Friday, June 10, 2011

கேள்வி பதில் தொகுப்பு - 9

                                                    
சூரியன் ஸஜ்தா செய்வதன் அர்த்தம் என்ன

     கடன் கொடுத்து நஷ்டம் அடையளாமா?

     தஸ்பீஸ் மணி

     நஜாத் என்றால் என்ன?

    நமது இயக்கம் என்ன?

   தொழுகையில் குறுக்கே செல்லலாம்!

   பெயர் நூருல் இனாயா!

    விலா எலும்பிலிருந்து எத்துனை மனைவிகள்?

     போலி குதுப்மார்கள்!

    செடிகளை அழகுபடுத்தலாம்!


101 கேள்வி : ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். அதற்கு நபிகள்  அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சூரியனானது தன்னுடைய இறைவனிடம் 'நாளை காலை நான் உதிக்கவா? என்று வினவுவதாகவும் அதற்கு இறைவன் 'ஆம்' என்று சொல்வதாகவும், இவ்விதமான உரையாடல் மறுமை நாள் ஏற்படும் வரையில் தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முரண்படுகிறதா? என்பதை விளக்கவும். இந்த ஹதீஸை நான் ஸஹீஹ் புகாரியில் கண்டேன். ஜாஸ்மின் - தமிழ் மெயில் வழியாக.

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் புகாரியில் 3199 எண்ணில் இடம் பெற்றுள்ளது. முதலில் ஹதீஸை பார்ப்போம்.

நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின் அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு தொடர்ந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

விஞ்ஞான அடிப்படையில் சூரியன் கிழக்கிலோ மேற்கிலோ உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை. பூமியின் சூழற்சிதான் இத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது விஞ்ஞானம் நிருபித்துள்ள உண்மை என்றாலும் நடைமுறையில் யாரும் பூமி சுழன்று நகர்கிறது அதனால் விடிகிறது. பூமி நகர்கிறது அதனால் இரவு வந்துவிட்டது என்று சொல்வதில்லை. சூரியன் உதிக்கிறது சூரியன் மறைகிறது என்றுதான் சொல்கிறார்கள். சொல்லுவார்கள். சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்று கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூட சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்று தான் சொல்லுவார்கள். இப்படி சொல்லுவது விஞ்ஞான உண்மைகளுக்கு முரணானது என்று யாரும் எடுத்துக் கொள்வது கிடையாது.

பூமியின் சூழற்சியால் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது உண்மை என்றாலும் அதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை. நாம் உணரும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் விளங்குவதற்கும் விளக்குவதற்கும் சரியாக இருக்கும். இங்கு நாம் இரவு பகலை உணர்வது சூரியனை வைத்துதான் என்பதால் அதை வைத்துதான் விளக்க வேண்டியுள்ளது.  இஸ்லாம் ஒரு நடைமுறை சாத்தியமிக்க மார்க்கம் என்பதால் விஞ்ஞானத்திற்கு முரண்படாத அதே வேளை மனிதர்கள் விளங்கும் விதத்தில் தான் விபரங்களை எடுத்துக் கூறும். அந்த அடிப்படையில் தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று மக்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த ஹதீஸில் பேசப்பட்டுள்ளது.

சூரியன் ஒரு இடத்தில் நின்று இயங்கக் கூடிய நட்சத்திரமல்ல. அது தன்னை தானே சுற்றிக் கொள்வதுடன் தன்னை சுற்றி ஓடி வந்துக் கொண்டிருக்கும் இதர கிரகங்களையும் இழுத்து நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்கிறது என்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. சூரியனை சுற்றும் கோள்களுக்கு சுற்றுப்பாதை இருப்பது தெளிவாக தெரிந்து விட்ட நிலையில் சூரியனின் இயங்கு பாதை என்ன என்பது இன்னும் தெளிவாக விளங்கவில்லை. சூரியன் தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதை கண்டு விட்ட விஞ்ஞானிகள் அது எங்குதான் செல்கிறது என்பது குறித்து பலத்த அனுமானங்களில் இருக்கிறார்கள். இப்போது கீழுள்ள வசனத்திற்கு வாருங்கள்.

சூரியன் தன் வரையறைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. இது யாவற்றையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்குணர்ந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். (அல் குர்ஆன் 36:38)

இந்த வசனத்தை விளக்கும் போதுதான் நபி(ஸல்) மேற்கண்ட செய்தியைக் கூறுகிறார்கள். அதாவது இறைவனின் அனுமதியுடன் சூரியன் தன்னை சுற்றும் குடும்பத்தை இழுத்துக் கொண்டு செல்கிறது. ஒருகாலம் வரும் அப்போது சூரியனின் இயக்கத்திற்கு இறைவன் தடை விதிப்பான். அந்த தடையால் சூரியனும் பூமியும் இதர கோள்களும் தடுமாறிப் போகும். அந்த தடுமாற்றத்தின் விளைவு மக்கள் உணர்வதற்காக பூமியின் இயக்கத்தைக் கூட மாற்றிவிடும். இன்றைக்கு சூழுலும் திசைக்கு நேர் எதிர் திசையில் பூமி சூழல துவங்கினால் அன்றைக்கு சூரியன் மேற்கில் உதிக்கும். (சூரியன் மேற்கில் உதிப்பதாக இருந்தால் பூமி தன் இயக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதும் மக்கள் பூமி தன்னை மாற்றி சுற்றுகிறது என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று தான் சொல்லுவார்கள்.)

மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில்

فاءنها تذهب حتى تسجد تحت العرش

என்ற பதம் வந்துள்ளது. இதை பலர் மொழி பெயர்க்கும் போது 'அது (சூரியன்) (இறைவனின்) அர்ஷூக்கு கீழே சென்று ஸஜ்தா செய்கிறது என்று மொழி பெயர்த்து விடுகிறார்கள். இது வார்த்தைகளின் நேரடியான மொழி பெயர்ப்புதான் என்றாலும் இது கருத்தை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த ஹதீஸில் வரும் 'அர்ஷ்' என்ற பதத்திற்கும், 'ஸஜ்தா' என்ற பதத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு. ஒரே அர்த்தத்தை எல்லா இடங்களிலும் கொடுக்க முடியாது. இடத்திற்கு தகுந்தார் போல் அர்த்தத்தை பொருத்தினால் குழப்பமில்லாமல் விளங்கி விடலாம்.

அர்ஷ் என்பதற்கு அதிகாரம் பொருந்திய இடம் அல்லது பொருள் என்ற அர்த்தங்கள் வருகிறது.  (பார்க்க 12:100, 27:38)

அதாவது வல்லமை பொருந்திய அதிகாரத்திற்குட்பட்ட இடங்களை 'அர்ஷூக்குறிய இடங்கள்' என்று சொல்லி விடலாம். பால்வீதி அனைத்தும் இறைவனின் முழு அதிகாரத்துக்குட்பட்ட அர்ஷூக்குரிய இடங்கள். இறைவனின் அர்ஷூக்குரிய இடங்களில் சூரியன் ஓடுகிறது.

'ஸஜ்தா' என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. தலைவணக்கம் செய்தல், குனிதல், உத்தரவுக்குக் கட்டுப்படுதல் என்றெல்லாம் அதன் பொருள் விரிகிறது. (பார்க்க 55:6, 4:154, 7:161, 16:48)

இப்போது மேலே நாம் மொழிப்பெயர்த்துள்ளப்படி அந்த ஹதீஸூக்கு பொருள் கொண்டால் குழப்பமில்லாமல் போய்விடும்.

(முக்கிய குறிப்பு: விஞ்ஞானம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து மாற்றத்துக்குள்ளகிக் கொண்டிருக்கக் கூடியதாகும். பால்வீதியை பொருத்தவரை நிரூபிக்கப்பட்டவைகளை விட தியரியாக இருப்பவை மிக அதிகமாகும். எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான உண்மைகள் வெளிப்படும் போது இந்த ஹதீஸ் உட்பட குர்ஆன் ஹதீஸ்களில் வரும் ஏராளமான விஞ்ஞானங்களை இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.)

-----------------------------------------
102 கேள்வி : உதாரணமாக ஒருவரிடம்  ரூ10000 (பத்தாயிரம்) கடனாக 2 வருடத்திற்கு முன்னர்  கொடுத்திருக்கின்றோம். அவர் இரண்டு வருடம் கழித்து அதே ரூ10000 திருப்பிக் கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு வருடங்களில் பண மதிப்பு பணவீக்கத்தின் காரணமாக இப்பொழுது குறைந்து இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடன் கொடுத்தவர் பாதிக்கப் படுகின்றார் அல்லவா. இந்த மாதிரி சூழ்நிலையில் பணவீக்கத்திற்கு தக்கவாறு கடன் கொடுத்தவர் பணம் பெறலாமா.. இவ்வாறு வசூலிப்பதால் இந்த பணம் வட்டி ஆகிவிடுமா.. இதனை சிறிது தெளிவாக விளக்கவும்.     சிக்கந்தர் - இ,டி,எ - மின் அஞ்சலில்.

அழுத்தமான கேள்வி கேட்டுள்ளீர்கள். பணத்திற்கென்று உலகில் தனியாக எந்த மதிப்பும் கிடையாது. இந்திய கவர்மண்ட் நினைத்தால் இப்போது புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் அனைத்தையுமே செல்லாது என்று அறிவித்து விட முடியும். அப்படி அறிவித்து விட்டால் இன்றைக்கு லாக்கரில், பீரோவில் வைத்து பாதுகாக்கும் இந்த நோட்டு முழுவதும் அடுப்பெறிக்கவும், குப்பை கூடைக்கும் தான் செல்லும். எவராலும் 'செல்லாது' என்று அறிவிக்க முடியாதவை தங்கம் தான். அதனால் கடன் மற்றும் கொடுக்கல் வாங்கலை தங்கத்தின் மதிப்பீட்டில் எழுதிக் கொள்வதுதான் நல்லது.

உதாரணமாக ஒருவருக்கு பத்தாயிரம் கடன் கொடுக்க வேண்டியுள்ளது. பல மாதங்கள் அல்லது வருடங்கள் சென்ற பிறகு தான் அதை திரும்ப பெற முடியும். அப்போது பண வீக்கத்தின் காரணத்தால் மதிப்பு குறைந்திருக்கும் என்று முன் கூட்டியே தெளிவாக தெரிவதால் பத்தாயிரத்துக்குரிய தங்கத்தை சுமார் 20 கிராம் அவரிடம் கொடுத்து 'நான் திரும்ப பெறும் போது 20 கிராம் தங்கத்தைத் தான் நீ கொடுக்க வேண்டும்' என்ற ஒப்பந்தத்தில் கடன் கொடுக்கலாம். அல்லது 'இன்றைய நிலவரப்படி 10 ஆயிரத்துக்கு 20 கிராம் தங்கம் கிடைக்கிறது. நான் திரும்ப கடனை பெறும்போது 20 கிராம் தங்கத்தின் மதிப்பீட்டில் தான் பணத்தை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துக் கொண்டு கடன் கொடுக்கலாம்.

கடன் கொடுக்கும் போது 20 கிராம் 10 ஆயிரம் மதிப்பை பெறுகிறது. கடனை திரும்ப பெறும் போது அதே 20 கிராம் 12 ஆயிரம் வரை உயர்ந்திருந்தால் - தங்கத்தின் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் - அதை நாம் பெறலாம். மேலதிகமாக வரும் 2 ஆயிரம் வட்டியாக ஆகாது. ஏனெனில் நாம் கடன் கொடுக்கும் போதே தங்கத்தின் நிலவரத்தைதான் ஒப்பந்தமாக்கியுள்ளோம்.

தங்கத்தின் மதிப்பை நாம் கடனுக்கு ஒப்பந்தமாக்கும் போது இன்னொரு முக்கிய விஷயத்தை மறந்து விடக் கூடாது. அதாவது கடனை திரும்ப பெறும் வேளையில் ஒரு வேளை தங்கத்தின் மதிப்பு குறைந்திருந்தால் - கொடுத்த அசலை விட குறைந்திருந்தாலும் சரி - அப்போதும் தங்கத்தின் மதிப்பில் தான் கடனை திரும்ப பெற வேண்டும். ஏனெனில் ஒப்பந்தம் அதுதான். இப்போது கடன் கொடுத்தவர் பாதிப்புக்குள்ளானால் - பெரும்பாலும் தங்கத்தின் மதிப்பு அசலை விட குறைய வாய்ப்பில்லை, ஒரு வேலை அப்படி நடந்தால் - இறைவன் புறத்திலிருந்து வரும் சோதனையாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். 'தங்கத்தின் மதிப்பு குறைந்துள்ளதால் நிலவரத்தை பார்த்து பிறகு வாங்கிக் கொள்கிறேன்' என்றெல்லாம் ஒப்பந்தத்திற்கு முரணாக நடந்துக் கொள்ளக் கூடாது. வாக்குறுதியை பாதுகாப்பது முஸ்லிமின் கடமை என்பதை இது போன்ற சந்தர்பங்களில் மிக அதிகமாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டாலர், மற்றும் டாலருக்கு நிகராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய நாணயமான யூரோ வின் மதிப்பீட்டிலும் (யூரோ நாணயம் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தையில் டாலரின் மதிப்பை எட்டியுள்ளது. இது இன்னும் உயர்ந்தால் டாலரின் மதிப்புக் கூட சரியலாம்) கடனை எழுதிக் கொள்ளலாம். ஆனால் இந்திய மக்களிடத்தில் இவை அவ்வளவாக புழக்கத்தில் இல்லை என்பதால் தங்கத்தின் மதிப்பீடுதான் இலகுவாகத் தெரிகிறது.

ஈமான் கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட தவனையின் மீது உங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் செய்துக் கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் (எழுதக் கூடாது) என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ் அவனுக்கு கற்றுக் கொடுத்த முறைப்படி எழுதட்டும். யார் கடனை திரும்ப கொடுக்க வேண்டியுள்ளதோ அவனே பத்திர வாசகங்களை சொல்லட்டும். (அல் குர்ஆன் 2:182)

இந்த வசனத்திலிருந்து கடன் கொடுப்பவர் எழுத மறுக்கக் கூடாது என்பதையும், பத்திர வாசகங்களை கடன் பெறுபவரே சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் கற்றுத் தருகிறான். பத்திரம் எழுதட்டும் என்பதிலிருந்தே எழுதுவதற்கு முன் அது பற்றி இருவரும் கலந்துப் பேசிக் கொள்ளலாம் என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே தங்கத்தின் மதிப்பீட்டில் கடன் கொடுத்து திரும்ப பெறும் போது பெறும் தொகை தங்கத்தின் மதிப்பீட்டின் படி கொடுத்ததை விட அதிகமாக இருந்தால் அது வட்டியில் அடங்காது.

தங்கத்தின் மதிப்பை கருத்தில் கொள்ளாமல் பணத்தின் மதிப்பீட்டில் மட்டும் கடன் கொடுக்கப்பட்டிருந்தால் திரும்ப பெறும் போது பண வீக்கத்தை காரணம் காட்டி மேலதிகமாக பெற முடியாது. பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் அது வட்டியாகி விடும்.

ஒருவரிடம் 10 ஆயிரம் கடன் கொடுக்கும் அதே வேளையில் பேங்கில் 10 ஆயிரத்தை வைப்பு நிதியாக போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். கடன் காரரிடமிருந்து கடனை திரும்ப பெறும் போது வைப்பு நிதியையும் எடுப்போம். இப்போது கடன் தொகையின் மதிப்பு தான் குறைந்திருக்கிறது. வைப்பு நிதியின் மதிப்பு குறையவில்லை என்று நாம் கூற மாட்டோம். இரண்டும் பணமாகவே இருப்பதால் இரண்டின் மதிப்பும் குறைந்துதான் போயிருக்கும். பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது என்று கடனாளியிடமிருந்து அதிகத் தொகையைப் பெற்றால் வைப்பு நிதியின் மதிப்பு குறைந்துள்ளதால் இங்கும் அதிகத் தொகை பெற வேண்டி வரும். தெளிவாக சொன்னால் வட்டியை ஹலாலாக்கும் சூழ்நிலை உருவாகும்.

பணம் கொடுத்து அதிகப்படியான பணத்தை பெறுவது வட்டி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. பணம் கொடுத்து அதிகப் பணத்தை பெறுவதற்கு பண வீக்கத்தையெல்லாம் காரணம் காட்ட முடியாது. அப்படி காரணம் காட்டினால் பெருவாரியான வட்டியை தடுக்க முடியாமலே போய்விடும்.

எனவே கொடுக்கல் வாங்கலோ, கடனோ அவற்றை தங்கத்தின் மதிப்பில் கணக்கிட்டு கொள்வதுதான் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

-------------------------------------
103 கேள்வி : தஸ்பீஹ் மணி பற்றிய கருத்து என்ன? தஸ்பீஹ் மணி வைத்துக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாமா..?       எஸ் - முஸ்தபா, ஹாட் மெயில் வழியாக.

எண்ணிக்கையில் மறதி ஏற்பட வாய்புள்ள வயதானவர்கள் தஸ்பீஹ் மணி வைத்துக் கொண்டால் தவறில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

எண்ணிக்கையில் தவறோ - சங்கடமோ ஏற்படாதவர்கள் அந்த மணியை தவிர்த்தாக வேண்டும்.

மாற்றுமத குருக்கள் - பாதிரிகள் ஆகியோர் தங்கள் மத அடையாளமாக அந்த மணியை கைகளில் வைத்துக் கொண்டு, அல்லது தோல்களில் மாட்டிக் கொண்டிருப்பதை காணலாம்.

பிற கலாச்சாரங்களை பின்பற்றும் எவரும் அவர்களை சார்ந்தவர்களே என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) அபூதாவூத், அஹ்மத்)

இந்த நபிமொழியின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்பவர்கள் தஸ்பீஹ் மணியை புறக்கணிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நபி(ஸல்) என்னிடம் வந்தார்கள். நான் நான்காயிரம் பேரீத்தக் கொட்டைகளை வைத்துக் கொண்டிருந்தேன். 'இது என்ன' என்றார்கள். 'இதன் மூலம் நான் தஸ்பீஹ் செய்வேன்' என்று கூறினேன்.  (சபிய்யா(ரலி) திர்மிதி, ஹாக்கிம்)

இந்த செய்தியை வைத்து தஸ்பீஹ் மணியை நியாயப் படுத்த முடியாது ஏனெனில் இது பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளராகிய கனானா யாரென்று விபரம் இல்லாதவர். மூன்றாவது அறிவிப்பாளரான இப்னு ஸஃது பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் - தஹபி கூறுகிறார்கள். (மீஸான்)

உறுதி படுத்தப்படாத செய்திகளை வைத்து அமல் செய்வதை இஸ்லாம் விரும்பவில்லை.

உங்கள் விரல்களால் தஸ்பீஹ் செய்யுங்கள். மறுமையில் அது சாட்சி சொல்லும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.  (இப்னு உமர்(ரலி) அபூதாவூத்)

(மறுமை நாளாகிய) அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களுக்கு முத்திரை வைத்து விடுவோம். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களின் கரங்கள் நம்மிடம் சாட்சி சொல்லும். (அல் குர்ஆன் 36:65)

விரல்களால் தஸ்பீஹ் செய்வது தான் இஸ்லாமிய வழி என்பதை இப்போது விளங்கலாம்.

-----------------------------------
104 கேள்வி : நஜாத் என்றால் என்ன? இஸ்லாத்தில் எத்துனை வகையுள்ளன..?  ஆய்ஷா தஸ்லிமா யாஹூ வழியாக.

நஜாத் என்றால் ஈடேற்றம், பாதுகாப்பு, வெற்றி என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இந்த பதத்தை ஒட்டிய ஏராளமான பதங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. (11:57,94, 41:18, 44:30, 20:40, 2:49, 10:73, 21:71,88, ஆகிய குர்ஆன் வசனங்களைப் பார்க்கவும்)

நஜாத் என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய மாத இதழ் குர்ஆன் ஹதீஸ் வழியில் வெளி வருகிறது.

ஷரியத் என்ற ஒரு வகையை தவிர இஸ்லாத்தில் வேறு வகையில்லை.

ஷரீஅத்தின் ஒரே நேரான வழியில் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக. அறிவற்ற மக்களாக இருக்கிறார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். (அல் குர்ஆன் 45:18)

இந்த வசனத்தில் இஸ்லாமிய ஷரீயத் ஒரே வழியைக் கொண்டது தான் என்று இறைவன் தௌ்ளத் தெளிவாக அறிவித்து விட்டான். ஷரிஅத்தை மத்ஹப்களாக பிரிப்பதோ, தரீக்காக்களாக பிரிப்பதோ அறிவற்றவர்களின் செயல் என்பதையும், அவை பின்பற்றத் தேவையற்றவை என்பதையும் இறைவன் கூறியுள்ளதை கவனியுங்கள்.

--------------------------------------
105 கேள்வி : நான் இந்த இணையத் தளத்தில் வரும் விடயங்களை காப்பி எடுத்து மக்களிடம் கொடுக்கும் போது அவர்கள் இந்த இணையத் தளத்தை நடத்துபவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று கேட்கிறார்கள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அதுபற்றிய விளக்கம் வேண்டும்.          முனவ்வர் - ஹாட் வழியாக

நாம் யார் என்பது பற்றி ஏற்கனவே 'இதுதான் இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற மனம் திறந்த கடிதத்தில் விளக்கி இருக்கிறோம். இணையத் தளத்தில் உள்ள அந்த கடிதத்தைப் படியுங்கள். 'எங்கள் இயக்கம் இஸ்லாம், அதன் உறுப்பினராகிய நாங்கள் முஸ்லிம்கள்' அவ்வளவுதான்.  நாங்கள் எந்த இயக்கத்திற்கும் எதிரானவர்களல்ல, நல்ல விஷயங்களில் எந்த இயக்கத்தோடும் ஒத்துழைப்போம். இயக்கங்கள் மக்களை துண்டாடி பிரித்து வைப்பதை பார்க்கும் போதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. (100 வது கேள்விக்குரிய பதிலையும் பார்க்கவும்) இன்னொரு முக்கிய செய்தியையும் உங்கள் மற்றும் ஏனைய வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

உங்களின் இந்த கேள்வியை நாம் வெளியிடவில்லை என்று 'நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சும் கூட்டத்தினர் அல்லவா..? என்று கேட்டுள்ளீர்கள்.  வாசகர்களின் எந்த கேள்வியும் மறைக்கப்படாது என்று ஏற்கனவே உறுதியளித்திருக்கிறோம். அந்த உறுதியை மீண்டும் நினைவூட்டுகிறோம். எத்தகைய சந்தேகமும் மறைக்கப்படாது. எங்கள் குடும்பத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஓய்வு நேரங்களை இணையத் தளத்திற்காக செலவிடுகிறோம். அந்த நேரங்களில் இணையத் தளத்திற்காக செய்ய வேண்டிய நிறைய பணிகள் இருப்பதாலும், சில கேள்விகளுக்கு விரிவான பதில் கொடுக்க வேண்டி இருப்பதாலும் இணைய தளத்தில் பதில் வர தாமதமாகலாம். இதை நமது சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

............................................
106 கேள்வி : தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது. ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா.. அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..? முஹம்மத் ஷாக்லா - இ, டி, எ அஸ்கான் வழியாக.

உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷெய்த்தானாவார் என்பது நபிமொழி.  (அபூஸயீத் அல் குத்ரி(ரலி) புகாரி 509)

தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின்றுக் கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக தோன்றும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.  (ஜூஹைம்(ரலி) புகாரி 510)

இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து தொழுபவருக்கு குறுக்கே எந்தப் பகுதியிலும் செல்லக் கூடாது என்று சிலர் விளங்கிக் கொண்டு பள்ளியில் தடுமாறி நிற்பதை காண்கிறோம். முதல்  ஹதீஸின் வாசகத்தையும் இது பற்றி வந்துள்ள இதர ஹதீஸ்களையும் பார்த்தால் குறுக்கே செல்லக் கூடாத பகுதி எது என்று தெளிவாகி விடும்.

முதல் ஹதீஸில் 'தொழுபவர் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது' என்ற வாசகம் வந்துள்ளது. இதிலிருந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பிற்கு உள்ளேதான் செல்லக் கூடாது என்பதை விளங்கலாம். அவர் தொழுவதற்கு முன்னாலுள்ள எந்த பகுதியிலும் செல்லக் கூடாது என்பது சட்டமானால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும் என்பது அர்த்தமில்லாமல் போய்விடும். தடுப்பு வைக்காமல் தொழும் போது எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம் என்பதையும் இந்த செய்தியிலிருந்து புரியலாம்.

நபி(ஸல்) தமக்கு முன்னால் தடுப்பு வைக்காமல் தொழுததில்லை. தடுப்பு வைத்துக் கொள்வதில் மிக கவனமாக இருந்துள்ளார்கள்.

நபி(ஸல்) தம் ஒட்டகத்தை குறுக்கே தடுப்பாக நிறுத்தி அதை நோக்கி தொழுவார்கள் என்றும் ஒட்டகம் மிரண்டு நகர்ந்தால் அதன் மீதுள்ள சேனத்தை தடுப்பாக்கிக் கொள்வார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 507)

நபி(ஸல்) தம் கைத்தடியை தடுப்பாக வைத்து பத்ஹா என்ற இடத்தில் தொழுதார்கள் என்று அபூ ஜூஹைஃபா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 501)

பள்ளியில் உள்ள தூண்களை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் (புகாரி 502) கிடைக்கிறது.

சுவரை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம், ஈட்டியை நட்டி அதை தடுப்பாக்கி தொழுத விபரம் கிடைக்கின்றன (புகாரி 495,496,498,499)

நபி(ஸல்) கைத்தடியை தடுப்பாக்கி பத்ஹாவில் தொழுதார்கள். அதற்கு முன் பெண்கள் நடந்து செல்லுவார்கள், கழுதைகள் கூட நடந்து செல்லும் என்று அபூ ஜூஹ்பா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 495, 499)

தொழும் திடலுக்கு வந்து ஈட்டியை முன்னால் நட்டி வைத்து பெருநாள் தொழுகையை நபி(ஸல்) தொழவைத்துள்ளார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 494)

இந்த ஹதீஸ்களிலிருந்து தடுப்பு வைப்பதன் அவசியத்தை உணரலாம். பள்ளிகளில் தடுப்பு இல்லாமல் தொழும் போது குறுக்கே செல்பவருடன் சண்டையிடுவது ஹதீஸூக்கு மாற்றமாகும்.

தடுப்பையும் கூட நாம் நினைத்த இடத்தில் வைத்துக் கொண்டு பிறருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.

முதல் ஹதீஸில் தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தடுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லையில் தான் தடுப்பு வைக்க வேண்டும் என்பதை விளங்கலாம். நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லை கையை நீட்டி தடுக்கும் எல்லைதான். தெளிவாக சொல்லப் போனால் நாம் 'ஸஜ்தா' செய்யும் இடம்தான்.

நபி(ஸல்) தொழும் (அதாவது ஸஜ்தா செய்யும்) இடத்திற்கும் சுவற்றிற்கும் இடையே ஒரு ஆடு நடந்து செல்லும் இடமிருக்கும் என்று ஸஃது பின் ஸஹ்ல்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 496)

பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் தொழ நேர்ந்தால் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு சற்று அருகில் தடுப்பு வைத்துக் கொண்டுதான் தொழ வேண்டும்.

உங்களில் ஒருவர் தமக்கு முன்னால் எதையாவது தடுப்பு வைத்துக் கொண்டு தொழட்டும். அதற்கப்பால் நடந்து செல்பவர் பற்றி அவர் பொருட்படுத்த வேண்டாம் என்பது நபிமொழி (தல்ஹா(ரலி) திர்மிதி 334)

எனவே குறுக்கே செல்லக் கூடாது என்பது ஸஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வதைதான் குறிக்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதையல்ல.

இதுவும் கூட முன்னால் தடுப்பு இருக்கும் பொது தான் பொருந்தும். தடுப்பு இல்லாமல் இருக்கும் போது எவராவது இந்த எல்லையை கடந்து சென்றால் செல்பவர் மீது குற்றமில்லை.

--------------------------------
107 கேள்வி : என் துணைவியரின் பெயர் நூருல் இனாயா என்பதற்கு பதில் நூருல் இனியா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய பெயராகத் தெரியவில்லை. இதை மாற்ற வேண்டுமா..?   கத்தரிலிருந்து ஸியாம் - யாஹூ வழியாக.

இஸ்லாமிய பெயர் என்றெல்லாம் தனி பட்டியல்கள் எதுவும் கிடையாது. கொள்கையை பாதிக்காத, மோசமான அர்த்தம் தராத எந்த பெயரையும் வைத்துக் கொள்ளலாம் இஸ்லாம் தடுக்கவில்லை. நூருல் இனாயா என்றால் 'கனிவான ஒளி' என்று பொருள். எந்த தவறும் இல்லை. நூருல் இனியா என்றால் அரபும் தமிழும் சேர்ந்து வருகிறது. இனியா என்றால் இனிமையானவள் என்ற பொருள் உண்டு. இரண்டையும் சேர்த்து 'இனிய ஒளி' எனலாம். அழகான பெயர் தான் மாற்ற வேண்டும் என்கிற அவசியமில்லை.

--------------------------------
108 கேள்வி : மனைவிகள் கணவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் முடித்தால் நான்கு பேரும் அவனது விலா எலும்பிலிருந்து படைக்கப்படுவார்களா..என்று ஒரு சகோதரர் என்னிடம் கேட்கிறார். விளக்கமான பதில் வேண்டும்.    முஸ்தபா - சவுதி ஓஜர் மின் அஞ்சல் வழியாக.

ஒரு ஆண் நான்கிற்கு மேற்பட்ட பெண்களைக் கூட திருமணம் முடிக்கலாம். ஒரே நேரத்தில் நான்கிற்கு மேல் கூடாது என்ற வரையறை  - அதாவது சம காலத்தில் - அந்த எண்ணிக்கையை கடக்கக் கூடாது என்பது தான். ஒருவனுக்கு நான்கு மனைவி இருந்து ஒரு மனைவி இறந்து விட்டால் அவன் விரும்பினால் இன்னொரு பெண்ணை திருமணம் முடித்து மீண்டும் நான்கு என்ற எண்ணிக்கையை வைத்துக் கொள்ளலாம்.
விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதை விலா எலும்பை உருவி இறைவன் படைத்தான் என்றோ, ஒரு பெண்ணுக்கு ஒரு விலா எலும்பு என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. இறைவன் அப்படி படைத்தால் ஆண்களின் விலா எலும்பு எண்ணிக்கை குறைந்துப் போயிருக்கும்.

ஒரு மனிதனுடைய உற்பத்திக்கு ஒரே ஒரு அணு போதும் என்பதை நாம் விளங்கி வைத்துள்ளோம். விந்துத் துளிகளில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளிப்பட்டாலும் மனிதன் உருவாவது என்னவோ ஒரேயொரு அணுவிலிருந்து தான்.  தற்போது உள்ள குளோனிங் முறையை நாம் அறியும் போது இது ஒன்றும் ஆச்சரியமல்ல என்பதை உணரலாம். எனவே ஒரு விலா எலும்பிலிருந்து கோடிக்கணக்கான மனித உயிரினங்களை உருவாக்கி விட முடியும். இதை புரிந்துக் கொண்டால் நான்கு மனைவி படைக்கப்படுவது ஒரு ஆச்சரியமல்ல என்பதை விளங்கலாம்.

----------------------------
109 கேள்வி : சவுதியில் சில பெண்கள் தொழும் போது அத்தஹிய்யாத்தில் கடைசிவரை விரலை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இது போன்று அசைப்பதில்லை இது பற்றிய விளக்கம் வேணடும்.    ஆய்ஷா தஸ்லீமா - யாஹூ வழியாக.

உங்கள் கேள்விக்குரிய பதில் ஏற்கனவே நமது இணையத்தளத்தில் விரிவான விளக்கங்களுடன் இடம் பெற்றுள்ளது. முந்தய கேள்விகளைப் பார்க்கவும். (தொழுகைப் பகுதியைப் பார்க்கவும் 26)

--------------------------------
110 கேள்வி : குத்ப்மார்கள் என்றால் யார்? நபிமார்களில் சிலர் இன்றைய குத்ப்மார்களின் தரத்தை விட குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மறை ஞானப் பேழையில் படித்தேன். அப்துல் காதர் - ஏ,இ,டி,எக்ஸ்,பி - ஸிஸ்டம் அஞ்சல் வழியாக.

இஸ்லாத்தின் உயிரோட்டமான ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தி - தனிமனித வழிபாட்டை ஊக்குவித்து - பல தெய்வ கொள்கைக்கு வழி வகுக்கும் அத்வைத கோட்பாடு (இறைவனும் மனிதனும் இரண்டற கலந்துவிட முடியும் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் அத்வைதம்) தான் நீங்கள் படித்த பைத்தியக்காரத்தனமான உளறல்களை உள்ளடக்கியுள்ளது. குத்புகள், அவ்லியாக்கள், ஷேக்குகள், மகான்கள், ஞானிகள் என்றெல்லாம் வார்த்தைகளை கண்டுபிடித்து அவற்றை சிலருக்கு சூட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அத்வைத தீய கொள்கையுடையோர்.

நபிமார்களின் தகுதியை மனித சமுதாயத்தில் யாருமே அடைய முடியாது என்பது மிகத் தெளிவான விஷயமாகும். ஏனெனில் அவர்கள் இறைவனோடு வஹியின் தொடர்பில் இருந்தவர்கள். பாவமான செயல்களோ, எண்ணங்களோ உதித்தால் கூட இறைவனால் அவை சுட்டிக் காட்டப்பட்டு சீர் திருத்தப்பட்டவர்கள். இறைவேத அடிப்படையில் வாழ்ந்தவர்கள். இப்படிப்பட்ட இறைத்தூதர்களையே ஒரு கொள்கை குறைத்து மதிப்பிடுகிறது என்றால் அது எத்தகைய கொள்கை என்பதை நாம் மேலதிகமாக விளக்க வேண்டுமா..?

இறைத்தூதர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அனைத்துப் புகழுக்கும் உரியவன் இறைவன். (அல் குர்ஆன் 37:181,182)

நபிமார்களை விடுங்கள் இந்த தீய கொள்கையுடையோர் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் குத்புகள் - அவ்லியாக்கள் - மகான்கள் - ஷேக்குகள் எல்லாம் குறைந்த பட்சம் நபித் தோழர்களின் இடத்தையாவது பிடிக்க முடியுமா..? நிச்சயம் முடியவே முடியாது.

ஏன் அவ்வளவுக்கு போக வேண்டும்? குர்ஆனையும் நபிமொழிகளையும் தெளிவாக விளங்கி அதில் உள்ளதை மட்டும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் நீங்களும் நாமும் பின் பற்றினால் நம் இடத்தைக் கூட இவர்களால் (போலி ஷேக்குகளால்) பிடிக்க முடியாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்.

இத்தகைய கொள்கைக்காரர்களையும், அந்த கொள்கையை பரப்பும் மீடியாக்களையும் பகிரங்கமாக இனம் காட்டும் கடமை நமக்கு உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.

------------------------------------
111 கேள்வி : சிலர் செடிகளை விருப்பத்திற்கேற்ப பல உருவங்களில் வெட்டி வளர்க்கிறார்கள் இது கூடுமா..?    ராஜா - யாஹூ அஞ்சல் வழி.

இறைவன் உலகிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்துள்ளான். (அல் குர்ஆன் 2:29)

பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளையும், படர விடப்படாத செடிகளையும் பேரீத்த மரங்களையும், காய்கறி தானியங்களையும் அவனே படைத்தான். (அல் குர்ஆன் 6:141)

முதல் வசனம் பூமியிலுள்ள அனைத்தும் நமக்காக படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நமக்காக படைக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தே அவற்றை நமது வசதிக் கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இறைவன் விளக்கி விட்டான்.

செடிகள் கொடிகள் மரங்கள் ஆகியவற்றில் படருபவையும் உண்டு, படராதவையும் உண்டு என்று அடுத்த வசனம் கூறுகிறது. வளருவதையும் படருவதையும் பக்குவமாக்கிக் கொள்ளும் உரிமை நமக்கு உண்டு.

எனவே செடிகளை மரங்களை வித விதமான கோணங்களில் வெட்டி அழகுபடுத்தி வளர்ப்பதற்கு தடையில்லை.

--------------------------------
112 கேள்வி : நான் வேகமாக நடக்கும் பழக்கமுள்ளவள் எந்த அளவிற்கு எனில் என் தோழிகள் எல்லாம் என் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னை குறைச் சொல்வார்கள். கடந்த சில நாட்களாக என் கால்களில் சரியான வலி ஏற்பட்டு சிரமப்பட்டேன். என் தாயார் சில அத்தியாயங்களை ஓதி (சூரா இக்லாஸ், சூரா நாஸ்) என் கையில் கயிறு கட்டி விட்டார்கள். சிலர் இதை சரி என்றும், சிலர் தவறு என்றும் கூறுகிறார்கள். இதுபற்றிய விளக்கத்தை தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் தயவு செய்து விளக்கவும்.    தஸ்லிம் பானு - ஹாட் அஞ்சல் வழி.

பொதுவாக குர்ஆன் வசனங்களை ஓதி நோய் நிவாரணம் பெறலாம். அதற்கு தடையில்லை. பிறருடைய நோய்க்கு நபித்தோழர்கள் ஓதிவிட்டு வந்ததை நபி(ஸல்) அங்கீகரித்துள்ளார்கள். தங்கள் உடம்பு முழுவதும் ஓதி தடவிக் கொண்டுள்ளார்கள். இதுபற்றியெல்லாம் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஓதி கயிறு கட்டுவதுதான் சிக்கலை உருவாக்கும் பிரச்சனையாகும்.

காற்றை கட்டமுடியாது என்று தெரிந்தும் ஓதி ஊதி முடிபோடுவது (காற்றைதான் முடி போடுகிறார்கள்) அறிவுக்கு பொருத்தமான காரியமல்ல. ஏனெனில் காற்று கட்டுக்கடங்காததாகும்.

இப்படி முடி போட்டவுடன் அந்த கயிறு புணிதத்துவம் வாய்ந்ததாகி விடுகிறது. அதை கீழே போட மாட்டார்கள். கண்களில் ஒத்திக் கொள்வார்கள். பத்திரப்படுத்தி வைப்பார்கள். கிட்டத்தட்ட அதுவும் ஒரு வணக்கத்திற்குரிய பொருளாகி விடுகிறது. நோய் விரட்டுவதற்காக கட்டப்பட்ட கயிற்றின் மூலம் ஷிர்க் (இணை வைப்பு) என்ற மகா - மகா கொடிய நோய் நம்மை பிடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

அந்த கயிறு கட்டுவதன் மூலம் நமக்கு மிகப் பெறிய தெம்பு வந்துவிட்டது போன்ற ஒரு மாயாஜால நம்பிக்கை நம் மனதில் ஊட்டப்படுகிறது. அந்த கயிறு போனவுடன் நம்பிக்கையும் போய் மீண்டும் பயத்தில் மூழ்கும் சூழ்நிலை... இப்படி நிறைய சொல்லலாம்.

எனவே ஓதி பார்த்து - மந்திரித்து உடம்பின் எந்தப் பகுதியிலும் கயிறு கட்டுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

யாராவது தாயத்து போன்ற எதையாவது தொங்கவிட்டுக் கொண்டால் அவர் இணை வைத்து விட்டார் என்பது நபிமொழி (அபூதாவூத்)

கயிற்றை கழற்றிப் போட்டு விடுங்கள். கால்வலி நீடித்தால் நல்ல டாக்டரை அணுகி மருத்துவம் செய்யுங்கள். நீங்களாகவே சூரத்துன் நாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துல் இக்லாஸ் ஆகியவற்றை ஓதி இறைவனிடம் முறையிடுவதன் மூலம் நோய் நிவாரணம் கிடைக்கும். இறைவன் மீதே அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks