Friday, April 15, 2011

விளைச்சலுக்கான நிபந்தனைகள் தொடர் - 3

ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்


விளைச்சலுக்கான நிபந்தனைகள் தொடர் - 3

ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளை கண்டு வருகிறோம். நிபந்தனை நான்கில் பொருள் மீது ஜகாத் கடமையாக வேண்டுமானால் ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விளக்கத்தைக் கண்டோம். இந்த நிபந்தனை எல்லா பொருளுக்கும் பொருந்தாது.

ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பதில் விலக்கு பெருபவைகளும் அதற்கான ஆதாரங்களும்:

படர்ந்துக் கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்களையும் பேரித்த மரங்களையும் மாறுபட்ட உணவு தானியங்களையும் மாதுளை ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 6:141)

ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பதிலிருந்து பயிரிடப்பட்டவை பயிரிடப்படாமல் தன்னால் வளர்ந்து நிற்கும் அனைத்தும் அடங்கி விடும் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்தி விடுகிறது.

படர்ந்து கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்கள் என்று இறைவன் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் கவனிக்கத்தக்கவையாகும்.

படரும் தன்மையுள்ள காய்கறி - பழத் தோட்டங்கள் (உதாரணமாக தக்காளி - வெள்ளரி - பூசணி - தர்பூஸ் - புடலங்காய் - திராட்சை - இவைப் போன்ற படர்ந்து வளரும் தன்மையுள்ள அனைத்தும்).

படராத தோட்டங்கள் - பேரீத்தம், ஒலிவம், மாதுளை என்று இறைவன் தனியாக கூறி விட்டதால் மீதி அனைத்து தோட்டங்களும் இதில் அடங்கி விடும். மா, தென்னை, பலா, முந்திரி, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, போன்ற உணவாக பயன்படும் அனைத்து தோட்ட வகைகளையும் இது கட்டுப்படுத்தும்.

சவுக்கு, தேக்கு, பூவரசன், வேம்பு, பனை, கொங்கை, இது போன்று கட்டுமானத்திற்கு பலகையாக பயன்படும் மர வகைகளும் அடங்கும்.

தானிய வகையை சார்ந்த நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், பட்டாணி, கம்பு, இதர பயிரு வகைகள்.

இவை அனைத்திற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும். இங்கு ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது. ஏனெனில் மேற்கண்ட வசனத்தில் 'அவற்றை உண்ணுங்கள் பலனை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய ஜகாத்தை கொடுத்து விடுங்கள்' என்று இறைவன் தெளிவாக கூறிவிட்டதால் கால அளவு என்ற நிபந்தனை இங்கு அடிப்பட்டு போய் விடுகிறது.

இதற்கு காரணம் என்ன?

கால அளவை குறிப்பிடாமல் அறுவடையை இறைவன் குறிப்பிடுவதற்கு காரணத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) காலத்தில் தங்கம் வெள்ளி போன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம். ஆனால் அவை அன்றாட- அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் 'அளவுகோலாக' பயன்படவில்லை. தெளிவாக விளங்க வேண்டுமானால் இன்றைக்கு உள்ள 'கரண்சி' நிலவரம் அன்றைக்கு இல்லை.

இன்று நாம் எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமானாலும் அதற்கு பணம் தேவைப்படும். பண்ட மாற்று முறை என்பது இன்று நடை முறையில் இல்லை. வீட்டில் இருக்கும் இரண்டு கிலோ கோதுமையை கொண்டு சென்று கடையில் கொடுத்து விட்டு மாற்று கோதுமை வாங்கி வர முடியாது.

பாசுமதி அரிசி ஒரு மூட்டையை கொடுத்து விட்டு பொன்னி ஒரு மூட்டையை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை பார்ப்பது அரிது.

கோதுமை பெற வேண்டுமானாலும் அரிசி வாங்க வேண்டுமானாலும் அதற்கு இன்றைய உலகில் பணம் தேவை.

கையில் தங்க மோதிரம் அணிந்திருக்கும் ஒரு பெண் கடைக்குச் சென்று தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்து விட்டு வர முடியாது. முதலில் தங்க மோதிரத்தை விற்று பணமாக்கி அதிலிருந்துதான் பொருள்களை வாங்க முடியும்.

கழுத்து நிறைய நகையை அணிந்துக் கொண்டு சென்னை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து நகையை கழற்றி கண்டக்டரிடம் கொடுத்து போகுமிடத்திற்கு (உதாரணமாக மதுரைக்கு) ஒரு டிக்கட் கொடுங்கள் என்று எவராலும் இன்றைக்கு கேட்க முடியாது. கேட்டால் பெற்றுக் கொள்ளும் உரிமையும் நடத்துனருக்கு கிடையாது. அப்படியே பெற்றுக்கொண்டாலும் அதை அங்கீகரிக்கும் சட்ட விதி அரசிடம் இல்லை. நகை பணமாக மாறாத வரை போகுமிடத்திற்கு டிக்கட் கிடைக்காது.

இதிலிருந்து அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணமே முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், என்னதான் விலை மதிப்புமிக்க பொருள் நம்மிடம் இருந்தாலும் அவை பணமாக மாறாத வரை நம் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதையும் விளங்கலாம்.

இப்படி ஒரு நடைமுறை நபி(ஸல்) காலத்தில் இல்லை. அன்றைக்கு தங்கம் வெள்ளி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது மாதிரியே பண்ட மாற்று முறைகளும் பழக்கத்தில் இருந்தன.

கோதுமைக்கு கோதுமையை, பழங்களுக்கு பழங்களை, தானியங்களுக்கு தானியங்களை மாற்றிக் கொள்ளும் பழக்க வழக்கம் அன்றைக்கு சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. தேவையானவைகளை விலை கொடுத்து வாங்கவும் செய்யலாம் பொருள் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

இப்படி ஒரு நடைமுறை அன்றைக்கு இருந்ததால் செல்வந்தர்களிடமிருந்து வந்து சேரும் ஜகாத் தங்கம் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் அன்றைக்கு இல்லாமல் போயிற்று. தங்கத்திற்கு தங்கத்தை - வெள்ளிக்கு வெள்ளியை ஜகாத்தாக பெற்றுக்கொண்டது போன்றே தானியங்களுக்கு தானியங்களையும் உயிரினங்களுக்கு உயிரினங்களையும் நபி(ஸல்) உட்பட அன்றைய ஆட்சியாளர்கள் ஜகாத்தாக பெற்றார்கள். அதை அப்படியே மக்களுக்கு வினியோகமும் செய்தார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

கால அளவை குறிப்பிடாமல் அறுவடையை இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பாழ்பட்டு போன உணவு தானியங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுவது தடுக்கப்பட்டு புதிய உணவு தானியங்கள் அவர்களுக்கு கிடைக்கும் வழி துவக்கி வைக்கப்பட்டது.

ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனையில் ஒன்றான ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை விளைச்சலுக்கு பொருந்தாது, விளைச்சலை பொருத்தவரை அவைகளின் தன்மையை பொருத்து பல காலக் கட்டங்களில் ஜகாத் விதிக்கு அவை உட்படும் என்பதை இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்வோம்.

வருடத்திற்கு இரண்டு முறை சாகுபடி செய்யப்படும் பயிரினங்கள் (உதாரணம் வேர்கடலை - உளுந்து போன்றவை) இரண்டு முறை ஜகாத் விதிக்கு உட்பட்டு விடுகிறது.

மாமரம் வருடத்திற்கு ஒரு முறை காய்ப்பதால் வருடத்திற்கு ஒருமுறை என்ற விதி இதற்குப் பொருந்தும். தென்னை - வாழை - பலா இவற்றுக்கு வருடம் என்ற விதி பொருந்தாது.

சவுக்கை பயிரிடுபவர்கள் சராசரியாக ஐந்து வருடங்களில் அவற்றை அறுவடைச் செய்தால் ஐந்து வருடங்களுக்கு அவற்றின் மீது ஜகாத்தை விதிக்க முடியாது. அறுவடைச் செய்யும் போதுதான் அது ஜகாத் விதிக்கு உட்படும்.

தேக்கு மரத்தை பயிரிடுபவர்கள் அதன் பலனை அடைய குறைந்தது பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் அந்த மரங்கள் மீதான ஜகாத்தை விதிக்கும் ஆதாரங்கள் எதுவுமில்லை. அறுவடையின் பலனை பெரும் நாளில் அவற்றிற்குறிய ஜகாத்தைக் கொடுங்கள் என்று இறைவன் குறிப்பிடுவதால் அதற்கு முந்தைய ஆண்டுகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஓராண்டு நிபந்தனையில் அடங்காத இன்ன பிற பொருட்கள் என்ன?

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்த நல்லவற்றிலிருந்தும், நாம் உங்களுக்காக பூமியிலிருந்து வெளிப்படுத்தி கொடுத்ததிலிருந்தும் (இறை வழியில்) செலவு செய்யுங்கள். (அல் குர்ஆன் 2:267)

நாம் சம்பாதித்தவை.

பூமியிலிருந்து வெளிபடுத்தி நமக்காக கொடுக்கப்பட்டவை.

நாம் சம்பாதித்தவை என்பதை 'உங்கள் செல்வம்' பற்றி விளக்கிய முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளோம். அவற்றிற்கு ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தும்.

பூமியிலிருந்து வெளிப்படுத்திக் கொடுத்தவை என்பதை எப்படி புரிந்துக் கொள்வது? பூமியிலிருந்து வெளிப்படும் விளைச்சல் நிலங்கள் போன்றுதான் இவற்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.

விளைச்சலுக்கு எப்படி ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாதோ அதே போன்று பூமியிலிருந்து இறைவன் வெளிப்படுத்திக் கொடுத்தவற்றிற்கும் ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது என்பதே சரியாகத் தெரிகிறது.

ஒருவருக்கு பூமியிலிருந்து புதையல் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 'நான் ஒரு வருடத்திற்கு பிறகு தான் இதற்கு ஜகாத் கொடுப்பேன்' என்று அவரால் சொல்ல முடியாது. ஏனெனில் புதையலுக்கு இருபது சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

புதையலை பிரித்து தனியாக கூறியுள்ளதால் மற்ற நிபந்தனையை இங்கு பொருத்தி பார்க்க முடியாது. புதையல் கிடைத்து பலனை அடையும் போது அதற்குரிய ஜகாத்தை வழங்கி விட வேண்டும். புதையல் எப்படி பூமியிலிருந்து வெளிப்படுகிறதோ அதே போன்று தான் இரும்பு - நிலக்கரி - பெட்ரோல் - யுரேனியம் போன்ற பூமியிலிருந்து வெளிப்படும் அனைத்து பயன்பாட்டுப் பொருள்களுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.

புதையல் என்பது எவ்வித எதிர்ப்பார்ப்பும் - உழைப்பும் இன்றி கிடைப்பதால் அவற்றின் மீது இருபது சதவிகிதம் ஜகாத் விதிக்கப்பட்டுள்ளது. இதர பூமியிலிருந்து வெட்டி எடுக்கக் கூடிய - பெரும் பொருளாதாரம் - உழைப்பு - நேரத்தை உள் வாங்கக் கூடிய இரும்பு - நிலக்கரி - பெட்ரோல் - யுரேனியம் மற்றும் இது போன்றவற்றிற்கு இருபது சதவிகித ஜகாத்தை விதியாக்க முடியாது. நபி(ஸல்) காலத்தில் இவைகள் இல்லை என்பதால் இவைகளை எந்த அடிப்படையில் புரிந்துக் கொள்வது என்பதில் மாறுபட்ட சிந்தனையோட்டங்கள் நிலவுகிறது. எதன் மீது எவ்வளவு ஜகாத் கடமையாகும் என்பதை விளக்கும் போது இது பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

நிபந்தனை ஜந்து

ஒருவர் மீது ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளில் அடுத்தது என்னவென்றால் கடன் சுமையை விட்டு அவர் விடுபட்டவராக இருக்க வேண்டும். கடன் பட்டவர் ஜகாத்தை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றவராக இருக்கிறார் (பார்க்க அல் குர்ஆன் 9:60) ஜகாத்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பவர் மீது ஜகாத்தை கடமையாக்க முடியாது.

ஒருவரிடம் இருக்கும் சொத்தைவிட அவர் பட்டுள்ள கடன் அதிகமாக இருக்கிறது என்றால் கடனை அடைக்கத்தான் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர கடனை கண்டுக் கொள்ளாமல் சொத்துக்கு ஜகாத் வழங்குமாறு இஸ்லாம் சொல்லவில்லை.

நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியிலிருந்து 'சொந்த தேவைக்கு போக மீதமுள்ளதை' தான் இறை வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கிறது. கடன் என்பது ஒருவனின் சொந்த தேவைக்கு உட்பட்டது மட்டுமின்றி பிறரது உரிமையையும் உள்ளடக்கியதாகும். இந்நிலையில் சொந்த தேவையையும் - பிறரது உரிமையையும் கண்டுக் கொள்ளாமல் இறைவழியில் செலவு செய்யும் உரிமையை இஸ்லாம் எவருக்கும் வழங்கவில்லை.

ஒருவரிடம் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் அல்லது அதற்கு ஈடான சொத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் பட்டுள்ள கடனோ இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்றால் இருக்கும் பணத்தையோ - சொத்தையோ கொண்டு அவர் தான் பெற்ற கடனைத்தான் அடைக்க முன் வரவேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இது போன்ற கடனாளிகளிடமிருந்து ஜகாத்தை வசூலிக்காது. அவரது சொத்தைப் பெற்று கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியைத்தான் இஸ்லாமிய அட்சியாளர்கள் செய்வார்கள்.

ஐந்து லட்சம் மதிப்புள்ள செல்வத்தை வைத்திருக்கும் ஒருவர் இரண்டு லட்சம் கடனாளியாக இருக்கிறார் என்றால் கடனுக்குரிய இரண்டு லட்சம் போக மீதமுள்ள மூன்று லட்சத்திற்கு கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்தால் போதும். இங்கு நாம் ஒரு முக்கிய சிந்தனையை நினைவில் நிறுத்த வேண்டும். கடன் தொகை போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்தால் போதும் என்று இஸ்லாம் சொல்வதற்குக் காரணம் கடன் என்பதில் பிறரது உரிமை அடங்கியுள்ளது என்பதால்தான். இதிலிருந்து கடன்கள் விரைவில் அடைக்கப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய லட்சியம் தெளிவாகின்றது.

கடனாளியாக இருக்கும் ஒருவர் அதை அடைக்கும் அளவிற்கு செல்வமும் - சூழ்நிலையும் இருந்தும் கடனை அடைக்காமல் தாமதப்படுத்தினால் அவர் குற்றவாளியாகி விடுவார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லாத நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்கும் விஷயத்தில் - கடனை அடைக்கும் விஷயத்தில் மிகவும் பொருப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

எனவே கடனுள்ளவர் தன்னிரைவு அடைந்தவராக கருதப்பட மாட்டார் என்பதால் அவர்மீது ஜகாத் கடமையாகாது. கடன்பட்ட தொகைக்கும் ஜகாத் வழங்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவர் இரண்டு லட்சம் கடன் பெறுகிறார். இப்போது இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள உச்ச வரம்பை கடந்த அளவு அவரிடம் பணம் உள்ளது. இந்நிலையில் அதன் மீது ஜகாத் கடமையா என்றால் இல்லை என்ற முடிவே சரியாகத் தெரிகிறது.

ஒருவர் கடன் பெறுவதற்கு காரணம் அவரது சொந்த தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்குத் தான். உதாரணமாக வீடு கட்டுவதற்காக ஒருவர் பல லட்சங்கள் கடன் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது அவரது சொந்த தேவைக்குரியதாகி விடுகிறது. சொந்தத் தேவை என்பது அவரை பொறுத்தவரை உச்ச வரம்பை கடக்காததாகும். அதாவது 'தேவைக்கு போக மீதமுள்ளதை' என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். கடன் பட்டவர் சொந்த தேவைக்காகத்தான் கடன் படுகிறார் என்பதால் அதன் மீது ஜகாத் கடமையாகாது என்பதே சரியாகும். எல்லா கடனுக்கும் இந்த அளவுகோல் பொருந்துமா என்பதை வரும் தொடர்களில் விளக்குவோம்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks