Wednesday, April 6, 2011

மனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம்

'அல்லாஹ் கூறுவதாக ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ஆதமுடைய மகனே நீ எனக்காக செலவு செய். நான் உனக்காக செலவு செய்வேன்.' ஆறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி மற்றும் முஸ்லிம்.

இஸ்லாம் ஏற்படுத்த நினைக்கும் பரந்த பொருளாதார வடிவத்திற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும். இஸ்லாமிய கடவுள் கொள்கையில் கடவுள் தேவையற்றவன் என்பது அழுத்தமான சித்தாந்தமாகும். உலகில் பாமர மக்களிடமிருந்து சுரண்டப்படும் பொருளாதாரத்தில் ஒரு கணிசமான தொகை கடவுளின் பெயரால் நடை பெறும் காணிக்கை சுரண்;டலாகும். மத குருக்கள் தம் வாழ்க்கையை வளப்படுத்த இந்த காணிக்கை சுரண்டல் பெரிதும் உதவுகிறது. கடவுள் பக்தி மேலோங்கி நிற்கும் அதே நேரத்தில் கடவுள் பற்றிய கடவுள் பற்றிய தெளிந்த அறிவில்லாத மக்கள் கடவுள்தாரர்களால் கசக்கிப் பிழியப்படக்கூடாது என்பதால் தான் உலகப் பொதுமறையான அல்குர்ஆனில் கடவுள் தேவையற்;றவன் என்ற முழக்கம் திருக்ப-திரும்ப ஒலிக்கப்பட்டுள்ளது.

இது நிஜம் என்றால் மேலுள்ள ஹதீஸூக்கு என்ன பொருள். தான் தேவையற்றவன் என்ற நிலையில் தனக்காக செலவு செய்யச்சொல்வது எந்த வகையில் பொருந்தும். இதை விளக்குவது அவசியம்.

இஸ்லாமிய கோட்பாட்டின்படி கடவுளுக்கு எதுவுமே தேவையில்லை. அவன் அகில உலகையும் படைத்தவன். பாதுகாப்பவன். வல்லமைமிக்கவன். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய சக்தியாளன். அவனுக்கு எதுவும் தேவையில்லை. இருப்பினும் அவன் தனக்காக செலவு செய்யச் சொல்கிறான் என்றால் வேறு ஏதோ ஒரு திட்டம் அதில் புதைந்துள்ளது. அது என்ன?.

இறைவன் மனிதனை அறிவு-நிறம்-கல்வி-பொருளாதாரம் என்று பல விஷயங்களில் வேறுபடுத்தி படைத்துள்ளான். உலகம் சமன்பாட்டுடன் இயங்க இந்த வேறுபாடு பெரிதும் பயன்படும். இந்த சமன்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இல்லாதோருக்கு உதவுவது. அல்லது செலவு செய்வதாகும். சில மனிதர்களிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்திற்கு அவர்கள் முழு சொந்தம் கொண்டாடினாலும் உண்மை அதுவல்ல. படிப்பு-அறிவு-உழைப்பு-திறமைதான் பொருளாதார உயர்விற்கு காரணம் என்று சொல்லப்பகிறது. இது உண்மையென்றால் இதே திறமையுள்ள அவ்வளவு பேரும் பொருளாதாரத்தில் நல்ல நிலையைப் பெற்றிருக்க வேண்டும். திறமை உள்ளவர்களெல்லாம் முன்னுக்கு வருவதில்லை என்பதை சாதாரன அறிவு படைத்தவனும் அறிகிறான். எனவே பொருளாதாரம் என்பது இறைவன் யாரை நாடுகிறானோ அவருக்கு தான் நாடியவாரு கொடுக்கிறான். இவ்வாறு கொடுப்பதன் நோக்கம் எவனுக்கு இறைவன் கொடுக்கிறானோ அவன் மூலம் இறைவன் காட்டிய வழியில் செலவு செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.

இறைவன் காட்டிய வழியில் தம் சக மனிதர்களை முன்னேறுவதற்காக ஒருவன் தம் பொருளை செலவு செய்கிறான் என்றால் -அவன் இறைவனுக்கு செலவு செய்கிறான் என்று பொருள்.

திருமறை குர்ஆனின் ஏராளமான வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

2:195, 215, 261, 265, 267, 3:92, 134, 4:34, 38, 13:22, 16:75, 25:67 ஆகிய வசனங்கள் தெளிவான சான்றுகள்.

இறைவனுக்கே செலவு செய்யுங்கள் என்றால்-வறுமையில் வாழ்பவர்களும் தேவை உள்ளவர்களும் அது சொந்தம் என்பது தான் அர்த்தம். இதை தெளிவாக மற்றுமொரு ஹதீஸ் விளக்குகிறது.

இறுதி நியாயத்தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில் (செல்வம் நிறைந்து வாழ்ந்த) ஒரு அடியானை அழைத்து அல்லாஹ் கேட்பான். ஆதமுடைய மகனே நான் பசியோடு உன்னிடம் வந்து உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லையே!

இறiவா! நீயே அகில உலக அதிபதியாக இருக்கிறாய். உனக்கு எப்படி பசி எடுக்கும். நீ எப்போது என்னிடம் வந்தாய். நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் என்று அடியான் கேட்பான். அதற்கு இறைவன்.

என்னுடைய இந்த அடியான் உன்னிடம் உணவு கேட்;டு வந்தான் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை. நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் பலனை என்னிடம் கண்டிருப்பாய்.

ஆதமுடைய மகனே நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை-என்று இறைவன் கூறுவான். இறiவா! நீ பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாக இருக்கும் போது நான் உனக்கு நீர் எப்படி புகட்ட முடியும்-என்று அடியான் கேட்பான்.

அதற்கு இறைவன்-என்னுடைய இந்த அடியான் குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்டான். நீ அவனுக்கு எதுவும் கொடுக்கவில்லை. நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதை நிச்சயமாக நான் ஏற்றிருப்பேன்-என்று கூறுவான். (அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி) முஸ்லிம்.

இறைவன் தேவையுள்ளவன்-பிறரது உதவியை நாடுபவன் என்ற தோரணையில் வரக்கூடிய வசனங்கள்-ஹதீஸ்களுக்கெல்லாம் விளக்கமாக இந்த ஹதீஸை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவன் காட்டிய வழியில் மனித இனம் மேலோங்குவதற்காக செலவு செய்யப்படும் ஒவ்வொரு பைசாவும் எனக்காக செலவு செய்யுங்கள் என்ற இறைக்கட்டளைக்குறிய விளக்கமாகும்.

தனிமனித நலம்-குடும்ப முன்னேற்றம்-சமூக எழுச்சி இவற்றிற்கெல்லாம் பொருளாதாரம் முதுகுத்தண்டைப் போன்றது. இதில் கூனலோ-கோணலோ-வளைவோ-ஏற்பட்டால் முழு திட்டமும் செயலிழந்து போய்விடும்.

இவ்விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இறைவன் பரந்த பொருளாதார திட்டத்தை வகுத்து தானம்-அன்பளிப்பு-தர்மம்-வரி என்ற பெயர்களில் அதைப் பங்கிடச் சொல்கிறான்.

வெறுமனே தர்மம் செய்யுங்கள் என்றால் மனிதன் அலட்சியப்படுத்தக் கூடும் என்பதால் தான் அவன் எந்த சக்திக்கு கட்டுப்பட்டு-எந்த சக்தியை நேசித்து வாழ்கிறானோ அந்த இறைவனுக்காக-அவனுத திருப்பொருத்தத்தைப் பெருவதற்காக செலவு செய்யுங்கள் எனக் கூறப்படுகிறது. இதைத் தான் நல்லறம் என்று இஸ்லாம் ஏற்கிறது.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை ஆனால் புண்ணியம் எனபது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் பொன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்) 2:177

புண்ணியம்-அதாவது நல்லறம் என்ன என்பதை அற்புதமாக விளக்கும் வசனம் இது. இறைவனுக்கு செலவு செய்தல் என்பது தேவாலயங்களைக் கட்டி மத குருக்களின் அந்தஸ்த்தை உயர்த்தி கடவுளுக்கும்-மனிதருக்கும்-மத்தியில் இடைத்தரகர்களை உருவாக்கி சமுதாயத்தை வீழ்த்தும் திட்டத்திற்கு உதவுதல் என்பதல்ல. மாறாக அது சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மீட்புக்குறியது. இந்த நோக்கத்திற்கு மாற்றமாக-அல்லது எதிராக செலவு செய்தல் அது எவ்வளவு பெரிய தொகை என்றாலும் இறைவனுக்கு செலவு செய்தல் என்ற ஹதீஸூக்கு எதிராகத்தான் அது கணிக்கப்படும்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks