Tuesday, May 17, 2011
பதில்கள் தொகுப்பு - 23
வஹ்ஹாபிகள் என்றால் யார்
மனிதன் சிறப்பிக்கப்பட்டதன் அர்த்தம் என்ன
பெண்ணாசையால் இரண்டாம் மணம் செய்வது சரியா
ஷேர் மார்க்கட்
போலிஸ்காரர் வெட்279) கேள்வி - அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் சுலைமான். நான் துபாயில் பணியாற்றுகிறேன் எனக்கு இன்ஷா அல்லாஹ் இன்னும் மூன்று மாதத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது நான் தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவன் அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் என்ன சொல்லி இருக்கிறார்களோ அதன்படி வாழ ஆசைப்படுகிறேன். என்னுடைய வினா என்ன வென்றால் குழந்தை பிறந்தால் நாற்பது என்ற ஒரு சடங்கு நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது அது நமது இஸ்லாத்தில் இல்லை என்பதும் எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் குழந்தை பிறந்தவுடன் நம் சொந்த பந்தங்கள் குழந்தையை பார்க்க விரும்புவார்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பார்க்க வேண்டும் அது இறைவனும் அவன் ரஸூலும் கூறிய முறையில் இருக்க வேண்டும் இதற்கு குர்ஆன் ஹதீஸ் முறையில் சிறந்த விடையை விரைவாக எதிர்பார்க்கிறேன்.
***
குழந்தைப் பிறந்தால் பொதுவாக பெண்கள் 40 நாட்கள் பிரசவ தீட்டு என்று ஒதுங்கி இருக்கும் பழக்கம் உள்ளது. நபி(ஸல்) காலத்திலும் 40 நாட்கள் என்ற எண்ணிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் இந்த எண்ணிக்கையை இஸ்லாம் சொல்லவில்லை. குழந்தைப் பிறந்ததால் ஏற்பட்டுள்ள கர்ப்பப் பை பலவீனம், இரத்த கசிவு போன்றவற்றால் அந்தப் பெண்களாகவே அந்த காலஅளவுக்கு ஒதுங்கி இருப்பார்கள். எனவே அவற்றை ஆதாரமாக்கி 40 கொண்டாடக் கூடாது. குழந்தைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை நாட்களில் தூய்மையாகின்றாரோ அந்த நாளிலிருந்து அவர் மீது தொழுகை - நோன்பு போன்றவை கடமையாகிவிடும். மேலதிக விளக்கத்திற்கு சட்டங்கள் பகுதியில் இடம் பெற்றிருக்கும் 'குழந்தைப் பிறந்தால்..' என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
-------------------------------
280) கேள்வி - வஹாபிகள் என்று சிலர் சிலரை அழைக்கின்றார்கள் வஹாபிகள் என்ற பெயர் எவ்வாறு வந்தது? வஹாபிகள் யார்?***
ஓர் இருபது வருடங்களுக்கு முன் தமிழக முஸ்லிம்களிடம் ஒருவித பயத்தையும் பின்னர் சர்ச்சையையும் உருவாக்கி அதன் பின்னர் பலவழிகளில் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு பெயரைப் பற்றி மிக தாமதமாக கேட்டுள்ளீர்கள். ரஸூல்(ஸல்) மறைவுக்குப் பிறகு மார்க்கத்தில் ஏராளமான புதிய வணக்கங்கள் மார்க்கத்தின் பெயரால் மார்க்க வழிகாட்டிகள் என்று கணிக்கப்பட்டவர்களாலும் சற்று இஸ்லாமிய சிந்தனைமிக்க ஆன்மீக வாதிகளாலும் உருவாக்கப்பட்டன. ஷாபி - ஹனபி போன்ற ஆன்மீகப் பிரிவினைகள், அந்தப் பிரிவினைகளால் உருவாகிய உட்பிரிவு சட்டக் கோளாறுகள் போன்றவை நடைமுறைக்கு வந்தன. ஆங்காங்கே தர்காக்களும், கொடிக் கம்பங்களும் தலைக் காட்டி இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் காரியத்தை செய்யத் துவங்கின. இப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் சவுதி அரேபியாவில் இருக்கும் நஜ்த் என்றப் பகுதியில் பிறந்து வளர்ந்த முஹம்மத் பின் அப்துல் வஹாப் (அப்துல் வஹாபின் மகன் முஹம்மத்) என்பவர் சமுதாயத்தை உற்று நோக்குகிறார்கள். (இது நடந்தது சுமார் 350 வருடங்களுக்கு முன்) இறை வேதத்தை ஆழ்ந்த பற்றுடன் அணுகிய அவர்களுக்கு மக்களின் இஸ்லாமிய சடங்குகள் மிக வினோதமாக தென்பட்டன.
யூத மதமும் - கிறித்துவ மதமும் எப்படி அந்த மதத்தின் வழிகாட்டிகளால் கறைப்படுத்தப்பட்டு இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளானார்களோ அதேப்போன்று இந்த மக்களும் செய்கிறார்களே குர்ஆனில் இல்லாதவற்றையெல்லாம் செய்கிறார்களே.. நபி(ஸல்) சொல்லிக் கொடுக்காதவற்றையெல்லாம் செய்கிறார்களே... இது தொடர்ந்தால் இஸ்லாத்தின் தூய்மைக் கெட்டுவிடுமே, இந்த மக்களும் நரகத்திற்கு போகும் நிலை உருவாகுமே.. என்ற சிந்தனையில் குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாதது எதுவும் இஸ்லாமாக முடியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
எந்த சீர்திருத்தவாதியும் சிந்திக்கக் கூடிய பிரச்சனைகள் போன்று இவர்களும் பல இன்னல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்தார்கள். 'கொள்கை தெளிவுபடுத்தப்படுவதே இன்றைய தேவை' என்று அவர்கள் மிக உறுதியாக இருந்ததால் தனக்கு எதிரான இடற்பாடுகளையெல்லாம் அவர்கள் பெரிய துன்பமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் பிரச்சாரம் முடக்கப்படும் அபாயமான காலகட்டங்களெல்லாம் உருவாயின. ஆட்சியாளரின் துணை இல்லையென்றால் இந்த உன்னதமான சிந்தனையை மக்களிடம் கொண்டுப் போவது கடினம் என்பதை உணர்ந்த முஹம்மத் அவர்கள் ஆட்சியாளரை சந்திக்கிறார்கள். தன் நிலைப்பாட்டையும் அதன் அவசியத்தையும் புரியும் விதத்தில் விளக்குகிறார்கள். இறைவன் ஆட்சியாளரின் துணையை அவரது பிரச்சாரத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
ஓரிறைக் கொள்கையே உயிர்நாடி அதற்கெதிரான எதுவும் இந்த மண்ணில் நிலைப் பெறக் கூடாது அதன் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்ற சத்தியவாதம் அனலாய் அரபகம் முழுதும் பரவுகிறது. எதிர்க்கேள்விகள் - விமர்சனங்களுக்கு குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களுடன் முறையாக பதிலளிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையில் மாற்றங்கள் வர துவங்குகின்றன. தர்காக்கள் என்ற ஷைத்தானிய மடங்கள் பூமியில் புதையுண்டன. குர்ஆனும் நபிவழியுமே இஸ்லாம் அதுவே மார்க்கம் என்ற பேச்சும் செயலாக்கமும் வீரிட்டு எழுந்து அரபகத்தை ஆட்சிப் புரிய துவங்கின. இந்த எழுச்சிக்கு முன்னோடியாக இருந்தவர் பெயர் முஹம்மத், இவர் அப்துல் வஹாப் என்பவரின் மகன்.
இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பது மாற்றுக் கொள்கையாளர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களை 'முஹம்மதி' என்று அடையாளப்படுத்தினார்கள். (அதாவது இவர்கள் முஹம்மதை சார்ந்தவர்கள் என்பது அதன் பொருள்) பின்னர் அவர்களாகவே சிந்தித்தார்கள் முஹம்மத் என்பது இறைத்தூதரின் பெயர் எனவே அந்தப் பெயரை கொடுத்தால் இறைத்தூதரைப் பின்பற்றுவதாக ஆகிவிடும் எனவே பெயரை மாற்றுவோம் என்று அவரது தந்தைப் பெயரால் வஹ்ஹாபி (வஹ்ஹாபை சார்ந்தவர்கள்) என்று குறிப்பிடத் துவங்கினார்கள். வஹ்ஹாப் என்பது இறைவனின் பெயர் வஹ்ஹாபிகள் என்றால் இறைவனை சார்ந்தவர்கள் என்பது பொருள். இதைக் கூட மாற்று சிந்தனையாளர்கள் விளங்கவில்லை என்றால் அவர்களை நாம் என்னவென்பது.
அவர்கள் நம்மைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று குறிப்பிட்டாலும் நாம் நம்மை வஹ்ஹாபிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ள மாட்டோம் ஏனெனில் இறைவன் நமக்கு 'முஸ்லிம்கள்' என்று பெயரிட்டு அவ்வாறே குறிப்பிட்டுக் கொள்ள சொல்கிறான் என்பதால் நம்மை நாம் முஸ்லிம்கள் என்றே அடையாளம் காட்ட வேண்டும்.
--------------------------------
281) கேள்வி - என்னுடைய கேள்விக்கு வரும் முன்னால் நான் தெரிவித்துக் கொள்வது: அல்லாஹ் வழங்கிய இஸ்லாமிய மார்க்கம்தான் உண்மையானது. அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமும் இதுதான். மேலும் திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தைதான் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் சத்தியமானவை. நான் கீழே கேட்டுள்ள கேள்விகளை மார்க்கத்தின் நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வதற்காகவே கேட்டுள்ளேன். அழகிய இஸ்லாமிய மார்க்கத்தையோ, அல்-குர்ஆனையோ ஒருபோதும் குறைக்காண்பதற்காக அல்ல. நான் பிழையாக ஏதாவது கேட்டிருந்தாலும் அது முழுக்க முழுக்க என்னுடைய அறியாமையே தவிர வேறில்லை. இனி எனது கேள்விக்கு வருகிறேன்.
கேள்வி 1
அல்லாஹ் குர்ஆனில் மனிதர்களை மற்ற படைப்புகளை விட மிக சிறப்பானப் படைப்பாக படைத்துள்ளதாக சொல்கிறான். இதை சிந்திக்கும் வேளையில் குர்ஆனின் வேறு சில வசனங்களில் ஜின்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மனிதர்களை விட வல்லமை படைத்தவர்களாக அல்லாஹ் விவரிக்கின்றான். வானங்களுக்கு மேலேச் சென்று சொர்க்கத்தில் பேசப்படும் விஷயங்களை செவியேற்று வருகிறார்கள் (தற்சமயம் அவர்கள் அவ்வாறு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவேன்). ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக் கட்டத்தில் உள்ள மனிதர்களாகிய நம்மால் நம்முடைய பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தையே எட்ட முடிந்துள்ளது. நாம் இன்னும் கண்டுபிடித்திராத எத்தனையோ பிரபஞ்சங்கள் உள்ளன என்பது தனி விஷயம். விண்வெளி ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஜின்கள் இவ்வாறு வானங்களுக்கு மேல் சென்று வருவது மிகவும் பிரம்மிக்கத்தக்க செயலாகும். இவர்களது பயணத்தோடு ஒப்பிடும்போது நாம் ஜூபிடருக்கோ, மார்ஸூக்கோ போய் வருவது பெரிய காரியமில்லை. (கொலம்பியா என்ற வின்வெளி ஓடத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் மறந்து விடவில்லை). மேலும் சுலைமான் (அலை) அவர்களது வரலாறில் அவர்கள் உத்தரவிட்டதும் தெலைதூரத்தில் உள்ள ஒரு மன்னனின் அரியணையை ஒரு ஜின் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொண்டு வந்து அவர்கள் முன்னால் வைத்து விடுவதாக சொல்கிறது. நேரத்தையும், தூரத்தையும் வென்று விடக்கூடிய வல்லமையை அல்லாஹ் ஜின்களுக்கு இவ்வாறு வழங்கியிருக்கும்போது, மனிதர்களை நினைத்துப் பாருங்கள் இது நம்மால் சாத்தியமா என்று!? ஆக அல்லாஹ் எதனால் மனிதர்களை சிறப்பான படைப்பு என்று கூறுகிறான்?
இதே போல் நான் மலக்குகளைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறேன். என்னே அற்புதமான படைப்புகள் அவர்கள். நினைத்த மாத்திரத்தில் வானங்களை எல்லாம் கடந்து பூமிக்கு வருகிறார்கள். எந்தத் தடையுமின்றி கப்ருகளுக்கு உள்ளேயிருந்து நேரே சுவர்க்கம் வரை சென்று வருகிறார்கள். பசியோ, தாகமோ, களைப்போ, உறக்கமோ அவர்களுக்கு கிடையாது. நம்மை எடுத்துக் கொண்டால் இந்த பலகீனங்களுக்கெல்லாம் நாம் தினந்தோறும் உள்ளாகிறோம். நோயையோ, மரணத்தையோ நம்மால் தவிர்க்க முடியாது. ஆக நாம் படைப்பினங்களில் சிறந்தவர்கள் என்றால் அல்லாஹ் நம்மை ஜின்களை விடவும், மலக்குகளை விடவும் சக்தி மிக்கவர்களாக அல்லவா படைத்திருக்க வேண்டும்? அதோடு மட்டுமில்லாமல் ஜின்களையும், மனிதர்களையும் பற்றி வருகின்ற எல்லா வசனங்களிலேயும் அல்லாஹ் ஜின்களைத்தான் முதலில் குறிப்பிட்டுள்ளான்.
இந்த கேள்விகளை எழுப்புகிற அதே சமயத்தில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மனிதராக படைத்து அவர்களுக்கு மலக்குகளையும், ஜின்களையும் சுஜூத் செய்யச் சொல்கிறான் என்பதையும், தன்னுடைய நபிமார்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் செய்வதற்கு மலக்குகளையும், ஜின்களையும் அல்லாஹ் பயன்படுத்தியும் உள்ளான் என்பதையும், இன்னும் நமக்கு தேவையான உதவிகளையும் அல்லாஹ் அவர்களைக் கொண்டே இப்போதும் செய்து வருகிறான் என்பதையும், சுலைமான் நபிக்கு கட்டுபடும்படி ஜின்களை பணித்தான் என்பதையும் உணர்ந்து நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
அல்லாஹ் மனிதர்களை எவ்வகையில் சிறப்பினமாக படைத்துள்ளான் என்பதுதான் எனது கேள்வி?
கேள்வியும் நானே.. பதிலும் நானே... என்பது போல மேலே கேள்வியை எழுப்பிவிட்டு அதற்கு நெருக்கமான பதிலை கீழே கொடுத்தும் உள்ளீர்கள். ஆனாலும் விளங்கும் விதமாக இன்னும் கூடுதலாக விளக்குவோம்.
இறைவனின் படைப்பினங்களில் எல்லாவற்றையும் விட மனிதனே சிறந்தப் படைப்பு என்று குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
ஆதமுடைய சந்ததியை மேன்மைப் படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் ) என்றும்,
மனிதனை மிக்க அழகான வடிவத்தில் (பகுத்தறிவுத் தோற்றம்) படைத்திருக்கிறோம் (அல் குர்ஆன் 95:4) என்றும் தான் இறைவன் கூறுகிறான்.
இதைத்தான் நீங்கள் எல்லாவற்றையும் விட சிறந்த படைப்பு என்று விளங்கி விட்டீர்கள் போலும். மனிதன் சிறப்பிக்கப்பட்டுள்ளான் என்பது உண்மை ஆனால் 'எல்லாவற்றையும் விட' என்பது கிடையாது. ஒரு விதத்தில், ஒரு காரியத்தில், ஒரு நேரத்தில், ஒரு விஷயத்தில் ஒன்று சிறந்து விளங்கினால் அது எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி விட்டது என்று புரிந்துக் கொள்ளக் கூடாது.
நன்மையை தீமையை பிரித்துணரும் அறிவோடு படைக்கப்பட்ட மனிதன், கற்றுணர்ந்து போதிக்கும் தகுதியைப் பெற்றுள்ள மனிதன் ஒரு சந்தர்பத்தில் மலக்குகளுக்கு பாடம் நடத்தியுள்ளான் என்பதால் அவன் எல்லாவிதத்திலும் மலக்குகளை விட சிறந்தவன் என்ற நிலையைப் பெற்றுவிட மாட்டான். மலக்குகளின் வணக்கங்களுக்கும் கீழ்படிதலுக்கும் முன் மனிதர்களின் வணக்கமும் கீழ்படிதலும் ஒன்றுமே கிடையாது. அந்த விஷயத்தில் என்றைக்கும் மலக்குகள் தான் உயர்ந்து நிற்பார்கள்.
கல்வியில் மனிதன் உயர்ந்தவன் - சிறப்பிக்கப்பட்டவன் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே மலக்குகளுக்கு பாடம் நடத்த சொல்லி மனித அறிவை இறைவன் வெளிபடுத்திக் காட்டினான். அதே கல்வியறிவால் ஜின்களை விட மனிதன் உயர்ந்தே இருக்கிறான். இதற்கு குர்ஆனிலுள்ள ஆதாரத்தைப் பாருங்கள்.
தாவூதுக்கும் சுலைமானுக்கும் நாம் கல்வியை அளித்தோம். (அல் குர்ஆன் 27:15)
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டு சுலைமானுக்காக அணிவகுக்கப்பட்டது. (அல் குர்ஆன்: 27:17)
இந்த வசனங்களிலிருந்து கல்வியே இதர படைப்பினங்களை கட்டுபடுத்தும் விதத்தில் மனிதனை சிறப்பித்துள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம். எந்த ஒரு வசனத்திலும் மனிதன் இதர படைப்பிற்கு கட்டுப்பட்டு நடந்தான் என்று கூறப்படவேயில்லை.
கல்வியும், வல்லமையும் எது சிறந்தது?
ஒன்று வல்லமை மிக்கதாக இருப்பதால் மட்டும் அது மனிதனைவிட சிறந்ததாக ஆகிவிட முடியாது. உதாரணமாக மிருகங்களில் யானையை எடுத்துக் கொள்ளுங்கள். இது நூற்றுக்கணக்கான மனிதர்களின் வலிமையை விட பலம் பெற்றதாகும். இதன் உடல் வலிமைக்கு முன் மனிதனின் உடல் வலிமை தூசு என்றாலும் ஒரு யானைப்பாகன் சின்னஞ்சிறு குச்சியை கைகளில் வைத்துக் கொண்டு அத்துனை வலிமை மிக்க யானையை தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து விடுகிறான். இங்கு யானையின் உடல் வலிமையை விட மனிதனின் கல்வி - அறிவு வலிமை மிக்க பலம் வாய்ந்ததாகி விடுகிறது.
பறக்கும் திறனிலும் நீந்தும் திறனிலும் பறவைகளும் - மீன்களும் மனிதனைவிட வலிமை மிக்கவைகள் தான். இவற்றால் அது மனிதர்களை விட சிறந்ததாக ஆகிவிடுமா..?
அதே போன்றுதான் ஜின்களும். அதற்கு பறக்கும் வலிமையை இறைவன் கொடுத்துள்ளான் என்பது ஒரு கூடுதல் தகுதிதானே தவிர மனிதனைவிட சிறப்புப் பெறுவதற்குய தகுதியல்ல. மனிதர்களை விட ஜின்களே சிறப்புப் பெற்றவை என்பதை அதன் சக்தியை வைத்து நாம் விளங்கினால் அது மனிதருக்கு கட்டுப்பட்டு நடந்த விதத்திலும் மனிதரே (முஹம்மத்(ஸல்) அவர்களே) அவற்றிற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட விதத்திலும் முரண்பாடுகள் வந்து விடும்.
வானம் வரை பறந்து சென்று ஒட்டுக்கேட்கும் தகுதியை ஜின்கள் பெற்றிருந்தால் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே வானங்களில் நடப்பவற்றை (விண்கலங்களின் வழியாக) அறியும் சக்தியை மனிதன் பெற்றுள்ளான். ஒரு காரியத்தை அது நடக்கும் இடம் சென்று அறிவது வல்லமையா? அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே அறிவது வல்லமையா?.. இங்கும் மனிதன் தன் அறிவால் ஜின்களைவிட சிறந்துதான் விளங்குகிறான்.
ஆற்றலால் ஜின்கள் சிறந்து விளங்குவதை விட அறிவால் மனிதன் சிறந்து விளங்குவதால் அவன் ஜின்களை விட சிறந்தவனாகத்தான் இருக்க முடியும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
----------------------------
282) கேள்வி - பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றானாலும், நபி (ஸல்) அவர்களால் செய்துக் காட்டப்பட்ட ஒன்றானாலும், தார்மீக அடிப்படையில் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அதுவும் முதல் மனைவியின் அனுமதியின்றி செய்வது சரியான செயலா? காரணம், நபி (ஸல்) அவர்கள் பல மனைவிகளை மணந்தது பல்வேறு சூழ்நிலை மற்றும் தகுந்த காரணங்களின் அடிப்படையில்தான். ஆனால் தற்போது ஆண்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னத் என்று கூறிக்கொண்டு பலதார மணம் செய்கின்றனர். இதற்கு வேறு எந்த தகுதியான காரணங்களும் இல்லை. பெண்ணாசை மட்டும்தான் இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது என்பது வெளிப்படை.
திருமணத்தில் தாம்பத்யம் தவிர்க்க முடியாத முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அதையும் தாண்டி அன்பு, பரிவு, புரிந்துணர்வு, பரஸ்பர சந்தோஷம் ஆகியவையும் முக்கியமானவை. இவைகளை உடலுறவின் வழியாகத்தான் பெருக்கிக் கொள்ள முடியும் என்றாலும் அதற்கு மட்டுமே முதலிடம் கொடுத்து விட முடியாது.
எனவே, என்னுடைய கேள்வி என்னவென்றால்: எவ்வித சரியான காரணமும் இல்லாமல் வெறும் மனோஇச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பலதார மணம் செய்துக் கொள்ள நாடும் கணவன்மார்களை அவர்களது முதல் மனைவிகள் தடுக்க உரிமை உண்டா? அவ்வாறு செயல்படும் தனது கணவர் மீது ஷரிஅத் படி முதல் மனைவி வழக்குத் தொடர முடியுமா? விளக்கம் தேவை.
***
அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)
அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.
இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருக்கும் போதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.
தார்மீக அடிப்படையில் இது ஏற்றுக் கொள்ளத் தக்க செயலா.. என்று கேட்கிறீர்கள். இறைவன் அனுமதித்த ஒரு காரியத்தில் (நமக்கு விளங்காவிட்டாலும்) தார்மீகக் காரணங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். எந்த ஒரு சட்டத்தையும் போதிய நியாயமில்லாமல் இறைவன் இயற்றவில்லை.
ஆண் தரப்பில் நின்று பார்த்து 'பெண்ணாசையால் தான் இவர்கள் இரண்டாம் திருமணம் செய்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டை வைக்கும் நாம், பெண்கள் தரப்பில் நின்று சிந்தித்து கூடுதலாக சில பெண்களுக்கு வாழ்க்கைக் கிடைத்துள்ளதையும் புரிந்துக் கொள்ளத்தான் வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பலதாரமணம் நடப்பதால் சில - பல விதவைப் பெண்கள், தலாக் சொல்லப்பட்டப் பெண்கள், வறுமையின் பிடியில் சிக்கி வாழ்க்கைக்காக ஏங்கும் பெண்கள் இவர்களுக்கு வாழ்க்கைக் கிடைக்கின்றது.
உண்மையில் பெண்ணாசையில் - பெண்ணாசையில் மட்டும் - ஒருவன் இன்னொரு திருமணம் செய்தாலும் அப்போதும் அவனை குறைச்சொல்ல முடியாது. ஏனெனில் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே அவன் தனது தேவையை நிறைவேற்றியுள்ளான் என்ற நியாயமே அங்கு முன்னிலையில் நிற்கும்.
இன்னொன்றையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகம் போன்ற இடங்களில் ஒருவன் இன்னொரு திருமணம் செய்ய நாடுகிறான் என்றால் முதல் மனைவியிடம் அவன் எதிர்பார்க்கும் விஷயத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். அது இஸ்லாமியக் கல்விக் குறைப்பாடாகவோ அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் 'மாட்டேன்' என்ற மறுப்புக் காரணமாகவோ அல்லது தாம்பத்ய உறவில் ஏற்படும் கோளாறுகளோ அல்லது கணவனுக்கு கட்டுப்படும் தன்மையின்மையில்லாத காரணத்தினாலோ.. இப்படி ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். நமக்குத் தெரிந்து இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டவர்களில் பலருக்கு நாம் இங்கு சுட்டிக்காட்டியுள்ள ஏதோ ஓர் இடற்பாடு இருக்கவே செய்தது.
குறைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை. கணவனிடம் உள்ள குறைப்பாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு அவர்களோடு வாழும் பெண்கள் இங்கு லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அந்த பண்பு கணவன்மார்களுக்கு இருக்கக் கூடாதா.. என்ற நியாயமான மறுப்பு இங்கு வரலாம்.
இந்த தரப்பிலும் அந்த பண்புள்ள ஆண்கள் லட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். வழித் தவறிப் போன மனைவிகளைக் கூட மன்னித்து, அரவணைத்து - ஆதரித்து வாழும் கணவர்களைக் கூட இங்கு காணலாம். மனைவியிடம் குறைப்பாடு தென்பட்டவுடன் அனைத்து ஆண்களும் உடனே இன்னொரு திருமணத்திற்கு தயாராகி விடுவதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட அன்பு - பண்பு - பாசம் - பரிவு - புரிந்துணர்வு இவை இல்வாழ்க்கைக்குத் தேவையான அரண்கள் தான் என்றாலும் இவைகளைக் கடந்துப் போன மனநிலையைப் பெற்றவர்களை என்ன செய்வது?
மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பதை பெண்கள் அறிந்து அதற்கு தன் கணவன் உட்பட்டு விடாதவாறு நடந்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த பட்சம் தன் கணவன் இன்னொரு கல்யாணத்திற்கு தயாராகிறான் என்ற அறிகுறிகள் தென்படும் போதாவது தன்னை உஷார் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது தனது கனவருக்கு எதில் நாம் குறைபாடு வைத்துள்ளோம் என்பதை சிந்தித்துணர்ந்து அதை சரி செய்துக் கொண்டாலே போதுமானது.
இரண்டாம் - மூன்றாம் திருமணங்கள் நடந்து முடிந்தவுடன் சண்டைப் போடுவதாலோ - கணவன் மீது எரிந்து விழுவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை. ஷரிஆ கோர்ட்டில் இந்த திருமணம் செல்லாது என்று வழக்குத் தொடரவும் முடியாது. ஏனெனில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கான 'தனியார் சட்டம்' பலதாரமணத்தை அனுமதித்துள்ளது.
-------------------------------
283) கேள்வி - மாற்றுமதத்தவர் வீட்டில் சாப்பிடலாமா..?***
விலக்கப்பட்டவைகளின் லிஸ்டை எடுத்துப் பார்த்தீர்களானால் அதில் உண்ணுவதற்கு தடுக்கப்பட்டப் பொருள்கள், உண்ணுவதற்கு தடுக்கப்பட்ட பொருளாதாரம் ஆகியவை விரிவாக கிடைக்குமே தவிர உண்ணுவதற்கு தடுக்கப்பட்ட இடம் என்று எதுவும் இருக்காது. உணவு அனுமதிக்கப்பட்டவையாக இருந்தால் மாற்றுமதத்தவர்கள் வீட்டில் சாப்பிடலாம் தடையொன்றுமில்லை.
----------------------------------
284) கேள்வி - ஷேர் மார்கெட் கூடுமா?***
பங்கு சந்தை என்பது பொருளின் மீது முதலிடு செய்து பொருளின் விலைக் கூடும் போது முதலீட்டை விற்று லாபம் பெறுவதாகும்.
டைடன் கம்பெனி புதிதாக ஒரு வாட்சை அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மொத்த முதலீட்டுக்கான தொகையில் பாதியை வெளியில் பங்குதாரர்களிடமிருந்து பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. நூறு பங்குதாரர்கள் இதில் சேரலாம் ஒரு பங்கின் விலை ரூ 1000 (புரிந்துக் கொள்வதற்காக குறைந்த தொகையைக் குறிப்பிட்டுள்ளோம்) என்று வகுக்கிறது.
இப்போது நூறு பங்குதாரர்கள் இந்த வியாபாரத்தில் இணைகின்றார்கள். உதாரணமாக 10 பங்குக்குறிய பணத்தை (10,000) நீங்கள் செலுத்தி பத்து பங்குதாரர் ஆகின்றீர்கள். இதேபோல் கூடுதலாகவோ - குறைவாகவோ நூறு பங்கு அந்த கம்பெனிக்கு கிடைத்து விடுகிறது. வாட்ச் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தவுடன் அதன் தரம் சிறப்பாக இருந்து நல்ல விற்பனையைக் கண்டால் அதன் மீது முதலீடு செய்த தொகை கூடுதல் லாபத்தைப் பெற்று உங்கள் பங்கின் தரம் உயரும். இந் நிலையில் உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் இந்த பங்கு தேவையில்லை என்று முடிவு செய்தால் நீங்கள் பெற்றுள்ள 10 பங்கையும் நீங்கள் பிறருக்கு விற்பனை செய்து விடலாம். நாம் முதலீடு செய்த பொருளின் மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து நம் பங்கின் மீது கூடுதல் லாபம் வைத்து விற்கலாம்.
நீங்கள் ஒரு பங்கை ரூ 1000, என்ற கணக்கில் எடுத்தீர்கள் இப்போது அதை ரூ 2000 என்று கூட நீங்கள் தீர்மானிக்கலாம். இதை தீர்மானிப்பதற்கு - அதாவது விலையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் என்று - ஏராளமான ஏஜண்டுகள் இருக்கிறார்கள். (இவர்களில் அனேகருக்கு ஹர்ஷத் மேத்தா தான் குரு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது)
உங்களது 10 பங்கையும் ரூ 20,000 க்கோ அல்லது கூடுதல் குறைவாகவோ நீங்கள் விற்று விட்டால் உங்களுக்கும் அந்த வியாபாரத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடும். உங்களிடமிருந்து பங்கை வாங்கியவர் அதைத் தொடர்வார்.
தேர்தல் களம், ஆட்சி மாற்றங்கள், சர்வதேச நெருக்கடி போன்ற நிலைகள் உள்நாட்டிலோ அகில உலகிலோ ஏற்படும் போது பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் அல்லது பங்கு சந்தையின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு தடைப்படும்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பங்குச்சந்தை இந்தியாவில் சில நாட்கள் ஆட்டம் கண்டது.
இதற்கு ஓர் உதாரணம் சொல்வதாக இருந்தால் ரிலையன்ஸ் பட்ட பாட்டை குறிப்பிடலாம்.
அதன் தரம் ரூ 474 என்ற அளவிற்கு கீழிறங்கியது. தேர்தல் நிலவரங்களின் அறிவிப்பு வர வர கிடுகிடு என்று மேலேறி 524 ஆகியது. பின்னர் பேரங்கள் முடிந்தவுடன் 511 என்று முடிவுக்கு வந்தது.
தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் பங்கு பெரும் வீழ்ச்சி அடையும் என்று பலரும் கருதினார்கள். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன் 'பங்குச் சந்தைக்கு வாழ்விருக்கு' என்று பலர் நிம்மதியடைந்தார்கள்.
இதுவே பங்குச் சந்தையின் நிலவரம்! எனவே இதைக் கூடாது என்று சொல்வதற்குரிய முகாந்திரங்கள் எதுவுமில்லை.
நிறைய லாபத்திற்காக வாய் பிளந்து காத்திருக்காமல் பங்கின் விலை உயரும் போது நம் பங்கை விற்று விடுவதே ஷேர்மார்ககெட் சூத்திரர்களின் சூட்சுமத்தின் அடையாளமாகும். இது கூடுதல் 'அட்வைஸ்'
--------------------------------
285) கேள்வி - நான் தற்போது அரபு நாட்டில் வசித்து வருகிறேன். நான் போலீஸ்காரர்களைப் போல் முடி வெட்டியுள்ளேன். இது ஹராம் என்று இங்கேயுள்ள அரேபியர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா? இதற்கு விளக்கம் தரவும்.***
சில இடங்கள் முழுவதுமாக மழிக்கப்பட்டு சில இடங்கள் மழிக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் காண்கிறார்கள். 'மழித்தால் முழுவதும் மழித்து விடுங்கள் அல்லது முழுவதும் மழிக்காமல் விட்டு விடுங்கள். இவ்வாறு செய்யாதீர்கள்' என்று கூறினார்கள்; என்ற ஒரு செய்தி 'அபூதாவூதில்' வருகிறது. இதை வைத்து அரபிகள் அவ்வாறு கூறுகிறார்கள் என்று கருதுகிறோம்.
இந்த ஹதீஸ் தலையின் சில இடங்களை மழித்து சில இடங்களை மழிக்காமல் விட்டுக் கொண்டு அலையும் அகோரமான நிலையை (மேலைநாடுகளில் இளைஞர்கள் பலர் இப்படி அலைந்துக் கொண்டிருப்பார்கள்) தான் நபி(ஸல்) தடுத்துள்ளதாக அறியமுடிகிறதே தவிர தேவைக்கு ஏற்றது போன்று முடியைக் குறைத்துக் கொள்வதை தடுத்துள்ளதாக அறிய முடியவில்லை. காதோரங்கள் மற்றும் பின்புறங்களில் முடியை குறைத்துக் கொள்வதை தடுக்கும் ஆதாரங்கள் எதுவும் எங்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. அப்படி கூறுபவர்களிடம் ஆதாரத்தைக் கேட்டு எங்களுக்கு எழுதுங்கள் பரிசீலிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
Labels:
பதில்கள் தொகுப்பு - 23
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment