டும் என்று பேசிய பெரியார் உள்ளிட்ட எல்லோரும் பொருக்கிகள் என்பதுதான் இதன் சாரம். வேறு வார்ததைகளில் சொன்னால் பெண்ணுரிமை இயக்கத்தினரும், பர்தா அணியாத பெண்களும் வேசிகள்.
 
  • ஆண்கள் பெண்களைவிட ஒருபடி மேல்'; (அல்-குர்ஆன் 2 : 228) என்று மேற்கோள் காட்டுகிறார் நிஜாமுத்தீன்.
  •  அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் ; ; (அல்-குர்ஆன் 33 : 55) என்கிறார் அஸ்கர் அலி என்ஜினீயர்.
  • குடும்பத்தில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்றால், ஒரு தலைவன் வேண்டும். அந்தப் பதவியை இஸ்லாம் கணவனக்குத்தான் கொடுக்கிறது ; ; என்கிறார் மவுதூதி.- சைய்யது அப்துல்லா மவுதூதி, ஜமாத்தே இஸ்லாமி.
ஏது குர்ஆனின் முடிவு? ஏது இஸ்லாத்தின் வழி காட்டுதல்?

; இஸ்லாமியச் சட்டங்கள் என்பவையெல்லாம் பெண்களை நசுக்குவதற்கு மட்டும்தான் இந்த நாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. மற்ற இஸ்லாமியச் சட்டங்களெல்லாம் எங்கே? திருட்டுக்கு கையை வெட்டுவது தானே! கள்ள உறவுக்கு கல்லாலும் பிறம்பாலும் அடிப்பது தானே! இந்த குற்றங்களெல்லாம் ஆண்களுக்கு பழக்கமானவை என்பதால் தானே ஆணாதிக்கவாதிகளான தலைவர்கள் இவற்றை அமல்படுத்தவில்லை? இஸ்லாம் ஒரு கவசம். அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இது புரியும். பாவிகளுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் இது கவசம். கொடுங்கோலர்களுக்கும் கள்ள உறவுப் பேர்வழிகளுக்கும் கவசம். இந்த நாட்டில் அரசியல் அரங்கில் தான் இக்கவசம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

தஸ்லீமா கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? ஷாபானு என்ற ஒரு ஏழைப்பெண்ணின் ஜீவனாம்சத்தை நிறுத்த நாடெங்கும் ஆர்பாட்டம் நடத்திய முஸ்லிம் மதவாதிகள் அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்? உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய சட்டத்திற்குள் வரம்புமீறி தலையிடுகிறது என்றார்கள். மத உரிமை பறி போய் விட்டதாக கூக்குரலிட்டார்கள்.

ஆனால் இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சி மாற்றியமைத்து, பெண்ணுக்கு இஸ்லாம் அளித்த சொத்துரிமையைப் பறித்து மூத்த மகனுக்குக் கொடுத்த போது மத குருமார்கள் வனவாசமா போயிருந்தார்கள்?

இந்திய துணைக்கன்டம் முழுவதிலும் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார் மவுதூதி! ஷாபானுவிற்;கு எதிராக பிளந்த வாய்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?

இஸ்லாமிய கிரிமினல் சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகளில் அமலில் இல்லையே அதன் ரகசியம் என்ன? தஸ்லீமா எழுப்பியிருக்கும் கேள்வியில் என்ன தவறு?

பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தும் எல்லா மதவாதிகளும் தங்களது ஆதிக்க நோக்கத்தை மறைத்துக் கொண்டு கருணாமூர்த்திகள் போல நடிக்கிறார்கள்.

--வீட்டுக்குள் இடிந்து கொண்டு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் (இஸ்லாத்தால்) பெண்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் மீது இரட்டைச் சுமையை ஏற்ற இஸ்லாம் விரும்பவில்லை. குழந்தளை வளர்க்க வேண்டும், வீட்டை பராமரிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், வெளி வேலைகளையும் பார்க்க வேண்டும் என்றால் அது பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. எனவே இஸ்லாம் ஆணுக்கும் பொண்ணுக்கும் இடையே ஒரு நடைமுறை வேலைப் பிரிவினையை உருவாக்கியிருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்பதல்ல. போகலாம்... ஆனால் சில சம்பிரதாயங்களைக் கடைபிடிக்க வேண்டும்.....என்கிறார் மவுதூதி. என்ன இரக்கம்! சரி. ஏதோ ஒரு பெண் தானாகவே கூடுதல் சுமைகளை ஏற்க முன் வந்தால் அனுமதிக்கலாமா? தாராளமாக என்கிறார் நிஜாமுதீன், டாக்டர் ஆகலாம், என்ஜினியர் ஆகலாம்,போலீசாகலாம், தடையே கிடையாது ஆனால் பர்தா உஷார் என்கிறார்.

பார்சிலேனா ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற ஹசீபா என்ற அல்ஜீரியாப் பெண்ணின் கதையை கேளுங்கள். அரைக்கால் சட்டை அணிந்து ஓடக் கூடாது என்று தடை விதித்தார்கள் அல்ஜீரிய முல்லாக்கள். நிஜாமுதீன் அவர்களே! பர்தாவை போட்டுக் கொண்டா ஓட முடியும்? பர்தாவை வீசி எறிந்து விட்டு அந்த வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்.  என்னைப் போன்ற ஆயிரம் அல்ஜீரியப் பெண்கள் பர்தாவை கிழித்தெரியத் துடிக்கிறார். நான் அவர்களுக்காகப் போராடுகிறேன். இந்த முல்லாக்களிடம் நான் தோற்றுவிட்டால் அவர்கள் அத்தனை பேருடைய நம்பிக்கையும் கருகி விடும்' என்கிறார் ஹசீபா.

' ஹசீபா தோற்க வில்லை, அவள் வென்று விட்டாள். மக்கள் இனிமேல் ஹசிபாவின் பெயரால் அல்ஜீரியா நாட்டை நினைவு கூர்வார்கள்... பெண்கள் பர்தாவை விட்டு வெளியே வரக்கூடாது என்று தடுப்பவர்களின் முகத்தில், பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை குர்ஆன் தடை செய்கிறது என்று மிரட்டுபவர்களின் முகத்தில், வீட்டுக்குள்ளே அடைந்துக்கிடந்து ஆணை மகிழ்விப்பதும், பிள்ளை பெருவதும் அவர்களைப் பராமரிப்பதும் தான் பெண்களின் பணி -- பெண்களிடம் வேறெந்த திறமை இருப்பதையும் ஏற்க முடியாது என்று கூறுபவர்களின் முகத்தில் எல்லோருடைய முகத்திலும் காறி உமிழ்ந்து விட்டாள் ஹசீபா'

தஸ்லிமாவின் இந்த சமஉரிமை பிரகடனத்திற்குப் பதிலடி கொடுக்கிறார் நிஜாமுத்தீன்.

'வயல் வெளியில் வேலை செய்யும் பெண்கள், கட்டிட வேலை செய்யும் பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் அரை நிஜாருடன் அதாவது ஆண்கள் எப்படி கோவணத்துடன் அல்லது ஒரே ஒரு டவுசருடன் கீழாடையை போதுமாக்கிக் கொண்டு வேலை செய்கிறார்களோ அதே போன்று தான் பெண்களும் கீழாடையோடு மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் எந்த சம உரிமையை எதிர் பார்க்கிறீர்களோ அந்த சம உரிமைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. மாதர் சங்கங்களே, முற்போக்குவாதிகளே முன் வருவீர்களா? இதற்கு நீங்கள் தயாரியில்லை என்றால் சம உரிமை சித்தாந்தத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை என்றுதான் பொருள்'. (அல் ஹக் வெளியீடு).

மதம், புனிதம் என்ற முக்காடுகளை எல்லாம் கழற்றி வீசிவிட்டு அராபிய இரவுகளின் நாயகர்களைப் போல் தன் சுயரூபத்துடன் வெளியே வருகிறார் நிஜாமுத்தீன்.

ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதற்குக் கவர்ச்சியைத் தூண்டக்கூடிய அவர்களின் உடைகளே முக்கியக் காரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...

ஆண்களுக்கு காம உணர்ச்சி ஏற்பட நேர கால வரையறை எதுவும் கிடையாது. அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் காம உணர்வுக்கு ஆளாகி விடலாம். அவனது உடல் வாக்கும் படைப்பும் அப்படி. அவன் எளிதில் உணர்ச்சி வசப்படுவான். இந்த உணர்ச்சியை அடக்கிக் கொள்ள பெண்களைத் தேடி அலைவான். ஏழு வயது சிறுமி கூட பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகிறாள் என்ற குற்றப்பட்டியல்கள் தரும் ஆதாரங்கள் ஆண்களின் காமப்பசியின் எல்லையைத் தெளிவாக காட்டுகின்றன. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது ஒரு பெண் தனது அங்கங்களை ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக ஆக்கிக் கொண்டு வெளிப்பட்டால் நிலைமை என்னவாகும்...?

பெண்களுக்கு ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது மாதர் சங்கங்களோ, மகளிர் மன்றங்களோ, சட்டங்களோ அல்ல. அது பர்தா ஒன்று தான்?...(அல் ஹக் வெளியீடு)

பெண்கள் பர்தா அணியாததால்தான கற்பழிப்பு நடக்கிறது. ஆண்கள் இயல்பிலேயே காம வெறிர்கள். இறைவனின் படைப்பு அப்படி. இதற்கு ஆண்களை குற்றம் சொல்ல முடியாது. இஸ்லாம் கூறும் பர்தா மட்டுமே இதற்குத் தீர்வு --- இன்னும் நிஜாமுத்தீன் எழுதியுள்ளவற்றையெல்லாம் படித்தால் சுயமரியாதையுள்ள எந்த இஸ்லாமியருக்கும் ஆத்திரம் வரும், பெண்களுக்கும் ரத்தம் கொதிக்கும்.

வங்காள தேச முஸ்லீம் பெண்களைப் பாக்கிஸ்தான் ராணுவம் கற்பழித்தது. பர்தா அணியாததால் தானோ! பர்தா அணியாத பெண்களைக் கற்பழித்த போலீசாரை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து விடலாமோ! முகலாய மன்னர்களுக்கும், துருக்கி சுல்தான்களுக்கும், இதர மன்னர்களுக்கும் ஆடுமாடுகளைப் போல் பெண்களைப் பிடித்து வந்து தம் அந்தபுரத்தில் நூற்றுக் கணக்கில் அடைத்து வைத்திருந்தனரே--- பர்தாவைக் கண்டிருந்தால் அந்த மன்னர்கள் பயந்து ஓடியிருப்பார்களோ!

ஆண்கள் இயல்பிலேயே காமவெறியர்கள் என்று சொல்லி எல்லோருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறார் நிஜாமுதீன். அது மட்டுமல்ல, ஆண்கள் அனைவரையுமே நாய்களிலும் கீழான விலங்காகவும் சித்தரிக்கிறார். இத்தனை பிரச்சனைகள் ஏன்? அளவற்ற அருளாளனான இறைவன் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் குறைத்து வைத்திருக்க கூடாதா? இறைவனின் இந்த விபரீதமான திருவிளையாடலில் பெண்களல்லவா மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். பர்தா வியாபாரத்தில் ஒரு இலவச இணைப்பும் தருகிறார் நிஜாமுத்தீன். நோய்க்கிருமிகளிடமிருந்தும், சுகாதாரக்கேட்டிலிருந்தும் பெண்களை பர்தா காக்கின்றது. அண்களும் அணிந்து அந்த பாதுகாப்பைத் தேடிக் கொள்ளலாமே!

நிஜாமுத்தீன் வகைறாக்களின் பர்தா மாகாத்துமியம் ஒரு புறமிருக்கட்டும் முகத்தை மூடி கொள்ள வேண்டும் என்று குர்ஆனில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார் 'பிரபல உருது எழுத்தாளர் குவாராதுரலன் ஹைதர்.

பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளத்தான் வேண்டும்,  இது ஷரியத்தின் விதி; என்கிறார் மவுதூதி. என்ன செய்யலாம்? எதை அமல் படுத்தலாம்?

விவகாரத்து விசயத்தில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியள்ள உரிமைகளை விவரிக்கிறார் நிஜாமுத்தீன்.

அப்பெண்கள் உங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று நீங்கள் பயந்தால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், அவர்களை படுக்கையிலிருந்து தள்ளி வையுங்கள், அவர்கள் திருந்துவதற்காக (லோசாக) அடியுங்கள்.(குர்ஆன் 4:34)

எத்தனை அறிவுரைகள், எத்தனை அச்சுறுத்தல்கள்! இத்தனையும் துச்சமென மதிக்கும் தஸ்லீமாக்களும் அவரைப் போன்றோரும் இல்லரத்துக்கு லாயக்கற்றவர்கள் என்ற நிலை வரும் போது அந்த பெண்களோடு உள்ள தொடர்பை விவகாரத்து மூலம் ஆண் நீக்கிக் கொள்கிறான்.

ஆணாதிக்கத்தால் நிரம்பிவழியும் இந்த வழிமுறைகளை பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமையாக சித்தரிக்கிறாரே என்று வாசகர்கள் அதிசயிக்கலாம்.

இந்த, தலாக்  உரிமையை ஆணுக்கு வழங்காவிட்டால் அவன் வைப்பாட்டி வைத்துக் கொண்டு கொடுமை செய்வான் அதற்கு இது மேலல்லவா! என்கிறார் நிஜாமுத்தீன். எப்படி இருக்கிறது இந்த நியாயம்?

இதில் வேதனை என்னவென்றால் இந்த வழிமுறைகளைக் கூட கடைபிடிக்காமல் நினைத்த மாத்திரத்தில் ; ;தலாக்... தலாக்... தலாக் ; ; என்று கூறி ஒரு பெண்ணை ஒரே நிமிடத்தில் விவகாரத்து செய்து விடுகின்றனவென்றும், குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல வந்த அரபு மொழி உரையாசிரியர்கள் இவ்வாறு செய்வதை நியாயப்படுத்தி விட்டனர் என்றும் அங்கலாய்த்துத் கொள்கிறார் நிஜாமுத்தீன். இவ்வாறு பெண்களுக்கு அநீதி இழைக்கப் படுவதற்குக் காரணம் உள்ளுர் ஜமாஆத்காரர்கள் தான் என்கிறார்.

இஸ்லாமிய மணவிலக்கு மறையில் உள்ள அநீதிகளை நாம் தனியே விளக்கத்தேவையில்லை. விவகாரத்து செய்யப்பட்டு ஜீவனாம்சமும் தரப்படாமல் சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கனக்கான முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு மாவட்ட நீதி மன்றத்திலும் போட்டிருக்கும் வழக்குகளே இதற்கு சான்று கூறும்.

ஜமாஅத் முடிவுக்குக் கட்டுப்படாமல் கோர்ட்டுக்குப் போனதற்காக அந்த பெண்களுக்குத் தண்டனை விதிக்கப் போகிறார்களா, அல்லது குர்ஆனை தம் இஷ்டப்படி வளைத்து 1400 ஆண்டுகளாக நீதி வழங்கிக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்களுக்கு தண்டனை விதிக்கப் போகிறார்களா? ஷாபானுவை நசுக்க கூட்டம் சேர்த்தவர்கள் பதில் சொல்லட்டும்.

'திருமணத்திற்கு முன் பெண்ணின் விருப்பத்தை அறிய வேண்டும்'... 'ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்ய விரும்பினால் அதற்கு அவள் காரணம் சொல்லத் தேவையில்லை.' 'ஜமாத்தில் ஆண்--பெண் வீட்டார் அமர்ந்து முடிவு செய்ய வேண்டியதுதான்' என்றெல்லாம் குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. (கணவனே கண் கண்ட தெய்வம் கோட்பாட்டை விட இது பரவாயில்லைதான்) ஆனால் இவையெல்லாம் கூட எங்கே நடைமுறைப் படுத்தப்படுகின்றன?

இந்தியாவிலிருந்து முஸ்லீம் சிறுமிகளைத் திருமணம்; செய்து கொண்டு போகும் கிழட்டு அராபிய ஷேக்குகள் அச்சிறுமிகளிடம் சம்மதம் கேட்டார்களா? அந்த ஷேக்குகளுக்கு இஸ்லாம் இதுவரை என்ன தண்டனை அளித்திருக்கிறது? அதெல்லாம் தவறுதான் என்று இப்போது பசப்பிப் பயனில்லை.

தஸ்லீமாவை தாக்குகின்ற சமரசம்  உள்ளிட்ட இஸ்லாமிய இதழ்களும், நமக்குக் கடிதம் எழுதியிருக்கும் வாசகர்களும் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைத் தான் வலியுறுத்துகிறார்கள். தஸ்லீமா ஒழுக்கங்கெட்டவள்., திருமணம் என்ற ஏற்பாடு இல்லாமலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழலாம் என்று கூறுபவள். அவளுக்கா வக்காலத்து வாங்குகிறீர்கள்? என்று திசை திருப்புகிறார்கள். 'தஸ்லீமாவின் தரங்கெட்ட போக்கிற்கு இனகுலாப் தாளம் தட்டுகிறார் என்று சாடுகிறார் நிஜாமுத்தீன்.

எது தரம், எது ஒழுக்கம் என்ற விவாதத்தை அப்புறம் வைத்துக்கொள்வோம். தாங்கள் கூறுகின்ற ஒழுக்கத்திற்கே நிஜாமுத்தீனும், மவ்தூதியும் இன்ன பிறரும் விசுவாசமாக இருந்திருக்கிறார்களா, அல்லது தரங்கெட்ட போக்கிற்குத் தாளம் தட்டியிடுக்கிறார்களா என்பதை முதலில் பரிசீலனை செய்வோம்.

அன்றைய முகலாய மன்னர்கள் முதல் இன்றைய அராபிய ஷேக்குகள் வரை அனைவரும் இஸ்லாம் கூறுவது போல நான்கு மனைவியுடன் நிறுத்திக் கெண்டார்களா? ஷரியத் என்றைக்காவது முழுமையாக அமலாகியிருக்கிறதா? 
அன்று முதல் இன்று வரை மன்னர்கள், பணக்காரர்களின் மதவிரோத நடவடிக்கையை எதிர்த்து உயிர் துறந்த முல்லாக்கள் எத்தனை பேர்? ஷேக்குகளுக்கு எதிராக மரண தண்டனையை எந்த மவுதூதி அறிவித்திருக்கிறார்?

ஏகபோகம், ஆடம்பரம், வட்டிக்கு விடுவதை எல்லாம் இஸ்லாம் தடை செய்கிறது என்கிறார் மவுதூதி. இப்படித்தான் கடைப்பிடிக்கப்படுகிறதா? உங்களுடைய வீரம் பெண்களிடம் தான் வாள் சுழற்றுமா?

இஸ்லாத்துக்கு எதிராக மேற்குலக ஏகாதிபத்தியங்கள் நடத்தும் திட்டமிட்ட சதிதான் ருஷ்தி - தஸ்லீமா விவகாரங்கள் என்கிறார்கள். அப்படியே இருக்கட்டும். அந்த மேற்குலகத்தின் பன்னாட்டு கொள்ளை நிறுவனங்களில் கோடி கோடியாய் மூலதனம் போட்டிருக்கும் வளை குடா நாடுகளை முதலில் விசாரியுங்கள்.

1971--இல் பாக். ராணுவம் வங்கதேச(முஸ்லீம்)பெண்களை கற்பழித்ததையும், படுகொலை நடத்தியதையும், பாக்கிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆதரித்த குற்றவாளி என்று முஜிபுர் ரஹ்மானால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் குலாம் ஆசம். இந்தக் குற்றவாளிதான் இஸ்லாமை எதிர்த்து பேசியதற்காக தஸ்லீமாவுக்குதுக்கு தண்டனை விதிக்கிறார். யாருக்கு நியாயம் வழங்கப்போகிறது உங்கள் இஸ்லாமிய சர்வதேசியம்? தஸ்லீமாவால் பறிக்கப்பட்ட இஸ்லாத்தின் மானத்திற்கா? பாக்கிஸ்தான் ராணுவத்தால் பறிக்கப்பட்ட இசுலாமியப் பெண்களின் பெண்களின் மானத்திற்கா?

எந்த குறிப்பிட்ட இனத்தின் பண்பாட்டுக்கும் இசுலாமிய சர்வதேசியம் இரையாகி விடக் கூடாது என்கிறார் மவுதூதி. வங்காளம் மீண்டும் ஒன்றுபடுவதைக் காண்பதே என் விருப்பம் என்று இசுலாமிய உணர்வுடன் கூருகிறார் தஸ்லீமா. கம்யூனீசத்தை ஏற்றுக்கொண்டு வழி தவறிய இசுலாமியர்களை விடுங்கள். தமிழின உணர்வு கொண்ட தமிழறிஞர்களாகப் பல இசுலாமியர்கள் இருக்கிறார்களே, இவர்கள் இசுலாமிய தேசியத்துக்கு எதிரானவர்களல்லவா? இவர்களை என்ன செய்யலாம்?

ஈரான்--ஈராக், பாக்--வங்காள தேசம், ஈராக்--குர்திஸ்தான் மோதல்களில் இஸ்லாம் யார் பக்கம்? இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தும் வளைகுடா அதிபர்களின் ;இசுலாமிய சர்வதேசியத்தற்கு ; யார் சவுக்கடி கொடுப்பது?

சீரழிவைப் பரப்புவதில் மத வேறுபாடின்றிப் பங்காற்றும் இசுலாமிய நடிகர், நடிகைகளுக்கெதிராக எத்தனை ;பத்வாக்கள் (ஆணைகள்)இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கின்றன?

ஏழைகளின் மதமாக எழுந்த சூஃபி மார்க்கமும், நாகூர் தர்கா போன்றவையும் இசுலாத்திற்கு விரோதமானவை என்று கூறும் நிஜாமுத்தீனும், மவுதூதியும் நாகூர் முதல் காஷ்மீர் வரை பரவியிருக்கும் தர்காக்களை தகர்த்து விடுவார்களா?

இன்னும் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். தாங்கள் கூறுகின்ற மதநெறிக்கு எதிராக 1400 ஆண்டுகளாக ஆதிக்க வர்க்கங்கள் செய்து வரும் அட்டூழியங்களை எதிர்த்து மதகுருமார்களும், மத வெறியர்களும் கண்டு விரலைக்கூட அசைத்ததில்லை. அவர்களை நத்திப் பிழைத்திருக்கிறார்கள் என்பதே வரலாறு.

இறைவன் அருளிய  மாற்ற முடியாத சட்டங்களைப் பற்றி இன்று இவர்கள் பேசுகிறார்கள். எப்படி வாழ வேண்டுமானாலும் வாழ்ந்து கொள். ஆனால் வெளிப்படையாக எதிர்த்துப்பேசாதே! என்பதுதான் இவர்களை வழி நடத்தும் கோட்பாடு. தஸ்லீமா ஒழுக்கம் கெட்டவளாம். ஷாபானுவும் ஒழுக்கம் கெட்டவளோ?

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரில் நடைப்பெற்ற முஸ்லிம் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய சுஹைமா உசேன் என்ற பேராசிரியை, தென் ஆப்பிரிக்காவில் இஸ்லாத்தின் 3 நூற்றாண்டு வரலாறு என்பது ஆணாதிகத்தின் வரலாறுதான். முகத்திலும், முதுகிலும்,தலையிலும், மார்பிலும், தலையிலும்பெண்கள் (கணவனிடம்) அடி வாங்கியதால் ஏற்பட்ட காயங்களை மறைப்பதற்குதான் பல சமயங்களில் பர்தா பயன்படுகிறது, என்று பொரிந்துத் தள்ளியிருக்கிறார் சுஹைமாவும் நடத்தை கெட்டவளோ?

பெண் விடுதலை குறித்த தஹ்லீமாவின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமோ என்பது மதவெறியர்களுக்குத் தேவையில்லாத பிரச்சனை. ஆணும் பெண்ணும் சமம் என்பதைக் கொள்கையளவில் கூட ஒப்புக்கொள்ளாதவர்கள் 'பெண்ணுரிமை எது?' என்றக் கேள்விக்குள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை. அதற்கு அவர்களுக்கு அருகதையும் இல்லை.

மதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்டன தந்தை வழிச்சமுதாயமும், ஆண் ஆதிக்கமும். எனவே ஆணாதிகத்தின் சுவடுகள் ஒவ்வொரு மதத்திலும் இருந்தே தீரும். ஆணாதிகத்தை நிலை நிறுத்தும் பல்வேறு நிறுவனங்களில் மதமும் ஒன்று. மதங்கள் ஒழிந்து விட்டாலே ஆணாதிக்கமும் ஒழிந்து விடப் போவதில்லை. அதற்குத் தேவை சமுகப் புரட்சி. ஆனால் அணாதிக்கத்திற்குப் புனித முலாம் பூசும் மதக் கோட்பாடுகளைத் தாக்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

முதலாளித்துவ சமுதாயத்தின் சீரழிவுகளைச் சுட்டிக்காட்டி 'இதிலிருந்தெல்லாம் மனிதக் குலத்தைக் காக்க வந்தது மதம் ஒன்றுதான் '-என்று கூப்பாடு போடுகிறார்கள் நல்லொழுக்கத்தின் மொத்தக் குத்தகைக்காரர்களான சங்கராச்சாரிகள், போப்புக்கள் மற்றும் முல்லாக்கள். இவர்கள் நிலை நாட்டி வரும் நல்லொழுக்கத்தின் யோக்கியதையைப் பல நூற்றாண்டுகளாகப் பார்த்து விட்டோம்.

போதும், தங்களது உழைப்பால் இந்த உலகத்தை உருவாக்கி வரும் கோடானு கோடி மக்கள் தங்களுக்கு உகந்த ஒழுக்க நெறிகளையும் தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். அதற்கு எந்த மதகுருவின் உதவியும் ஆசியும் அவர்களுக்குத் தேவையில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்குறிய தீர்வுகளைத் தன் சொந்த பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்ந்து கண்டறிந்த ஒரு சிறந்த மனிதரின்--முகமது நபியின்--படைப்புதான் குர்ஆன். இருப்பினும் இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் அதில் விடை தேட முடியாது.

**அவர்களின் கட்டுரை முடிந்தது**
......................

நாம் வெளியிட்ட எது பெண்ணுரிமை புத்தகம்


No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks