Wednesday, June 12, 2013

இத்தாவின் வகைகள் - சட்ட விளக்கங்கள் (மூட நம்பிக்கையை விரட்டுவோம்)

திருமணத்திற்கு பின் ஒரு முஸ்லிம் பெண் கணவரால் தலாக் - விவாகரத்து செய்யப்பட்டாலோ, கணவர் இறந்தாலோ  இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை அணுசரிக்க வேண்டும்.
 
பரவலாக இதை அனைத்து முஸ்லிம்களும் விளங்கி வைத்திருந்தாலும் இத்தா குறித்த அதி தீவிர மூட நம்பிக்கைகளும் - பய உணர்ச்சியும் - அறியாமையும்  சமூகத்தில் நிலைப் பெற்றுள்ளன.
 
இத்தா என்பது அல்லாஹ் வகுத்த சட்டமாகும்.  அதை நம் விருப்பத்திற்கு நாம் மாற்றிக் கொள்ள உரிமைப் பெறவில்லை.  எனவே இத்தா குறித்த விரிவான விளக்கத்தை இங்கு கொண்டு வருகிறோம்.   இதில் சந்தேகமோ மேலதிக விளக்கமோ தேவைப்பட்டால் எழுதுங்கள். (ஆசிரியர்)
 
 
 

"இத்தா”வின் வகைகள் - சட்டங்கள்.
 
திருக்குர்ஆன் இத்தாவை நான்கு முறையில் விளக்குகின்றது.

1. கற்பிணியின்  (வயிற்றில் குழந்தையை சுமந்துள்ளப் பெண்ணின் ‘இத்தா’
 
இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது.
 
கற்பமாக இருக்கும் பெண், விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவர் இறந்தாலோ குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.
 
َأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ

”கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.” (அல்குர்ஆன் 65:4)
 
கற்பம் தரித்த அன்றே ஒரு பெண் இத்தா இருக்கும் நிலையை அடைந்தால் அந்தப் பெண்ணின் இத்தா காலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரையாகும். கிட்டத்தட்ட 10 மாதங்களாகும்.
 
குழந்தைப் பெற்றெடுப்பதற்கு முதல் நாள் ஒரு பெண் இத்தா இருக்க வேண்டி வந்தால் அந்தப் பெண்ணின் இத்தாக் காலம் வெறும் ஒருநாள் தான்.  குழந்தைப் பெற்றவுடன் அந்த பெண் இத்தாவிலிருந்து விடுபட்டு விடலாம்.   இந்த விபரங்களை மேற்கண்ட வசனத்திலிருந்து பெறலாம்.

 2. மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய ‘இத்தா’ மூன்று மாதவிடாய்களாகும்.
 
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ

”தலாக்’ கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும். இந்தப் பொழுதுகளில் அவளுக்கு கற்பத்தை அல்லாஹ் உருவாக்கி இருந்தால் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் பெண் அதை மறைக்கக் கூடாது (அல்குர்ஆன் 2:228)
 
தாய்மையை அடைய வாய்ப்புள்ள பொழுதில் இத்தா இருக்க வேண்டிய நிலைக்கு ஒரு பெண் வந்து விட்டால் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை அவள் இத்தா (காத்திருக்க) வேண்டும்.  இந்தப் பொழுதில் அவள் கற்பம் தரித்திருந்தால் அப்போது அவள் இத்தாவின் கால கட்டம் மூன்று மாதவிடாயிலிருந்து குழந்தைப் பெற்றெடுக்கும் வரை நீண்டு விடும்.
 
இத்தாவை சுருக்கிக் கொள்வதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ ஒரு முஸ்லிம் பெண், தனது கற்பத்தை மறைத்து பொய் சொல்லக் கூடாது.
 
இவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் சட்டங்களாகும்.
 
மாதவிடாய் நின்ற பெண்களுக்கான இத்தா வகைகள்

 3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது.
  •  ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண்.
  • இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண்.
  •  
இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
 
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ
 
”உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடு வது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.” (அல்குர்ஆன் 65:4)
 
மாதவிடாய் கோளாறு, திருமணத்திற்கு பின்  சிறு வயதோ அல்லது முதிர்ந்த வயதோ எந்நிலையில்  மாதவிடாய் நின்று போனாலும் அவர்கள் மூன்றுமாதம் இத்தா (காத்து) இருக்க வேண்டும்.
 
 4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தா
 
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
 
”உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.” (அல்குர்ஆன் 2:234)
 
இந்த காலகட்டத்தில் கணவரால் அந்தப் பெண் கற்பம் தரித்திருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அப்போது அவளது இத்தா காலம் குழந்தைப்பெற்றெடுக்கும் வரையிலாகும்.
 
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும்.
 
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை :
 
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا

பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு.
1 - ஒரு முறையோ இரண்டு முறையோ ‘தலாக்’ சொல்லப் பட்ட பெண் இத்தாவில் இருக்கும்போது வெளிப் படையாகவோ, சைக்கினையாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் மற்றவர் பெண் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் இத்தா காலத்தில் இருக்கும் வரை கணவன், மனைவி என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறார்கள். எனவே அவளிடம் வேறு நபர் திருமணப்பேச்சுக்கள் பேசக்கூடாது. இத்தாகாலம் முடியும் வரை அவள் தன்னுடைய கணவனின் பாதுகாப்பில் அவனுக்கு மனைவி என்ற அந்தஸ்தில் தான் இருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
2. மூன்று தடவை ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது வெளிப்படையாக அந்தப் பெண்ணிடம் திருமணத்திற்கான உத்திரவாதத்தை அவளைத் திருமணம் செய்துக் கொள்ள உரிமையுள்ள எந்த ஆணும் அளிக்கக் கூடாது.
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ ۚ
 
”இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.” (அல்குர்ஆன்: 2:235)
 
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப்பது நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரணமாக ‘இத்தா’ காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
 
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
 
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள்ளேன்.என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப் பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
 
‘இத்தா’ காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது :
 
 وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ
 
‘இத்தா’வின் கெடு முடிவதற்குள் திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:235)
 
தேவையற்ற இத்தா
 
1. திருமணமான பின்னர் உடலுறவு கொள்வதற்கு முன்பாக ஒருவர் விவாகரத்து செய்து விடுவாரானால் இந்த நிலையில் உள்ள பெண்ணுக்கு ‘இத்தா’ கிடையாது.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا ۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًاِ
 
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையுடைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை. (அல்குர்ஆன் 33:49)
 
திருமணமாகி உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவை யானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும். இந்த விபரத்தை மேற்கண்ட வசனத்தின் இறுதியில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ளான்.
 
.
கணவன் இறந்துபோன பெண் மீது ஐந்து விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. :
 
1. நறுமணம் உபயோகித்தல்
 
 கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடையிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
 
”கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
2. உடல் அலங்காரம்
 
 உடலில் மருதாணி உட்பட அழகுபடுத்துதல், அழகு நோக்கில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிகிட்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
 
3. ஆடையில் அலங்காரம்
 
 கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத்தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
 
4. ஆபரணங்கள் அணிதல்
 
 மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது. :
 
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப் படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற் காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவினரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங் களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
 
சுன்னத்தான காரியங்களான நகம் வெட்டுதல்,  தேவையற்ற முடிகளை நீக்குதல், உட்பட இத்தாவிலிருக்கும் பெண் செய்துக் கொள்ளலாம்.
 
குளித்தல் - தலை சீவிக் கொள்ளுதல் - திருமணம் செய்ய விளக்கப்பட்ட உறவினர்களுடன் பேசுதல் - வீட்டில் இயல்பாக இருத்தல் போன்ற எதற்கும் தடையில்லை.
 
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனு மதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்தலாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை. இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது ‘இத்தா’ காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப் படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந் துள்ளார்கள்.
 
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டுமாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இருட்டறையில் முடங்கி கிடப்பது.  வீட்டில் கரண்ட் இணைப்பு இருந்தாலும் மெழுகுவர்த்தியையோ, கரசின் விளக்கையோ ஏற்றி வைத்துக் கொள்ளுதல் போன்ற காரியங்கள் மூட நம்பிக்கைகளின் வெளிப்பாடாகும்.
 
இஸ்லாம் அறிவார்ந்தது. அது ஒருபோதும் இயலாமையிலோ, இருட்டறையிலோ இறை நம்பிக்கையாளர்களைத் தள்ளாது.
 
மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றுவோம்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks