Wednesday, May 22, 2013

மிஃராஜ் இரவென்று மார்க்கத்தில் எதுவுமில்லை.



سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴿
 
.மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:1)
 
மிஃராஜ் - இஸ்ரா என்று முஸ்லிம் உம்மத்தால் அறியப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சி குறித்து விளக்கும் வசனம் இதுதான். மி.ராஜ் எப்படி நடந்தது என்பதை பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளின் வழியாக அறியலாம். அதை விரிவாக விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
 
மிஃராஜ் என்ற வியக்கத்தக்க - இறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது உண்மை அதில் எள்ளளவும் மாற்று கருத்தில்லை.
 
ஆனால் மிஃராஜ் என்ற இச்சம்பவம் குறித்து முஸ்லிம் சமூகத்தில் நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் எவ்வித ஆதாரமுமற்ற வெறும் கற்பனை கட்டுக்கதைகளாகவே இருக்கின்றது.
 
ரஜப் வந்து விட்டால் மிஃராஜை கொண்டாடுவதற்கு தயாராகி விடுகிறார்கள்.  நம்மூரும் அன்று பள்ளிவாசல்களின் அலங்காரத்தாலும்,  பயான், பல்வேறு வணக்கங்களாலும் கலைக்கட்டும். மிஃராஜ் என்பது எந்த மாதத்தில் எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வோ, அவன் தூதரோ நமக்கு சொல்லவில்லை.  இது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த ஆக்கம்.
          
 மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
 
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.
 
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
 
ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.
 
உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.
 
யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்.
ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
 
ரஜப் மாத 27-ம் இரவை மிஃராஜ் இரவு என்று எண்ணி, அன்றய இரவில் அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு, சிலர் விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
 
இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.
 
நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
 
எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை
 
நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?
 
மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
 
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.
 
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
 
"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.
 
இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
 
அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.
 
அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.
 
6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.
 
3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.
 
இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.
 
இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.
 
இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
 
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
 
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697)
 
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)
 
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
 
أَتُعَلِّمُونَ اللَّـهَ بِدِينِكُمْ وَاللَّـهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّـهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
 
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16)
 
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.
 
அல்லாஹ்விற்கு ஆசானாக யாருக்கு விருப்பமோ அந்த துர்பாக்கியசாலிகளே மிஃராஜ் தினத்தை கொண்டாடி அல்லாஹ்வுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
 
இறை நம்பிக்கையாளர்களே... இந்த அதிபயங்கர பாவத்தில் நாம் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டுமா...?  சிந்தித்து முடிவெடுங்கள்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks