Saturday, June 4, 2011

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (இமச புத்தகத் தொடர்)

1. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை...
(இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள் புத்தகத் தொடர் - 1)

நவீன அறுவை சிகிச்சை உறுப்பு மாற்று சிகிச்சை என்று மருத்துவத்துறை படுவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. சென்ற நூற்றாண்டு வரையில் ஆன்மீகத்தின் எந்தத் துறையும் இது குறித்துப் பேசவில்லை. இஸ்லாமிய சிந்தனையும் இதுவாகவே இருக்கும் என நாம் முடிவு செய்யலாம். ஏனெனில் அது மத்திய காலத்தை கடந்து விட்ட ஒரு மதமாகும். எனவே இஸ்லாம் இது பற்றி தெரிந்திருப்பதோ உலகிற்கு அறிவித்திருப்பதோ நடந்திருக்க சாத்தியம் இல்லை?  
     
வினா: செவ்வழகன். சென்னை. 
விளக்கம்...

வளர்ச்சியடைந்து நிற்கும் நவீன மருத்துவத்துறைக் கேள்விகளுக்கு இஸ்லாமிய மூல ஆதாரங்கள் கொடுக்கும் பதில் என்னவென்பதை ஆராயுமுன்னால் இஸ்லாம் இதைப்பற்றியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இது மத்திய காலத்தை கடந்து விட்ட மதமாகும் என்ற கூற்றின் இடர்பாடுகளை நாம் விளங்க வேண்டும். அறிவியல் விழிப்புணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் எழுப்பும் கேள்விகளை நாம் இரு நோக்கில் பார்க்கலாம்.

1. அறிவியல் மதத்திலிருந்து வேறு பட்டவைதானா? என்றும் விளங்கும் நோக்கில் எழுதப்படும் கேள்விகள்.

2. மதத்திற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்ற உறுதியுடன் மதத்தைப் புறுக்கணிக்கக் கூறி வீசப்படும் கேள்விகள்.

மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற சித்தாந்தம் அறிவியல் வளர்ச்சியடைந்த மத்திய ஐரோப்பாவை மையமாக வைத்தே கிளம்பியது. கிறித்துவ பாரம்பரியத்தின் பெருமைப் பேசி வளர்ந்த ஐரோப்பாவின் நிலைப்பாடு அறிவியல் தாக்கத்தால் நிலை தடுமாறத் துவங்கிவிட்டது மனிதனின் சக்தி உலகியல் வசதிகளை விரிவுப்படுத்தத் துவங்கியவுடன் ஆன்மீகப்பாதையில் சறுக்கல் அதிகப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அறிவியலார்ந்த விஷயங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத கிறித்துவ மதக்கோட்பாடேயாகும்.

மனித அறிவின் காரணத்தால் பெருமுயற்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் மருத்துவத்துறை வசதிகள் யூத கிறித்துவ உலக குருமார்களால் புறக்கணிக்கப்பட்டு அறிவியல் நிபுணர்கள் சமூக புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள்.

நிபுணர்கள் தாக்கப்பட்டாலும் சிதைக்கப்பட்டாலும் அவர்களால் நிருபிக்கப்பட்ட உண்மைகளை தாக்கவோ சிதைக்கவோ முடியாமல் போய்விட்டது கிறித்துவ உலகத்தால். மெய்ப்பிக்கப்பட அறிவியல் கல்வி மக்களை ஆட்கொண்டதும் இதற்கு எதிரான இதை மறுக்கக்கூடிய சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் மதமோ மதம் காக்கும் வேதமோ எதையும் புறக்கணிக்கும் அளவிற்கு அவர்களின் அறிவு அவர்களைப் பக்குவப்படுத்தி விட்டது. நிலைமை தெளிவான பின்பும் கிறித்துவ தலைமைப் பீடத்தின் முரட்டு பிடிவாதம் மேற்கத்திய மக்களை மொத்த மதங்களையும் புறக்கணித்து விரண்டோடச் செய்துள்ளது.

கிறித்துவ மத மற்றும் வேதம் போன்ற அல்லது அதைவிட ஒரு பிற்போக்கான மாய சூழ்நிலையாக மேற்குலகம் இஸ்லாத்தையும் நம்பி விளங்கியிருப்பதால் அறிவியலைப் புறக்கணித்து அறிவுக்குத் தடையான ஒரு கற்பனை தத்துவத்தையே மெய் பொருள் விளக்கமாக அவர்கள் விளக்கியுள்ளனர். அதனால்தான் அறிவியல் புரட்சிக்கு முன்புள்ள எந்த சிந்தாத்தையும் பிற்போக்கான சித்தாந்தம் என்று அவர்கள் முடிவு செய்கின்றனர்.

உண்மையில் இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இந்த விஞ்ஞான உண்மைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறியுள்ளதா? என்று ஐரோப்பிய அறிவியலாளர்கள் ஆராயத் துவங்கியிருந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த விஞ்ஞானங்களை அவர்கள் கண்டிருப்பார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

20-ம் நூற்றாண்டை சார்ந்த சில பல மேற்கத்திய விஞ்ஞானிகள் மற்றும் வரலாற்றாளர்கள் அல்குர்ஆன் மற்றும் இறைதூதரின் வாழ்க்கை முறை முஸ்லிம்களால் ஆட்சி செய்யப்பட்ட நாட்டு மக்களின் நிலைப்பாடு குறித்து சிந்திக்கவும் அலசவும் துவங்கிய பிறகு இஸ்லாத்தின் நிலைப்பாடு மகத்தான கோணத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. விளக்கம் பெற விரும்புவோர் அறிவியல் வரலாற்றுக்கு ஓர் அறிமுகம் (ஆசிரியர் ஜோர்ஜ் ஸார்டன்) ஸ்பெயினில் கல்வி பயின்ற ஐரோப்பிய வரலாற்றாளர்கள் அடெலாட், மைக்கேல், ஸ்காட், அல்பொன்ஸி ஆக்ஸ்பொர்ட் பல்கலைகழக கல்வியாளர் ரோஜர் பேகன் ஆகியோர் எழுதிய வரலாறு மருத்துவ விஞ்ஞான நூல்கள் டாக்டர் மாரிஸ் புகைல் எழுதிய விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும் ஆகிய நூல்களைப் படித்தால் இஸ்லாம் எக்காலத்தையும் வெல்லும் என்ற மாறா உண்மை உணரப்படும்.

இனி நவீன உலக சவால்கனை வரவேற்று இஸ்லாமிய மூல ஆதாரங்கள் கொடுக்கும் பதிலை நோக்குவோம்.

அறுவை சிகிச்சை...

நவீன மருத்துவ உலகின் சாதனைத் தொடரில் முக்கிய பங்கு வகிப்பதாகும் இந்த அறுவை சிகிச்சை மனித உடம்பில் ஏற்படும் கோளாறுகளை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வெளிமருத்துவத்தால் சரிசெய்ய முடியாமல் போகும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியை அறுத்து அல்லது பிளந்து உள்ளே மருத்துவம் செய்வதே அறுவை சிகிச்சை முறையாகும். மனித உடம்பின் எந்தப் பகுதியையும் திறந்து பார்க்கலாம். இந்த சாதனையை தொலைக்காட்சி மூலம் உலகிற்குக் காட்டலாம் என்ற பேரார்வம் மிகைத்து நிற்கும் காலமிது.

குறிப்பாக கழுத்திலிருந்து அடி வயிறுவரை உள்ள பகுதி பிளக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை முறையை எந்த மதமும் சொல்லியிருக்க முடியாது ஏனெனில் இது சமீபத்திய மருத்துவ வளர்ச்சியாகும். ஆனாலும் இஸ்லாம் இதைக்கூடக் கூறி வியக்க வைப்பதைப் பாருங்கள்.

தமக்கு நடந்த ஒரு சம்பவத்தை இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்.

''நான் ஒருநாள் மக்காவில் காஃபா இறை இல்லத்தில் இருந்தேன். அப்போது (இறைவன் புறத்திலிருந்து செய்தியை கொண்டு வரும் வானவர்) ஜிப்ரில் வந்தார் நான் விழிப்பிற்கும் தூக்கத்திற்குமிடையில் இருப்பது போன்று உணர்ந்தேன். அவர் என் உடம்பில் நெஞ்சின் காரை முள்ளிலிருந்து அடி வயிறுவரை பிளந்தார் பித்தையெடுத்து வெளியில் போட்டுவிட்டு (இறையாற்றலைக் காட்டும்) பாலைவன ஜம்ஜம் நீரால் என் இதயத்தைக் கழவி (உள்ளே வைத்து) இறைஞானத்தால் என் நெஞ்சை நிரப்பி மூடிவிட்டார்''.

இச்சம்பவத்தை இறைத் தூதரிடமிருந்து கேட்டு அவர்களது தோழர் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் புகாரி. முஸ்லிம், திர்மிதி, நஸயி இன்னும் பல நூல்களில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வரலாற்று செய்தியில் ''நெஞ்சிலிருந்து அடி வயிறுவரை பிளந்து நெஞ்சைக்கழுவி'' என்ற வாசகம் எதைக்குறிக்கிறது. அறுவை சிகிச்சை முறை உண்டு என்பதைக் காட்டவில்லையா?

1. அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு வலியை உணராமல் இருக்க 'குளோரோஃபாம்' என்ற மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து கொடுக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் வலியை உணரமாட்டார்கள். இதைத் தெளிவாக இச்சம்பவத்தின் 'நான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் மத்தியில் இருந்த நிலையில்' என்ற வாசக அமைப்புக் கூறுகிறது. இறைத்தூதர் மயக்க நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட பிறகே நெஞ்சிலிருந்து அடிவயிறுவரை பிளக்கும் சம்பவம் நடக்கிறது.

2. நெஞ்சிலிருந்து அடிவயிறுவரை பிளக்கலாம் அதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது உணர்த்தப்படுகிறது.

3. பிளந்த பகுதியிலிருந்து உறுப்புகளை வெளியில் எடுக்கலாம்.

4. பழுதுபட்ட உறுப்பை சுத்தம் செய்யவோ தேவையிருப்பின் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

5. தேவையில்லாமல் வளர்ந்து இடையூறு தரும் குடல்வால் போன்றவற்றை வெட்டி எடுத்துவிடலாம்.

6. வேலை முடிந்தபின் உறுப்புகளை பொருத்தி மூடலாம்.

இப்படியாக அறுவை சிகிச்சைக்குரிய எல்லா இலக்கணங்களையும் இச்செய்தி அறிவிக்கிறது. இன்றைய நவீன அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு பிறகு சொல்லப்பட்ட செய்தியல்ல இது. இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நூல்கள் இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டவைகளாகும். அவற்றில் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து இன்றைய நவீன மருத்துவ உலகை அன்றே இஸ்லாம் தொட்டுப்பார்த்து வழிகாட்டியுள்ளது என்பதை விளங்க சிரமம் இருக்காது.

மதம் பிற்போக்கானது என்று ஒதுக்கித் தள்ளக் கூடியவர்கள் அதே கண்ணோட்டத்தில் இஸ்லாத்தையும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகூட அதாவது வெளியில் எடுக்கப்பட்ட உறுப்பு கெட்டுப் போகாமலிருக்க திராவகத்தில் போட்டு பாதுகாக்கும் நடைமுறையுள்ளது. இறைத்தூதருக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது ஜம்ஜம் நீர் உறுப்பை பாதுகாக்கும் திரவமாக பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதை சிந்தனையாளர்கள் விளங்கலாம்.

இன்றைக்கும் அதே நீரைத் திராவகமாகப் பயன்படுத்தலாமா? என்று யாரும் கேட்கக்கூடும். இஸ்லாமிய நம்பிக்கையென்பது உறுதியான இறைத்தத்துவத்தின் மீது நிறுவப்பட்டதாகும். அந்த நம்பிக்கையோடு அந்த நீரை அணுகினால் அதன் பயன் தெளிவாகவேப் புரியும்.

எந்த நோக்கத்திறகாக இந்தத் தண்ணீரை பயன்படுத்துகிறீர்களோ அந்த நோக்கத்திற்காகவே அந்தத்தண்ணீர். தாகம் தீர்ப்பதற்காக குடித்தால் தாகம் தீரும் பசியைப்போக்கும் நோக்கமென்றால் பசிபோகும் மருத்துவத்திற்கென்றால் அது மருந்து என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரைப்பற்றிக் கூறியுள்ளார்கள். இறைத்தூதரின் தோழர் இப்னு அப்பாஸ் (அப்பாஸ் என்பவரின் மகன்) அறிவிக்கும் அச்செய்தி ஹாக்கிம், தாரகுத்னி ஆகிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இறைத்தூதரின் வாக்குப் பொய்க்காது என்ற அடிப்படையில் எத்தகைய மருத்துவத்திற்கும் அதைப் பயன்படுத்தலாம். அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு அதைப்பயன்படுத்தாமலேயே வெற்று வேதாந்தம் பேசுவதை விட உறுதியான இறைநம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும்  தோல்வியைப்பற்றி பின்னர் யோசிப்போம்.    (தொடர்வோம்)

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks