Wednesday, July 6, 2011

ரமளான் பிறையில் பிரிவினை வேண்டாம்

இஸ்லாத்தின் வணக்க வழிப்பாடுகளை கணக்கிடுவதற்கு பிறை ஒரு முக்கிய அளவுகோளாகும். அந்த வகையில் ரமளானின் துவக்கத்தையும் முடிவையும் பிறையை வைத்தே உலகம் நிர்ணயித்து வருகிறது. அப்படி நிர்ணயிக்கும் படிதான் குர்ஆன் சுன்னாவின் சட்டங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. இதில் மொத்த உலக முஸ்லிம்களும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆனால் ரமளான் பிறை குறித்து மட்டும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சில சலசலப்பு அவ்வப்போது ஏற்படுகிறது. ஆதாரங்களை ஆரோக்யமான விவாதத்திற்கு உட்படுத்தி தீர்வு காண்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் மகிழ்சிக்குரிய விஷயமாகும். அந்த வகையில் பிறை குறித்த கருத்தோட்டங்களை வர வேற்கத்தான் வேண்டும்.

ரமளான் பிறை பற்றி இரண்டு வித கருத்தோட்டங்கள் நிலவுகின்றன.

1) அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் பிறைக் கண்ட பிறகுதான் நோன்பு வைக்க வேண்டும்.

2) உலகில் எந்தப் பகுதியில் பிறைத் தெரிந்து தகவல் கிடைத்தாலும் தூரங்களை பொருட்படுத்தாமல் முஸ்லிம்கள் நோன்பு வைத்து விடலாம்.

இந்த இரண்டு வித கருத்துக்களுக்கும் - கருத்துக்கு சொந்தக்காரர்கள் தாங்கள் விளங்கிய ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள்.

நாம் சிந்தித்து - அலசி - பார்த்த வகையில் இரண்டாம் கருத்தும் அதற்குரிய ஆதாரங்களும் தான் நியாயமாகத் தெரிகிறது.

முதல் கருத்தோட்டத்தில் சில கேள்விகள் பிறக்கின்றன.

அந்தந்தப் பகுதி என்பதற்கான ஹதீஸ் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தந்தப் பகுதிக்குரிய எல்லையை எதை வைத்து தீர்மானிப்பது?

நாடுகள் - நாட்டுக்கு உள்ளே பல மாநிலங்கள் - மாநிலங்களுக்குள்ளே பல மாவட்டங்கள் - மாவட்டங்களுக்குள்ளே பல தாலுகாக்கள் - பஞ்சாயத்துகள் என்று ஏரியாக்களை நிர்வாக வசதிக்கேற்ப பிரித்துள்ளார்கள். இப்போது அந்தந்தப் பகுதி என்பதை எப்படி முடிவு செய்வது?

இதற்கு முதல் சாரார் ஒரு ஹதீஸை எடுத்து வைக்கிறார்கள்.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்றுமாலை பிறைப் பார்த்தோம் என்று சாட்சிக் கூறினார்கள். உடனே நோன்பை விடுமாறு நபி(ஸல்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் கூறினார்கள். (இப்னு கிராஷ் - அபூதாவூத்)

இந்த ஹதீஸில் கிராமவாசிகள் வந்து சொன்னத் தகவலை நபி(ஸல்) ஏற்றுள்ளதால் அருகிலிருந்து வரும் தகவல்களை ஏற்கலாம் என்பது இவர்களின் வாதம்.

கிராம புறத்திலிருந்து வரும் தகவலை நகரத்தில் வாழும் எந்தப்பகுதி மக்கள் ஏற்பது? 5 மைல் அல்லது 10 மைல் சுற்றளவு கொண்ட ஒரு கிராமத்தின் தகவல் 80 அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றளவுள்ள நகரங்களை கட்டுப்படுத்தி விடும் என்றால் பெரும் நகரங்களிலிருந்து வரும் தகவல் ஒரு மாநிலத்தையும் ஒரு மாநிலத்திலிருந்து வரும் தகவல் ஒரு நாட்டையும் கட்டுப்படுத்தாதா..?

கிராமங்களிலிருந்து வரும் தகவலை மட்டும் தான் ஏற்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் சொல்லவில்லை. 'வரும் தகவலை ஏற்கலாம்' என்ற செய்தியே இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கின்றன. செய்தியை கொண்டு வருபவர்களை அடையாளங்காட்டுவதற்காகத்தான் அவர்கள் கிராமவாசிகள் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் தான் செய்தியைக் கொண்டு வருகிறார்கள்.

தொலைவிலிருந்து வரும் தகவலை ஏற்கத்தேவையில்லை என்பதற்கு ஒரு செய்தியை எடுத்துக் காட்டுகிறார்கள்.

உம்மு பள்ல்(ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் அங்கு சென்றதும் ரமளானின் முதல் பிறையை வெள்ளிக்கிழமை இரவு பார்த்தேன். அம்மாத கடைசியில் நான் மதீனாவிற்கு வந்தேன். பிறைப் பற்றிய என்னிடம் கேட்டார்கள். 'நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறைப் பார்த்தோம்' என்று கூறினேன். நீயே பிறையைப் பாரத்தாயா.. என்றார்கள். ஆம் மக்களும் பார்த்தார்கள் - முஆவியா அவர்களும் பார்த்தார்கள் எல்லோரும் நோன்பு பிடித்தோம் என்று கூறினேன். அதற்கவர்கள் 'நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம் எனவே மறு பிறையை பார்க்கும் வரை நாங்கள் நோன்பு வைப்போம் என்றார்கள். முஆவியாவும் நாங்களும் பிறைப் பார்த்தது உங்களுக்குப் போதாதா... என்று கேட்டேன். போதாது நபி(ஸல்) எங்களுக்கு இப்படித்தான் கட்டளையிட்டார்கள் என்று கூறினார்கள். (குரைப் - முஸ்லிம்)

தொலைவிலிருந்து வரும் செய்தியை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஏற்கவில்லை காரணம் நபி(ஸல்) அப்படி சொல்லவில்லை என்று கூறுகிறார்கள் எனவே தொலைதூர செய்தியை ஆதாரமாக எடுக்கக் கூடாது.

வரும் தகவலை ஏற்கக் கூடாது என்ற முதல் சாராரின் வாதத்திற்கு இந்த செய்தியில் வலுவான சான்று ஒன்றுமில்லை. ரமளானின் முதல் பிறை செய்தி கிடைத்து அவர்கள் அதை புறக்கணிக்கவில்லை. ரமளானின் கடைசிப்பகுதியில் இருக்கிறார்கள். ரமளானின் நாட்களில் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்தில் தான் இப்படி முடிவு செய்கிறார்கள். முதல் பிறை செய்தி புறக்கணிக்கப்பட்டிருந்தாலாவது முதல் சாராரின் வாதத்திற்கு ஓரளவு வலு சேர்க்க முடியும். முஆவியா(ரலி) அவர்களும் மற்றவர்களும் வெள்ளிக்கிழமை பிறைப்பார்த்து நோன்பு வைத்து 29 நாட்களில் அடுத்த பிறையைப் பார்த்து பெருநாள் கொண்டாடி இருந்தால் சனிக்கிழமை பிறைப் பாரத்தவர்கள் முஆவியா(ரலி)யின் தகவல் அடிப்படையில் பெருநாள் கொண்டாட முடியாது அப்படி கொண்டாடினால் இவர்களுக்கு 28 நோன்புகள் மட்டுமே கிடைக்கும். பிறை மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாக இருக்கும் இதற்கு கூடவோ குறையவோ செய்யாது என்ற நபிமொழி அடிப்படையில் குறைந்தது 29 நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். 28ல் மாதம் முடியாது என்பதால் தான் 'நபி(ஸல்) எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறி இருக்க முடியும்.

அல்லது,

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் - பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற நபிமொழியை அந்தந்தப் பகுதியில் பார்க்க வேண்டும் என்று இன்றைக்கும் சிலர் எப்படி விளங்குகிறார்களோ அப்படி இப்னு அப்பாஸ்(ரலி) விளங்கி இருக்க வேண்டும். இதுக் கூட நமது சொந்த சிந்தனைத்தான். அந்தந்தப் பகுதியில்தான் பிறைப் பார்க்க வேண்டும் வரும் தகவலை ஏற்கக் கூடாது என்பது இப்னு அப்பாஸ்(ரலி)யின் முடிவாக இருந்தால் அவர்கள் சிரியாவில் பிறைப் பார்த்ததைப் பற்றி துருவி கேட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

கிராமம் - நகரம் - ஒரு ஊர் - நாடு என்றெல்லாம் பிரிக்காமல் பிறை பிறந்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்று நோன்பு வைத்துவிடுவதே சரி என்று நமக்குப் படுகிறது அதற்குறிய காரணத்தைப் பார்ப்போம்.

உலகின் ஒரு பகுதியில் பிறைத் தெரிந்து அந்த தகவல் தெளிவாக கிடைக்கும் பட்சத்தில் அதை ஏற்று நோன்பை துவங்கி விடலாம். ஒரு குர்ஆன் வசனத்தை ஆழ்ந்துசிந்திக்கும் போதே இந்த முடிவுக்கு நம்மால் வந்து விட முடியும்.

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு வைக்க வேண்டும். (அல் குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் மாதத்தை அடைந்த உடன் நோன்பு வைக்க வேண்டும் என்ற கட்டளை வந்துள்ளது. ரமளான் மாதத்தை நாம் பகல் பொழுதில் அடைவதில்லை. இரவுப் பொழுதில் தான் அடைகிறோம். 'எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ....' 'அவர் நோன்பு வைக்கட்டும்' என்ற வாசகங்களை சிந்திக்கும் போது மாதத்தை அடைந்த உடன் நோன்பை துவங்கி விட வேண்டும் என்பதை விளங்க முடிகிறது. மஃரிப் பொழுதில் அந்த மாதத்தை அடையும் நாம் உடன் நோன்பை துவங்கி இரவில் நோன்பிருக்க வேண்டும். அதாவது அந்த வசன அடிப்படையில் மாதத்தை அடைந்த உடன் நோன்பை துவங்கி இரவில் நோன்பாளியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உலகில் யாருமே அப்படி செய்வதில்லை.
காரணம் என்ன?

2:187 வது வசனத்தில் பஜ்ர் வரை உண்ணலாம் பருகலாம் மனைவியுடன் சேரலாம் என்று இறைவன் அடுத்த அனுமதியை வழங்கி விட்டதால் ரமளான் மாதத்தை அடைந்தும் சுமார் 13 மணி நேரம் நாம் நோன்பை நோற்காமல் 13 மணி நேரத்திற்கு பிறகே நோன்பின் உள்ளே நுழைகிறோம். பிறை பிறந்து அதை பார்த்தவர்கள் அடுத்த சுமார் 13 மணிநேரத்திற்கு நோன்பின் உள்ளே செல்ல முடியாத ஒரு ஏற்பாட்டை இறைவன் ஏன் ஏற்படுத்தியுள்ளான்?

இந்த கேள்விக்கு விடைக்காண மீண்டும் 2:185 வது வசனத்திற்கு வருவோம். 'எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ... என்று இறைவன் கூறுவதிலிருந்து உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் அந்த மாதத்தை அடைய முடியாது என்பதை விளங்கலாம். ஒருப் பகுதியில் உள்ளவர்கள் அந்த மாதத்தை அடையும் போது மற்ற பலப் பகுதியில் உள்ளவர்களால் அந்த மாதத்தை அடைந்திருக்க முடியாது. ஏனெனில் நாம் வாழும் பூலோகத்தின் அமைப்பு அப்படி. முதலில் அந்த மாதத்தை அடைந்தவர்கள் சுமார் 13 மணி நேரங்கள் காத்திருந்து நோன்பின் உள்ளே நுழைவதற்கு முன் இவர்கள் அடைந்த நேரத்தில் அந்த மாதத்தை அடையாமல் இருந்த அனைவரும் அந்த மாதத்தின் உள்ளே நுழைந்து விடுவார்கள். அதாவது பிறையைக் கண்டவர்கள் முதலாவது நோன்பின் உள்ளே நுழையும் முன் மற்றவர்களும் பிறையைக் கண்டவர்களின் இரவின் உள்ளே வந்து விடுகிறார்கள். இதற்காகத்தான் இறைவன் இந்த 13 மணி நேர இடைவெளியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று நம் அறிவுக்குப் படுகிறது.

'எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ... என்ற கூற்றுப்படி இரவிலேயே நோன்பு கடமையாகி விடுகிறது.

பஜ்ர் வரை உண்ணலாம் பருகலாம் என்ற வசனம் அந்த மாதத்தை அடைந்தும் பல மணிநேரம் கடந்த பிறகு நோன்பை துவங்கினால் போதும் என்று கூறுகிறது. பல மணி நேரத்திற்கு முன்பே கடமையாகி விட்ட ஒன்றை பல மணிநேரம் கழித்துத் துவங்கலாம் என்ற சட்டம் எவ்வித அர்த்தமும் இல்லாததாகும் என்று நம்மால் ஒதுங்க முடியவில்லை. அனவைரும் ஒரு இரவின் உள்ளே நுழைந்து விடட்டும் என்ற இறைவனின் ஏற்பாடே இந்த வசனத்தில் உள்ளடங்கியுள்ளது என்று தான் விளங்க முடிகிறது.

எனவே பிறைப் பார்த்து அந்த தகவல் ஆதாரப்பூர்வமாக கிடைக்கும் பட்சத்தில் பிறைப்பார்த்தவர்களை தொடர்ந்து நாமும் அந்த இரவில் நுழைவதால் அந்த மாதத்தை நாமும் அடைந்து விடுகிறோம். அந்த மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்கட்டும் என்ற கட்டளை அடிப்படையில் நாமும் நோன்பை துவங்கி விட வேண்டும்.

பிறைப்பார்த்தவர்களை தொடர்ந்து நாமும் அந்த இரவில் நுழைந்து விட்டப் பிறகும் 'நான் இன்னும் ரமளானின் இரவு உள்ளே நுழையவில்லை காரணம் நான் இன்னும் பிறையை என் பகுதியில் பார்க்கவில்லை' என்று எவராவது கூறினால் ஏற்கனவே பிறந்து விட்ட ரமளான் பிறையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற சூழ்நிலைத்தான் அங்கு உருவாகிறது.
பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள் என்ற நபிமொழியை எடுத்துக் கொண்டு அந்தந்தப் பகுதியில் தான் பிறைப்பார்க்க வேண்டும் என்று வாதிக்க முடியாது ஏனெனில் எந்த ஒரு ஹதீஸிலும் அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற வாசகம் இடம் பெறவேயில்லை. மாதத்தின் துவக்கத்தை அறிய பிறைப்பார்க்க வேண்டும் என்ற அவசியத்தைதான் பிறைப் பாருங்கள் என்ற நபிமொழிகள் அனைத்தும் வலியுறுத்துகின்றன.

ஒரு பகுதியில் பார்த்த பிறை இன்னொரு பகுதியைக் கட்டுப்படத்தாது என்பதற்கும் நபிமொழிகளில் ஆதாரமில்லை. மற்றப் பகுதியில் தெரிந்த பிறையை நபி(ஸல்) புறக்கணித்தார்கள் என்பதற்கும் எந்த ஒரு நபிமொழியும் இல்லை.

எனவே ரமளான் பிறை பிறந்து விட்டது என்று தகவல் கிடைத்து விட்டால் - பிறைப் பார்க்க முயற்சி செய்வதுப் போல் தகவலுக்காகவும் முயற்சி செய்யலாம் - நோன்பை துவங்கி விடலாம். (முக்கியக் குறிப்பு: பிறைப்பற்றி உலக அறிஞர்களுக்கு மத்தியில் இப்படியும் அப்படியுமாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. இரு தரப்பு வாதங்களையும் விரிவாக அலசிய பிறகே நம்மால் இந்த முடிவுக்கு வர முடிந்தது. இதில் யாரும் மாற்றுக் கருத்துக் கொள்ளவேக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. மாற்றுக் கருத்துடைய ஆதாரங்கள் - வாதங்கள் - விஞ்ஞான முடிவுகள் எதை வேண்டுமானாலும் எவரும் எழுதலாம் என்பதை கூறி முடிக்கிறோம்) (இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன்)

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks