Friday, April 15, 2011
2 - தேவைக்கு போக மீதமுள்ளவற்றிர்க்கே ஜக்காத்
ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்
2 - தேவைக்கு போக மீதமுள்ளவற்றிர்க்கே ஜக்காத்
ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகளை முதல் தொடரில் கண்டோம்.
அனைத்து செல்வத்திற்கும் இறைவன் ஒருவனே சொந்தக் காரனாக இருந்தும் செல்வத்தை 'உங்கள் செல்வம்' என்று மனிதர்களுக்கு சொந்தமாக்கி இறைவன் கூறுவதால் எது சொந்த செல்வமாக இருக்கிறதோ (வாரிசுரிமை அடிப்படையில், உழைப்பால், அன்பளிப்பாக, புதையல் போன்ற ஹலாலான சொத்துக்கள்) அதன் மீதுமட்டும் ஜகாத் கடமையாகும் என்பது அதன் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதை கண்டோம்.
உங்கள் செல்வம் என்று இறைவன் கூறினாலும் மனிதனின் தேவைக்கு போக மீதமுள்ளவற்றின் மீதே ஜகாத் கடமையாகும் என்பதை 2:219வது வசனத்தின் மூலமும் புகாரி 1426வது நபிமொழியின் மூலமும் அறிந்தோம். தேவைக்கு போக மீதமுள்ளது என்றால் என்ன என்பதையும் ஓரளவு அறிந்தோம். அதை இன்னும் கூடுதலாக அறிவோம்.
மனிதர்களுக்கு மனிதர்கள் அவர்கள் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேவைகள் வித்தியாசப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் பிரயாணம் செய்யும் போது அரசு வாகனத்தையோ (பஸ் - ரயில் போன்றவை) தனியார் வாகனத்தையோ பிடித்து சென்று விடுகிறார்கள். தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று ஒரு சொந்த வாகனம் வேண்டும் என்ற மனநிலையோ அதற்கான முயற்சியோ அவர்களிடம் இருப்பதில்லை. (விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வாகனம் வாங்குவதற்குரிய பொருளாதாரம் தன்னிடம் இருப்பினும் அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் (அரபு பிரதேசங்கள்) மற்றும் மேலை நாடுகளில் இந்நிலையை உங்களால் பார்க்க முடியாது. அங்கெல்லாம் குறைந்தது வீட்டுக்கு ஒரு வாகனமாவது வேண்டும் என்பது சராசரியான தேவைக்குள் வந்து விட்டது. குறைந்த வருவாயைப் பெறுபவர்கள் கூட தவணை முறையில் பணத்தை செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
பனிபடர்ந்த - ஐஸ் உரைந்த நிலையில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை வசதிக்கான தேவை என்பது மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. ஆடம்பரமான வீடுகள் ஆடம்பரமான வாகனங்கள் போன்றவற்றையெல்லாம் அந்த மக்கள் நாடுவதில்லை. மனம் விரும்பினாலும் சூழ்நிலை அவற்றையெல்லாம் அனுபவிக்க தடையாக இருக்கின்றன.
அதே போன்று கப்பல்களில் குடி இருக்கும் மக்களை எடுத்துக் கொள்வோம். (வாடகை கொடுத்து காலம் முழுவதும் கப்பலிலேயே தங்கி விடலாம் என்ற வசதிகள் இருக்கின்றன) இந்த மக்களின் தேவைகளும் குறைவு.
மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கான தேவைகளில் பெருத்த வேறுபாடு இருப்பதை இவற்றின் மூலம் விளங்கலாம்.
முஸ்லிமாக இருக்கும் நிலையில் நாகரீக வளர்ச்சியற்றுப் போன பகுதியில் வாழும் செல்வந்தர் கொடுக்க கடமைப்பட்ட ஜகாத் தொகையை விட அதேயளவு செல்வத்தைப் பெற்று நாகரீகம் வளர்ந்த இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அவரை விட குறைந்த அளவே ஜகாத் கொடுக்க வேண்டிவரும். காரணம் இவர்களுக்கு மத்தியில் உள்ள தேவைகளின் வித்தியாசங்களே!
எனவே முஸ்லிம்கள் தங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ளதில் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்தால் போதும். வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போடுகிறார் வீடு கட்டும் அளவு நிலமாக அது இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு அதில் வீடு கட்டப்படா விட்டாலும் அந்த நிலத்திற்கு ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது ஏனெனில் அது அத்தியாவசிய தேவைக்குறியதாகும். வீடு கட்டுவதற்கு இந்த அளவுதான் நிலம் இருக்க வேண்டும் என்ற விதிகள் எதுவுமில்லை. 60ஃ40 என்றோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ கூட ஒருவர் வீடு கட்ட நிலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது வீடுகட்டும் அளவுக்குள்ளதாக இருக்க வேண்டும். 5 செண்ட் நிலத்தில் வீடு கட்டினால் போதும் என்ற நிலையை ஒருவர் உணர்ந்தால் அது மட்டும் தான் ஜகாதிலிருந்து விலக்கு பெறும். 'நான் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டுள்ளேன்' என்று ஒருவர் 20 செண்ட் நிலத்தை காட்டினால் அவர் ஜகாத் கொடுப்பதில் மோசடி செய்கிறார் என்ற நிலைதான் அங்கு உருவாகும்.
நிபந்தனை மூன்று.
'தன் தேவைக்கு போக மீதமுள்ளதை... என்பதில் தேவைகளை தீர்மானிப்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் இறைவன் வழங்கினாலும் எல்லா செல்வங்களுக்கும் இது பொருந்தாது. பல செல்வங்களுக்கு 'தேவைக்குரிய' உச்சவரம்பை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இந்த உச்சவரம்பு செல்வத்திலும் பொருளிலும் மாறுபட்டே நிற்கும். எனவே எந்த பொருளில் - செல்வத்தில் இஸ்லாம் உச்சவரம்பை ஏற்படுத்தியுள்ளதோ அந்த உச்சவரம்பிற்கு உட்படாதவர்கள் மீது அந்த பொருளிலும் - செல்வத்திலும் ஜகாத் கடமையாகாது.
இதை புரிந்துக் கொள்வதற்கு ஒரு நபிமொழியை குறிப்பிடலாம்.
5 ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஜகாத் இல்லை என்பது நபிமொழி (அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) புகாரி 1484)
ஒட்டகத்திற்குரிய உச்சவரம்பு 5 ஆகும். ஒட்டகம் என்ற செல்வம் ஒருவரிடம் இருந்தாலும் 4 ஒட்டகங்கள் வரை அது ஜகாத்திற்குரிய செல்வமாக கருதப்படாது. 5 பூர்த்தியாகும் போதே அவற்றின் மீது ஜகாத் கடமையாகின்றது. 4 ஒட்டகங்களை வைத்திருக்கும் ஒருவர் 'என் தேவைக்கு இரண்டு போதும்' என்று கூறினாலும் கூட அவர் மீது ஜகாத்தை விதிக்க முடியாது விரும்பினால் அவர் மீதி ஒட்டகத்தை தர்மம் செய்து விட்டு போகலாம்.
ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளில் மூன்றாவது அது உச்சவரம்பை அடைந்திருக்க வேண்டும் என்பதாகும். (எவற்றிர்க்கெல்லாம் உச்ச வரம்பு உள்ளது எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் பின்னர் வரும் இன்ஷா அல்லாஹ்)
நிபந்தனை நான்கு.
சில பொருள்களுக்கு இஸ்லாம் உச்சவரம்பை ஏற்படுத்தி இருப்பது போன்று பொருளுக்குரிய காலவரையையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த காலவரையை கடக்காமலிருக்கும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது.
யாரேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஓராண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) திர்மிதி 572) (குறிப்பு இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் ஜைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தி பலவீனமாகி விடுகின்றது. ஆனாலும் இதை தழுவிய இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை திர்மிதி இமாம் 573வது ஹதீஸாக பதிவு செய்கிறார். அதாவது பொருளுக்கு ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை அங்கு வைக்கப்படுகிறது. பெரும்பாலான நபித்தோழர்கள் இந்த கருத்தில் தான் இருந்தார்கள் எனவும் திர்மிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன் விளக்கம் என்ன?
நம்தேவைகளுக்கு போக ரொக்கபணம் 50 ஆயிரம் இருந்தால் நம்மீது ஜகாத் கடமையாகும் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரிடம் 40 ஆயிரம் இருக்கின்றது. நாட்கள் கடந்தாலும் அந்த தொகை கூடவில்லை. 10 மாதங்கள் கழித்து இன்னும் 10 ஆயிரத்தை அவர் பெறுகிறார் இப்போது ஜகாத்திற்குரிய தொகை அவரிடம் வந்துவிட்டாலும் அடுத்த இரண்டு மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்படாது. ஏனெனில் அவருக்கு 50 ஆயிரம் கிடைத்து இன்னும் ஒருவருடம் பூர்த்தியாகவில்லை. ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை 40 ஆயிரத்துடன் இருந்த ஒருவருக்கு நவம்பரில் 10 ஆயிரம் கிடைத்து அவருடைய இருப்பு 50 ஆயிரமாக உயர்ந்தால் நவம்பரில் தான் ஜகாத் வழங்கும் அளவுக்குரிய தொகை அவருக்கு முழுமையாக கிடைத்துள்ளது. முழுமைப் பெற்றதிலிருந்து ஒரு வருடம் கழித்துதான் அதன் மீது ஜகாத் கடமையாகும் என்பதால் அடுத்த நவம்பரில் அவர் இந்த தொகைக்குரிய ஜகாத்தை வழங்கினால் போதும். மேற்கண்ட நபிமொழியிலிருந்து இதை விளங்கலாம்.
இடையில் ஒரு பொருளோ - தொகையோ கிடைத்து ஜகாத் அளவு பூர்த்தி அடைந்தவர்களுக்கு தான் இது சட்டம். ஏற்கனவே ஏராளமான செல்வத்தை வைத்திருப்பவர்களுக்கு புதிதாக ஒரு பொருளோ - தொகையோ கிடைத்தால் அதற்கு அவர்கள் ஒரு வருடம் பொருத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனெனில் அவர்களிடம் ஏற்கனவே ஜகாத் கொடுக்கும் அளவிற்கு செல்வம் இருப்பதால் அதோடு புதிதாக கிடைத்ததையும் சேர்த்து கணக்கு பார்த்து ஜகாத் வழங்கி விட வேண்டும்.
தன் தேவைக்கு போக மீதமாக 1 லட்சம் வைத்திருக்கும் ஒருவருக்கு 10 மாதங்கள் கழித்து இன்னும் 10 ஆயிரம் கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுத்து விட்டு இடையில் கிடைத்த 10 ஆயிரத்திற்கு (அதற்கு இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகாததால்) ஜகாத் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. இடையில் கிடைக்கும் பொருளுக்கு ஓராண்டு நிறைவாகும் வரை ஜகாத் இல்லை என்று நிறைய நபித்தோழர்கள் கருத்து தெரிவித்துள்ளதை இவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. அந்த நபித்தோழர்களின் கருத்து நாம் மேலே குறிப்பிட்ட விளக்கத்தை ஒட்டியே வந்துள்ளது. அதாவது ஜகாத் கடமையாகாதவர்களுக்கு இடையில் கிடைக்கும் பொருள் பற்றியே அந்த நபித்தோழர்களின் கருத்து அமைந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸை பல முறை சிந்திக்கும் போது விளங்கலாம்.
எனவே ஜகாத் கடமையாகும் நிபந்தனையில் அது ஒரு வருடத்தை எட்டி இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
ஒரு வருடம் என்பதில் விதிவிலக்கு பெருபவை பூமியின் மேல்பாக விளைச்சல்கள் மற்றும் பூமிக்கு அடியிலிருந்து பெறப்படும் பொருட்களாகும். விளைச்சல் நிலங்கள், பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் புதையல்கள், பெட்ரோல், இரும்பு, நிலக்கரி போன்றவற்றிர்க்கும் கடலுக்கடியிலிருந்து பெறப்படும் பொருட்களுக்கும் ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது. இத்தகைய பொருட்கள் கிடைத்து அதன் பலனை பெரும் நாட்களில் அதன் ஜகாத்தை வழங்கி விட வேண்டும். இதற்குரிய ஆதாரங்களை அடுத்த தொடரில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
Labels:
ஜக்காத் சட்டங்கள் - 2
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment