Wednesday, May 22, 2013
அரபு மொழியை கற்கவும், பேசவும் வகுப்புகள்! யார் பாக்கியசாலி!
நமதூரில் முஸலிம் இளைஞர்கள் அரபு மொழியை இலக்கண விதிகளுடன் கற்கவும் சரளமாக பேசவும் ஓராண்டு பயிற்சி திட்டங்களோடு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் அஷ்ஷைக் கபீர் மதனி.
மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட அரபு மொழியில் தான் உலகிற்கு நேர்வழியாக வந்த குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் இன்னும் ஏராளமான இலக்கிய, கணித, அறிவியல் உண்மைகளும் அடங்கியுள்ளன. இதர எல்லா மொழிகளை விடவும் தனி சிறப்பு மிக்க அரபு மொழியின் பக்கம் தமிழக முஸ்லிம்களின் கவனம் குறைவாகவே உள்ளது.
அது ஏதோ ஒரு மதத்திற்கு சொந்தமான மொழி என்று பிறர் விளங்கியுள்ளது போலவே முஸ்லிம்களில் பலரும் தவறாக விளங்கியுள்ளனர். தமிழ், ஆங்கிலம், உருது, பிரன்ச் உட்பட பல்வேறு மொழிகள், மொழிகளாகவே மட்டும் பார்க்கப்படுவதால் அவை அனைத்துக் கல்விச்சாலையிலும் மொழியாக போதிக்கப்படுகின்றன. அவற்றிர்க்கு நாடு, இனம், மதம் என்ற எந்த சாயமும் பூசப்படுவதில்லை. ஆனால் அரபு மொழிக்கு மட்டும் அசைக்க முடியாத மத சாயத்தை பூசி வைத்துள்ளனர்.
அரபு ஒரு மொழியாகவே மட்டும் பார்க்கப்பட்டு அதை அனைத்துப் பள்ளிக் கூடங்கள், மற்றும் கல்லூரிப் பாடங்களில் உலக மொழிப் பிரிவில் சேர்த்து போதிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து மொழி வளத்தை பரவலாக்க பாடுபட வேண்டிய முஸ்லிம்கள் கூட இதை விடுத்து அரபு மொழியை போதிக்க அரபு மதரஸாக்களை துவங்கி மொழி வளத்தை சுருக்கி, அதன் ஆளுமையை படு வேகமாக குறைத்து அம்மொழிக்கு துரோகம் இழைத்து விட்டனர். விளைவு தங்கள் கொள்கை சார்ந்த மொழியைக் கூட முஸ்லிம்கள் தூர தள்ளும் அல்லது ஏதோ சில வார்த்தைகளை தெரிந்துக் கொள்ளலாம் என்ற மிகப் பிற்போக்கான எண்ணத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
அரபு மொழியின் அவசியம், அதன் தாத்பரியம் பற்றி பேசுவதற்கு இந்த ஆக்கமல்ல. அரபு மொழியை இலக்கண வீரியத்துடன் தரவாக பயின்றவர்கள் அதை பிறருக்கு போதிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்து பின்வாங்கி நிற்கமாட்டார்கள். ஏனெனில் அதன் சுவை அப்படி.
ஐக்கிய அரபகத்தில் பிரத்யேக அரபு மொழி வகுப்புகளை நடத்தி தேர்ச்சி பெற்ற பெரியவர், அஷ்ஷைக் கபீர் மதனி அவர்கள் தற்போது ஊரோடு இருப்பதால் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கு அரபு மொழியை இலக்கண விதிகளுடன் கற்றுக் கொடுக்கும் முயற்சியோடு சேர்த்து, தெளிவாக அரபு மொழியை தாய்மொழியைப் போன்று பேசவைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
மக்தூம் அப்பா பள்ளியில் இதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
வாரந்தோரும் பிரதி சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் காலை 10.30 மணிமுதல் மதிய ளுஹர் தொழுகை வரை இவ்வகுப்புகள் நடக்கின்றன. துவங்கியவுடன் பதினைந்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் கலந்துக் கொள்கின்றனர்.
இது குறித்து சகோதரர் அஷ்ஷைக் கபீர் மதனி கூறும்போது,
மாணவர்களின் ஆரவம் மற்றும் எண்ணிக்கையைப் பொருத்து இந்த வகுப்புகள் விரிவாக்கப்படும், வகுப்பில் கலந்துக் கொள்பவர்கள் ஓராண்டு தொடர் பயிற்சி எடுப்பதன் மூலம் அரபியை சரளமாக பேச முடியும். அதோடு இலக்கணங்களை அறிந்துக் கொண்டால் எந்த அரபு கிதாபையும் மொழி பெயர்த்து வாசிக்க முடியும். அரபு கிதாப்களில் பொதித்து கிடக்கக் கூடியவற்றை அறிந்து வியக்க முடியும் என்றார்.
ஆரம்பமாக சொற்களுக்கான அர்த்தம் மற்றும உச்சரிப்பு வகுப்புகள் நடக்கின்றன. இந்த வாய்ப்பை நமது சகோதரர்கள் பொழுதை வீணடிக்காமல், வெட்கப்படாமல் கலந்து பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் தங்களைத் தாங்களே வியக்கும் அளவிற்கு தேர்ச்சிப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை நாம் சொல்வதற்கு காரணம், ஒரு வகுப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்றுவிக்கும் முறை மிக எளிமையாக அதே நேரம் மிக அழுத்தமாக இருப்பதைக் கண்டோம். கவனம் சிதற வழியில்லாத இத்தகைய வகுப்புகள் கலந்துக் கொள்பவர்களை நிச்சயம் திறமை மிக்கவர்களாக வார்த்தெடுக்கும்.
Labels:
அரபு மொழி,
கபீர் மதனி,
மக்தூம் அப்பா பள்ளி,
மாணவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்


No comments:
Post a Comment