Wednesday, April 27, 2011

இறைவன் ஏன் இப்படி? சுந்தர்ராஜ்

திருக்குர்ஆன் வசனம் 7:179 ல் இறைவன் மனிதர்களில் சிலரை நரகத்திற்காக படைத்திருப்பதாகச் சொல்கிறான்.. எதற்காக இத்தகைய மனிதர்களைப் படைக்கிறான்.. அவர்களின் நரக வேதனைக் கூக்குரலைக் கேட்டு சந்தோசிக்கவா..? இறைவன் அவ்வளவு மோசமானவனா..? அவனே நரகத்திற்கென அந்த மனிதர்களைப் படைத்தால் அவர்களை யார் காப்பாற்ற முடியும்..? என் பிரார்த்தனையெல்லாம் நரகத்திற்கு யாருமே செல்லக் கூடாது.. என் கேள்விகளுக்கு தெளிவான பதில் தரவும்..

பி.சுந்தரராஜ் sundararaj.pattgmaildotcom
...................................................

சகோதரர் சுந்தர்ராஜுடைய கேள்விக்கான பதில்ஒரு வசனத்தை மேலோட்டமாக பார்த்து, அதே வசனத்தில் பதில் இருக்கும் நிலையில் தனது கேள்வியை வைத்துள்ளார்.

இறைவனே நரகத்திற்கென்று சிலரை படைத்துவிட்டால் பிறகு அவர்களை யார் காப்பாற்றுவது என்பது அக்கறையான சிந்தனைத்தான் என்றாலும் அதற்காக இறைவனை குற்றவாளியாக சித்தரிப்பது நியாயமானதல்ல.

அவர் குறிப்பி்டுள்ள வசனத்தை முழுமையாக பார்ப்போம்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

ஜின்களாகட்டும் அல்லது மனிதர்களாகட்டும் அவர்களில் பலர் நரகிற்கு செல்வதற்கான காரணங்கள் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக நரகிற்கென்று அவர்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. காரணம் விளக்கப்பட்டுள்ளதிலிருந்து பொதுவாக அவர்கள் நரகத்திற்காக படைக்கப்படவில்லை என்பதை எந்த அறிவாளியாலும் புரிந்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்.

1) அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவர்கள் சிந்திப்பதில்லை.

மனிதன் அறிவும், சிந்தனைத்திறனும் அற்றவனல்ல. சுந்தர்ராஜுக்கு சிந்திக்கவே தெரியாது, அவர் அறிவு வேலை செய்யாது என்று யாராவது கூறினால் அவர் அதை ஒப்புக் கொள்ள மாட்டார். அறிவாலும், சிந்தனையாலும் அநேக பயன்பெறும் மனிதர்கள் அதே அறிவு சிந்தனையைக் கொண்டு தன்னைப் பற்றியும் தன்னைப் படைத்த ஒரு பெரும் சக்திப் பற்றியும் சிந்திக்க மறுக்கிறார்கள். அப்படியே சிந்திப்பதாக சொன்னாலும் தனது சொந்த வாழ்விற்காக இருக்கும் அந்த நேர்த்தியான சிந்தனை இறைவன், ஆன்மீக விஷயத்தில் அவர்களிடம் இல்லை. தன்னை விட மகா மகா மட்டமானவைகளையெல்லாம் இறைவன் என்று கருதி அந்த சர்வ சக்தியை கொச்சைப் படுத்துவதைத்தான் அவர்களின் அறிவு அல்லது சிந்தனை ஆன்மீகக் காரியங்களில் செய்கி்ன்றது. இது இறைவனை கோபமடைய செய்கின்றது என்றால் அது இறைவனின் தவறல்ல.

2) அவர்களுக்கு கண்கள் உள்ளன அவற்றைக் கொண்டு அவர்கள் பார்ப்பதில்லை.தனது கண்களால் ஆயிரக்கணக்கான காட்சிகளை தன் வாழ்நாளில் பார்க்கும் மனிதன், தனது பார்வையை இறைவனோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளுவதில்லை. தினமும் ஓராயிரம் முறை வானமும் நாம் வாழும் பூமியின் பகுதிகளும் அதில் உலவும் அனேக உயிரினங்களும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. அதன் அத்தாட்சிகள் என்ன என்பதை மட்டும் அகக்கண்கள் கண்டுக் கொள்வதில்லை. ஆனால் நல்லுள்ளங்களுக்கு இவறறின் அத்தாட்சிகள் தெரியவே செய்யும்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்களின் மனங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்) (அல் குர்ஆன்: 3:190-191)
3)அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.மேற் சொன்ன உதாரங்கள் இங்கும் பொருந்தும். இன்றைக்கு ஒளிமயமான இந்த உலகில் நம் காதுகளில் எத்துனைவித ஓசைகள், இசைகள், பேச்சுக்கள் நுழைகின்றன. ஆனால் உண்மையான இறைவன் குறித்த செய்திகள் எத்துனை காதுகளில் நுழைகின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கண்களிருந்தும் குருடர்களாக, காதுகள் இருந்தும் செவிடர்களாக, இதயங்கள் இருந்தும் பயனற்றவர்களாக இருப்பவர்களை நாம் எப்படி சுட்டிக் காட்டுவோமோ அப்படித்தான் இறைவனும் சுட்டுகிறான்.

அவர்கள் கால் நடையைப் போன்றவர்கள்- அதை விடக் கீழானவர்கள் என்று.

இதயம் - அறிவு - பார்வை - செவிப்புலன் என்று இத்துனை அற்புதங்களை கொடுத்து மனிதன் படைக்கப்பட்டிருந்தும் அதைப் பயன்படுத்தி நல்வழிப் பெறாதவர்களுக்கு தண்டனைக் கொடுப்பதில் சகோதரர் என்னத் தவறைக் கண்டார்? இன்னும் சொல்லப் போனால் இந்த வசனம் ஒரு அக்கறையின் வெளிபாடாகும்.

ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் குறித்து ஆசிரியர் இப்படிக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்'இவன் போற போக்கைப் பார்த்தால் தோல்வியடைவான். தெளிவாக பாடம் நடத்தினாலும் புத்தகத்தை திறந்து பார்க்க மாட்டேங்கிறான், பாடத்தையும் செவிதாழ்த்திக் கேட்பதில்லை, பிற மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது போன்றுதான் இவனுக்கும் சொல்கிறோம் அதை சிந்திப்பதில்லை. இப்படியே போனால் இவனை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? ஆண்டு இறுதியில் தோல்வியடைந்தால் வாழ்க்கையும் தொலைந்துப் போகும்" என்ற ஆசிரியரின் ஆதங்கம் மாணவனின் மீதுள்ள அக்கறையின் வெளிபாடாகும். இப்படியெல்லாம் சுட்டிக் காட்டாமல் அவன் தோல்வியடைந்தால் நான் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டியிருக்கக் கூடாதா...? என்று அவன் கேட்கக்கூடும் அல்லது அவன் சார்பாக பிறர் கேட்பார்கள். அதனால் அவன் செய்யும் தவறின் முடிவு இப்படி அமையும் என்று சொல்லிக் காட்டுவது அக்கறையின் அடையாளம். இதையும் புறக்கணித்தால் அதற்கான முழு குற்றப்பொறுப்பும் அவனைச் சார்ந்ததாகும்.

இறைவன் அந்த அக்கறையை இந்த வசனத்தில் வெளிபடுத்துகிறான். வீண் தர்க்கம் செய்தால் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமையும்.

...........................................
sundararaj said...

எனது கேள்வி விதி என்ற தலைப்பின் கீழ் வருவதை வேண்டுமானால் ஓரளவு ஒத்துக்கொள்ளலாமே தவிர ஆசிரியர் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு விஞ்ஞானி இப்ப்டி சொல்கிறார் என வைத்துகொள்வோம்:

"நான் சில ரோபோட்களை நிச்சயமாக் அக்கினியில் போட உருவாக்கி உள்ளேன்.அதற்கு கண் உண்டு ஆனால் பார்க்காது, காத்துண்டு ஆனால் கேட்காது. கால் உண்டு ஆனால் நடக்காது" என்றால் அதற்கு அர்த்தம்?

அவர் உருவாக்கிய ரோபோட்களின் குணாதிசயங்களை தான் அவர் சொல்கிறார் தவிர அவர் உருவாக்கியதன் காரணத்தையோ அதன் மேலுள்ள அக்கறையினலோ சொல்லவில்லை என்பதை சாதாரண மனிதன் கூட புரிய முடியும்.

இப்படி இருக்கும்போது விஞ்ஞானியைவிட சர்வவல்ல இறைவன் நிச்சயமாகவே நான் நரகத்துக்கக் படைத்தேன் என்று சொன்ன பிறகு அவரகள் தப்பிக்க வழி எது?இறைவன் இங்கு சர்வாதிகார ஆட்சியா நடத்துகிறார்?

தவறு செய்தால் நரகமதான் போவாய் என்பது வேறு, நான் நிச்சமாக நரகதுக்காக படைத்தேன் என்பது வேறு.

இறைவனை இருக்கிறார் என அறிவது எவ்வளவு முக்கியமோ அது போல எது உண்மையான இறைவனின் வார்த்தை என பகுத்தரிவதும் மிக முக்கியம். அத்தர்ககத்தான் இந்த கேள்வியை கேட்டேன்.

முதல் கேள்விக்கே சரியான பதில் இல்லை. போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

November 20, 2007 12:29 AM
..................................
'நான் எதிர்பார்க்கும் விதத்தில் பதில் அமைந்தால் தான் தொடர்வேன்' என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

எல்லாவிதத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, நன்மைத் தீமைகளை பிரித்தாய்ந்து எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ள மனிதனை ரோபோக்களோடு பொருத்திப் பார்ப்பது நல்ல உதாரணம் தானா சகோதரரே...

ஒன்றைப் புரிந்துக் கொள்வதில் நிதானம் வேண்டும். ஒரு வசனத்தில் முதலிலுள்ள வரியை அப்படியே நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று முடிவெடுத்தால் அதை தொடர்ந்து வரும் வரிகளுக்கு என்ன பொருள் கொடுப்பது. அர்த்தமில்லாமல் ஆக்குவதா...?

முழுவசனத்தையும் படித்து அதிலிருந்து அர்த்தத்தைப் புரிந்துக் கொள்வது சரியா... ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கண்டுக்காமல் விடுவது சரியா..

இறைவன் நரகத்துக்காகத்தான் படைத்துள்ளான் என்பது சரி என்றால், அந்த வசனத்திற்கு அதுதான் பொருள் என்றால் அதை தொடர்ந்து வரும் உதாரணத்தை கூற வேண்டிய அவசியமே இல்லை. நரகத்துக்காக படைத்துள்ளேன் என்று மட்டும் கூறிவிட்டால் போதும். அப்படி இறைவன் கூறவில்லை.

நரகத்துக்குரியவர்கள் என்று கூறி தொடர்ந்து உதாரணம் அல்லது அறிவுரை சொல்லப்பட்டால் அந்த அறிவுரைக்கு - உதாரணத்திற்கு கட்டுப்படாதவர்கள் நரகத்துக்குரியவர்கள் என்பது சாதாரணமாக விளங்கும். இப்படி சொல்வது எல்லா மொழிகளுக்கும் உரிய பொதுவான இயல்பாகும்.

'சுந்தர்ராஜ் புரிந்துக் கொள்ள சிரமப்படுகிறார்.
அவருக்கு ஹிந்தி மொழியும் தெலுங்கு மொழியும் தெரியாது' என்று ஒரு வசனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த வசனத்தில் முதலில் இடம் பெறும் 'சுந்தர்ராஜ் புரிந்துக் கொள்ள சிரமப்படுகிறார்' என்ற வார்த்தையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொண்டு அவருக்கு தமிழ் ஆங்கிலம் உட்பட எந்த மொழியும் தெரியாது. அவர் எதையும் புரிந்துக் கொள்ள மாட்டார் என்று யாராவது விளக்கமளித்தால் அதை சுந்தர்ராஜால் சரிகாண முடியுமா... 'முழு வசனத்தையும் படித்து விளங்குங்கள் - விளக்குங்கள் என்று அவர் சம்பந்தப்பட்டவருக்கு அறிவுருத்த மாட்டாரா...

இந்த வசனமும் அப்படி அமைந்ததுதான். முழு வசனத்தையும் படித்து அதிலிருந்து எதை விளங்குகிறீர்களோ அதை கேள்வியாக வையுங்கள். அந்த வசனம் எந்த நெருடலும் இல்லாமல் தெளிவாக ஒரு கருத்தை முன் வைக்கும் வசனமாகும். அறிவு - பார்வை - செவிப்புலன்களை முறையாக பயன்படுத்தாதவர்களுக்கு நரகம் என்ற தண்டனையுண்டு என்பதே அந்த வசனத்தின் பொருள் என்பதை விளங்குவீர்கள் என்று நம்புகிறோம்.
 

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks