Wednesday, July 6, 2011
இரண்டு பெருநாள் தொழுகை - சட்டங்கள்.
உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டாடுவதற்கென்று சில தினங்கள் இருக்கின்றன அந்த தினங்களில் அந்தந்த சமூக மக்கள் தங்கள் மன விருப்பப்படியெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள். குறிப்பாக அந்த தினங்கள் பெருவாரியான மக்களுக்கு கேளிக்கைகளுக்குரிய தினங்களாகவே கழிந்து விடும். முஸ்லிம்களுக்கு மகிழ்சிக்குரிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று நோன்புப் பெருநாள் தினமாகும். ரமளான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் உலக முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்சிகரமான நாளாகும். ஏனெனில் அன்று பெருநாள் தினம். இதர மக்களைப் போன்று கேளிக்கை விளையாட்டுகளில் இந்த நாள் கழிந்து விடக் கூடாது. மாறாக இறைவனை அதிகம் அதிகம் நினைவுக்கூறுவதிலும், தாளாரமாக தான தர்மங்கள் வழங்கி பிறர் மழிழ்சியில் மன சந்தோஷம் அடைவதிலும் இந்த நாளை கழிக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்த சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி)
தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி)
பெருநாள் தினத்தில் அபிஸீனிய நாட்டவர்கள் பள்ளியில் அம்பெறியும் வீர விளையாட்டுகளை விளையாடினார்கள். ஆய்ஷாவே! உனக்கு பார்க்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு என்னைப் பார்க்க சொன்னார்கள். அவர்களுக்கு பின்னே நான் மறைந்து நின்று விளையாட்டைப் பார்த்தேன். (ஆய்ஷா(ரலி) புகாரி)
இந்த இரண்டு நபிமொழிகளிலிருந்து அன்றைய தினத்தை எப்படி கழிக்க வேண்டும் என்பதை விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணில்லாத விளையாட்டுகள் பொழுது போக்கு அம்சங்களில் பங்கெடுப்பது தவறில்லை. பொழுது போக்கு அம்சங்கள் என்பது மனிதர்களுக்கு மத்தியில் நிறைய மாறுபாட்டை கொண்டது என்பதை நாம் அறிவோம். சீட்டு விளையாடுவது. சூதாடுவது, சினிமாவில் மூழ்கி கிடப்பது, தேவையற்றுப் போய் ஊர் சுற்றுவது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது இப்படி எதற்கும் பிரயோஜனமில்லாமல் சில வேலை பாவங்களை சுமக்கக் கூடிய காரியங்களிலேயே பொழுதைக் கழிப்பவர்கள் தான் ஏராளமாக உள்ளனர். அதிலும் பெருநாள் போன்ற சிறப்பான தினத்தில் இவற்றை கட்டாய கடமைப் போன்று நினைத்து செய்பவர்களையும் பார்க்கிறோம். பெருநாள் தினங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்த நாட்களில் பிரத்யேக தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். அவற்றில் முஸ்லிம்கள் தவறாமல் பங்கெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அந்த தினத்திற்குரிய சட்ட திட்டங்களை விரிவாக அறிந்துக் கொள்வோம்.
பெருநாள் தினத்தின் காலையில் சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு தயாராகலாம்.
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள் என்று புரைதா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி, தாரகுத்னி)
நபி(ஸல்) நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள் என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி - அஹ்மத்)
பெருநாள் தினத்தில் குளிக்கத்தான் வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஒன்றும் இல்லை.
நபி(ஸல்) நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் தினங்களில் குளிப்பதை வழமையாக்கிக் கொண்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (இப்னு மாஜா) ஆனாலும் இந்த ஹதீஸ் நம்பகமற்றதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் தமீம் என்பவர் இடம் பெறுகிறார் இவர் நம்பகமற்றவராவார்.
குளித்துதான் தீர வேண்டும் என்றில்லாமல் வழமையாக குளிப்பது போன்று குளித்துக் கொள்ளலாம். இப்னு உமர் பெருநாள் தினங்களில் தொழுகைக்குப் போகும் முன்பு குளித்து விடுவார்கள் என்ற செய்தி முஅத்தாவில் வருகிறது.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) ஏற்படுத்திக் கொண்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)
பெருநாள் தொழுகைக்கு தனி திடல் இருப்பது அவசியமாகும்.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். (அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) புகாரி - முஸ்லிம்)
கஃபத்துல்லா மற்றும் மஸ்ஜித் நபவி ஆகிய பள்ளிகளில் தொழுவது நிறைய நன்மைகளைப் பெற்றுத் தரும் தொழுகையாக அமையும் என்றாலும் நபி(ஸல்) பெருநாள் தொழுகைகளை அங்கு தொழ வைக்கவில்லை என்பதையும் அதற்காக தனி மைதானத்திற்கு சென்றுள்ளார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நிறைய ஊர்களில் இந்த நபிவழி புறக்கணிக்கப்பட்டு பள்ளிவாயில்களிலேயே தொழுகை நடத்தப்படுவதை பார்க்கிறோம். இது நபி(ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு நடை முறைக்கு மாற்றமான செயல் என்பதை அவர்கள் உணர வேண்டும். உண்மையில் திடலில்லாத இட நெருக்கடி உள்ள ஊர்களாக இருந்தால் அவர்கள் பள்ளியில் தொழுவதில் தவறில்லை.
முதல் வேலை தொழுகைத்தான்.
நபி(ஸல்) இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். (அபூஸயீத்(ரலி) புகாரி)
இன்றைய தினம் நாம் முதலில் தொழுகையை துவங்குவோம் பின்னர் அறுத்துப்பலியிடுவோம் இவ்வாறு செய்பவர் நபிவழியில் இருப்பவராவார் என்று நபி(ஸல்) குறிப்பட்டுள்ளார்கள். (பரா(ரலி) புகாரி)
இன்றைய தினம் முதலில் தொழுகையை துவங்குவோம் என்று நபி(ஸல்) குறிப்பிட்டள்ளதால் சுப்ஹ் தொழுகைக்கு பிறகு சூரியன் நன்றாக உதிக்கும் வரை காத்திருந்துவிட்டு (சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கு தடையுள்ளது) உதித்தவுடன் தாமதமின்றி தொழுகையை துவங்கி விடவேண்டும். ஒரு ஈட்டி அளவு சூரியன் உயர்ந்த பிறகு தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை என்றாலும் சூரியன் நன்கு உதித்தப் பிறகு தொழுகையை துவங்க அந்த நேரம் ஆகி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களும் தொழுகைக்கு வர வேண்டும்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் - விதவைப் பெண்கள் - கன்னிப் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகையில் பங்கெடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். (இதற்குரிய ஆதாரங்கள் - விளக்கங்கள் 'முஸ்லிம் பெண்கள் வணங்கும் உரிமைகள்' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. )
பாங்கு இகாமத் வேண்டாம்.
இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் பின் சமூரா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி - முஸ்லிம் - திர்மிதி 489)
முன் பின் சுன்னத் தொழுகை இல்லை.
நபி(ஸல்) பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி)
எப்படித் தொழ வேண்டும்?
மற்றத் தொழுகைப் போன்றுதான் இந்தத் தொழுகையும் என்றாலும் பெருநாள் தொழுகைகளில் நபி(ஸல்) அவர்கள் கூடுதல் தக்பீர் சொல்லியுள்ளார்கள். அதைத் தவிர மற்ற வித்தியாசங்கள் இல்லை. கூடுதல் தக்பீர் எத்துனை என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
3 - 3 தக்பீர்கள் சொல்ல வேண்டும் என்று ஹனபி மத்ஹப் கூறுகிறது. அதற்கு ஆதாரமாக அவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸ் பைஹகி - அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸை அபூ முஸா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூ ஆயிஷா என்பவர் விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் என்பவரின் அறிவிப்புகள் முறையானதல்ல ஏனெனில் அவர் பலவீனமானவர் என்று புகாரி இமாமும் அஹ்மத் இமாமும் விமர்சித்துள்ளார்கள்.
முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக 5 தக்பீர்களும் சொல்வதே நபிவழியாகும்.
நபி(ஸல்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத்)
நபி(ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள் என அம்ரு பின் ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)
பொதுவாக இதர தொழுகைகளில் தக்பீர் சொல்லி கைகளை கட்டிக் கொள்வது போன்று கட்டிக் கொண்டு பிறகு இதர தொழுகைகளில் ஓதக் கூடிய வஜ்ஜஹ்து... போன்ற துஆக்களை ஓதி விட்டு அதன் பின் அதிகப்படியான ஏழு தக்பீர்களைக் கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்தில் வஜ்ஜஹ்து ஓத வேண்டியதில்லை என்பதால் தொடர்சியாக ஐந்து தக்பீர்களைக் கூறிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்திக் கட்டும் வழக்கம் பரவலாக இருப்பதைப் பார்க்கிறோம் அவ்வாறு கைகளை உயர்த்துவது சுன்னத்தல்ல. நபி(ஸல்) தக்பீர் சொல்லி கைகளை உயர்த்தி இருந்தால் அது அறிவிக்கப்பட்டிருக்கும். இதர தொழுகைகளில் நபி(ஸல்) தக்பீர் சொல்லும் போது எங்கெல்லாம் கைகளை உயர்த்தினார்கள் என்ற விபரம் ஹதீஸ்களில் கிடைக்கிறது. பெருநாள் - ஜனாஸா தொழுகைகளில் தக்பீர் சொன்னார்கள் என்று மட்டும் தான் அறிவிக்கப்படுகிறதே தவிர அப்போது கைகளை உயர்த்தினார்கள் என்று அறிவிக்கப்படவில்லை எனவே கைகளை உயர்த்துவது நபிவழியல்ல.
முதல் தக்பீர் சொல்லி கைகளை நெஞ்சில் கட்டிக் கொண்டு வஜ்ஜஹ்து... ஓதி விட்டு அதிகப்படியான தக்பீர்களை கூறி விட்டு பிறகு கிராஅத் ஓத துவங்க வேண்டும்.
இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். (நுஃமான் பின் பஷீர்(ரலி) முஸ்லிம் - திர்மிதி 490)
இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) ஓதியுள்ளார்கள் என உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 491)
ஏழு - ஐந்து என்று கூடுதல் தக்பீருடன் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டால் வலியுறுத்தப்பட்ட அந்த சிறப்பான தொழுகை நிறைவேறி விடும்.
தொழுகைக்குப் பிறகு தான் மக்களுக்கு பிரச்சாரம் பண்ண வேண்டும்.
நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி 488 - நஸயி)
இந்த தெளிவான நபிவழிக்கு மாற்றமாக நிறைய ஊர்களில் ஜூம்ஆ போன்று ஆரம்பத்தில் பிரச்சாரம் (குத்பா) செய்து விட்டு பின்னர் தொழுகை நடத்துவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நபிவழிக்கு மாற்றமாக செய்கிறீர்கள் என்று கேட்டால் முதலில் தொழுது விட்டால் பிரச்சாரத்தில் உட்காராமல் மக்கள் களைந்து சென்று விடுகிறார்கள் அதனால் தான் முதலில் பிரச்சாரம் செய்கிறோம் என்று நியாயம் கற்பிப்பதை காணலாம்.
இதிலிருந்து தொழுகைக்கு முன் நடக்கும் பிரச்சாரத்தில் மக்களை நிர்பந்தப்படுத்தி உட்கார வைக்கிறார்கள் என்பது வெளிச்சமாகின்றது. தொழுகைக்கு முன்னால் உரை நிகழ்த்தப்படும் போது மக்கள் அனைவரும் வந்து விடுகிறார்களா... என்றால், வந்துள்ளவர்கள் உன்னிப்பாக உரையைக் கேட்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. இமாம் செய்யும் உரை ஒரு பக்கம் நடப்பதையும், வந்துள்ள மக்கள் குழு - குழுவாக தங்களுக்குள் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பதையும் பெருநாள் மற்றும் ஜூம்ஆ தினங்களில் பார்க்க முடியும். பள்ளியில் வந்து பேசிக் கொண்டிருக்கப் பிடிக்காதவர்கள் இமாம் 'அல்லாஹூஅக்பர்' என்று முதல் தக்பீர் கூறும் வரை வீட்டிலேயே பொழுதைக் கழித்து விட்டு வருவதும் வாடிக்கையான ஒன்றுதான். இதற்கு காரணம் என்ன? பள்ளிகளில் நிகழ்த்தப்படும் உரைகள் உயிரோட்டமற்றுப் போனவைகளாக இருப்பது தான். (இது பற்றி விரிவாக 'ஜும்ஆ மேடைகள் பயனற்றுப்போவதேன்" என்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம்.)
சத்தற்றுப்போன உரைகள் நிகழ்த்தி விட்டு மக்களை குறைச் சொல்வதற்கு இமாம்கள் வெட்கப்பட வேண்டும். இஸ்லாமிய பிரச்சாரம் என்பது உலகின் மொத்த மக்களையும் ஈர்க்கும் சக்திப் பெற்றதாகும் அவை நிகழ்த்த வேண்டிய முறையில் நிகழ்த்தப்பட்டால்!
நபிவழிப் பிரகாரம் தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்ப்படும் பள்ளிகளிலிருந்து மக்கள் மொத்தமாக வெளியேறி சென்றுவிடுவதில்லை (ஏதோ வேலையின் காரணத்தால் ஒருசிலர் வெளியில் செல்வார்கள் என்பது இயல்புதான்) இதற்கு காரணம் அங்கெல்லாம் நிகழ்த்தப்படும் உரைகள்.
மக்கள் ஓடி விடுவார்கள் என்றிருந்தால் நபி(ஸல்) தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தி இருப்பார்களா...
நபி(ஸல்) பெருநாள் தொழுகைகளைத் தொழ திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவங்குவார்கள். தொழுகை முடிந்ததும் எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். போதனை ஆரம்பமாகும். வலியுறுத்தலும், கட்டளையிடுதலும், செல்ல வேண்டிய பகுதிகள் குறித்து ராணுவத்தினருக்கு (படையினருக்கு) உபதேசம் செய்தலும் தொடரும் முடிந்ததும் வீடு திரும்புவார்கள். (அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) முஸ்லிம்)
உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். (ஜாபிர்(ரலி) முஸ்லிம்)
மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள் என்பது எதைக் காட்டுகிறது. நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்தப் போகும் உரையைக் கேட்கும் ஆர்வத்தைக் காட்டவில்லையா... உபதேசங்கள் - கட்டளைகள் - வலியுறுத்தல்கள் என்று அவர்களின் உரை பல கோணங்களை தொட்டுள்ளது என்பதை இந்த செய்தி சொல்லவில்லையா...
நபி(ஸல்) உரை நிகழ்த்தத் துவங்கினால் அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும். குரல் உயர்ந்து ஆக்ரோஷமாக வார்த்தைகள் வெளிப்படும். ராணுவத்தை எச்சரித்து வழி நடத்துபவர் போலாகி விடுவார்கள். (ஜாபிர்(ரலி) முஸ்லிம்)
இது போன்று உரை நிகழ்த்தப்பட்டால் கட்டாயம் தொழுகைக்குப் பிறகு மக்கள் இருப்பார்கள். தொழுகை நடத்துவோர் நபிவழிக்கு மாற்றமாக நடப்பதை தவிர்த்து தொழுகைக்குப் பின் ஆழமான உரை நிகழ்த்த தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு தனி உரையா?
ஆண்களுக்கு நிகழ்த்திய உரை பெண்களுக்கு எட்டவில்லை என்றுஉணர்ந்ததும் பெண்கள் பகுதிக்கு சென்று பிலால்(ரலி) அவர்களின் கைகளில் சாய்ந்துக் கொண்டு நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் அதிகம் நரகத்திற்கு செல்வதற்கு காரணத்தை கூறினார்கள். சாபமிடுவதும் - கணவனுக்கு மாறுசெய்வதும் தான் நரகத்திற்கு காரணம் என்று கூறி தர்மத்தை வலியுறுத்தினார்கள். பெண்கள் தங்கள் கழுத்துமாலை - வலையல்கள் - காதணிகள் போன்றவற்றை கழற்றிப் போட்டார்கள். அன்றைய தினம் பெண்கள் தான் அதிகமாக தர்மம் செய்தார்கள். (இப்னு அப்பாஸ் - அபூ ஸயீத் - ஆகிய நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவிக்கிறார்கள். (புகாரி - முஸ்லிம் - திர்மிதி)
அன்றைய தினம் நிகழ்த்தப்பட வேண்டிய உரை பெண்களுக்கு போய் சேர வேண்டிய அவசியத்தையும் அதில் அவர்கள் பெற வேண்டிய பாடத்தையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான உரை நிகழ்த்தப்பட்டு அது பெண்களுக்கு போய் சேரும் வாய்ப்புகள் (மைக் வழியாக) இன்று நிறைய உண்டு என்பதால் தனி உரை அவசியமல்லை.
பெருநாள் தினத்தில் தொழுகைத்திடலில் தக்பீர் சொல்வதும் - அவரவரும் தங்களுக்குத் தேவையான பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் நபி(ஸல்) அவர்கள் விரும்பிய செயலாகும். மாதவிடாய் ஏற்பட்டுள்ளப் பெண்களுக்கு தொழுகைக் கடமையில்லை என்றாலும் அவர்களையும் நபி(ஸல்) தொழும் திடலுக்கு வர சொன்னதற்கு காரணம் தக்பீர் கூறி பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பதற்கு தான். இந்த விபரம் உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் வழியாக புகாரியில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்ளும் வழக்கத்தை பரவலாகப் பார்க்கிறோம் அன்றைய தினம் இப்படி செய்துக் கொள்வது சுன்னத் என்பதற்கு நம்மால் எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.
இந்தப் பெருநாளை இறைவன் விரும்பும் அடிப்படையில் அமைத்துக் கொள்ளும் முஸ்லிம்களாக இறைவன் நம்மை ஆக்கி வைக்க அவனிடமே பிரார்த்திப்போம்.
Labels:
இரு பெருநாள் தொழுகை
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment