Friday, April 15, 2011
கடனாளி - கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள் - 4
ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்
கடனாளி - கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள் - 4
இதுவரை வெளி வந்த தொடர்களில் ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளை கண்டு வருகிறோம். இதற்கு முந்தய தொடரில் கடன் பட்டுள்ளவர் மீது ஜகாத் கடமையில்லை ஆனாலும் எல்லா கடன்களுக்கும் இது பொருந்தாது என்று முடித்திருந்தோம். இனி அதன் விபரத்தைப் பார்ப்போம்.
வளர்ந்த இன்றைய பொருளாதார உலகில் கடன் என்பது ஒரு உலக பொருளாதார திட்டமாகவே முன் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு விட்டது. எனவே கடன்களின் வகைகள் என்ன? அவற்றின் மீது ஜகாத் கடமையாகுமா... ஆகாதா... என்பதையெல்லாம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடன்கள் மூன்று நிலைகளில் பெறப்படுகின்றன.
- தேவைக்காக கடன் படுவது
- அவசரத்திற்காக கடன் படுவது
- சூழ்நிலைக்காக கடன் படுவது
தேவைக்காக கடன் படுவோர்:
பொருளாதாரத்தை சேமித்து வைக்க வழியில்லாத அளவிற்கு உள்ளோர் அல்லது மிக குறைந்த அளவு பொருளாதார சேமிப்பைப் பெற்றோர்களாவர். இவர்களுக்கு மேலதிக தேவை என்பது தவிர்க்க முடியாததாகி விடும். சக்திக்கு மீறிய ஒரு பெரிய காரியத்தை செய்தாக வேண்டும் என்ற நிலையை இவர்கள் அடையும் போது கடன் படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வீடு கட்டுவது - திடீரென்ற பெரிய அளவிளான மருத்துவ செலவுகள் - வெளி நாட்டு பயண ஏற்பாடு - குழந்தைகளின் மேல் படிப்பு - வீட்டில் திருமணம் என்று ஏதாவதொன்று நடக்கும் தருணங்களில் கடன் என்பது இவர்கள் மீது கட்டாய விதியாகி விடுகிறது.
இத்தகைய சந்தர்பங்களில் இவர்கள் கடன் பட்டால் - அது லட்சங்களை கடந்தாலும் - அதன் மீது ஜகாத் கடமையாகாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தேவைக்காகவே கடன் படுகின்றனர். 'தேவைக்கு போக மீதமுள்ளதின் மீதே ஜகாத் கடமை' என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
ஒருவர் வீடு கட்ட, அல்லது குழந்தையின் கல்லூரி படிப்பிற்காக 2 லட்சம் கடன் படுகிறார் என்றால் இப்போது இவரிடம் இருக்கும் தொகை இஸ்லாம் ஜகாத்திற்கு வரையறுக்கும் உச்சவரம்பை கடந்திருந்தாலும் அவற்றின் மீது ஜகாத் கடமையாகாது. இங்கு தொகையின் அளவை - மதிப்பைப் பார்ப்பதை விட பெறப்பட்ட நோக்கத்தை இஸ்லாம் பார்க்கும். இதை கருத்தில் கொண்டு தான் 'கடன் தொகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டாம்' என்ற கருத்தை ஆய்ஷா(ரலி) முன் வைக்கிறார்கள். (நூல் அல் அம்வால்)
அவசரத்திற்கு கடன் படுவோர்:
இதுவும் இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. நல்ல செல்வ நிலையில் இருப்பவர்களுக்கு சில நேரம் அவர்களின் பணம் கைக் கொடுக்காமல் போய் விடும். வங்கி விடுமுறை நாட்களில் அவசரமாக பணம் தேவைப்படும் போது 'ஓரிரு நாட்களில்' தருவதாக இவர்கள் பிறரிடம் கடன் படுவார்கள். செல்வந்தர் ஒருவர் வெளியில் செல்கிறார், செல்லும் இடத்தில் விஸா கார்ட், மாஸ்டர் கார்ட் போன்றவை தவறி விடுகிறது என்றால் இவர்கள் பிறரிடம் கடன் பட்டுதான் ஆக வேண்டும். இது போன்று எத்துனையோ சூழ்நிலைகளில் அவசரமாக கடன் படும் சூழ்நிலை செல்வந்தர்களுக்கு ஏற்படத்தான் செய்யும். ஜகாத்தை கணக்கிடும் கால கட்டங்களில் ஒருவர் அவசரத்திற்காக கடன் படுகிறார் என்றால் தன்னை கடனாளி லிஸ்ட்டில் சேர்த்து அவரால் ஜகாத் கொடுக்காமல் ஒதுங்க முடியாது. ஏனெனில் இவர் ஏற்கனவே ஜகாத் கடமையாகும் அளவிற்கு சொத்தைப் பெற்றுள்ளார். இந்த அவசர தேவை என்பது நிரந்தரமல்ல என்பதால் அவர் ஜகாத்திலிருந்து விடுபட முடியாது.
சூழ்நிலைக்காக கடன் படுவோர்:
நிறைந்த செல்வத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்கும் அதே வேலையில் சூழ்நிலை இவர்களை கடன்பட வைத்து விடும். வருமான வரி குறுக்கீடு, சொந்த செல்வம் - தொழில் - சொத்து ஆகியவற்றிர்க்கான பாதுகாப்பின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொழில் அல்லது வியாபாரம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வங்கிகளிலிருந்து கடன் படுவோர். இவர்கள் பல லட்சங்கள் வரை (பல முறைக் கூட) வங்கிகளிலிருந்துக் கடன் படுவார்கள். இவர்களும் தம்மை கடனாளி என்று கருதி ஜகாத் கொடுப்பதிலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது.
கடன் பெற்றும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்ட இவர்கள் விஷயத்தில் கடன் தொகைக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டுமா....என்பதை நாம் விளங்க வேண்டும்.
இது குறித்து மூன்று வித கருத்தோட்டங்கள் அறிஞர்களுக்கு மத்தியில் நிலவுகிறது.
ஒரு உதாரணத்துடன் இதை அணுகுவோம்.
10 லட்சம் சொத்தைப் பெற்றுள்ள ஒருவர் சூழ்நிலைக்காக வங்கியிலிருந்து 8 லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவரிடம் 18 லட்சம் உள்ளது.
18 லட்சத்திற்கும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டுமா..
10 லட்சத்திற்கு கொடுக்க வேண்டுமா..
10 லட்சத்தில் 8 லட்சம் கடன் அடைக்க வேண்டியுள்ளதால் 2 லட்சத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டுமா...
தங்கள் ஆய்வு மற்றும் சிந்தனைக்கேற்ப அறிஞர்கள் இந்த மூன்று கருத்தையும் இப்படியும் அப்படியுமாக சரிகண்டாலும் கூட இரண்டாவது கூற்றான 10 லட்சத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகிறது. ஏனெனில் 18 லட்சத்தில் 8 லட்சம் திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன் தொகையாகி விடுவதால் அது அவருக்குரிய சொந்த பணமாக கருதப்பட வாய்ப்பில்லை. 'உங்கள் செல்வத்திற்கு' ஜகாத் கொடுங்கள் என்று இறைவன் கூறியுள்ளதால்(முந்தைய தொடர்கள்) சொந்த செல்வமே ஜகாத் சட்டத்திற்குள் அடங்கும். வங்கியில் கடன் படாத நிலையில் அவர் இருந்தால் இப்போது 10 லட்சம் என்பது அவரது சொந்த செல்வம். இதன் மீதே ஜகாத் விதியாகும். 'கடன் தொகைக்கு ஜகாத் இல்லை' என்பது இங்கும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.
கையிருப்பு 10 லட்சம் இருக்கும் போது 2 லட்சத்திற்கு ஜகாத் கொடுத்தால் போதும் என்ற கூற்று எந்த அடிப்படையும் இல்லாமல் போய் விடுகிறது.
கடன் தொகையைப் பற்றி சுருக்கமாக சொல்வதாக இருந்தால்,
தம் சொந்த தேவையை முழுதும் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதியைப் பெறாதவர்கள் 'தேவைக்காக' கடன் பட்டால் அது லட்சங்களை கடந்தாலும் கடன் பட்டவர் மீது ஜகாத் கடமையாகாது.
தம் சொந்த தேவையை முழுதும் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதியைப் பெறாதவர்கள் 'தேவைக்காக' கடன் பட்டால் அது லட்சங்களை கடந்தாலும் கடன் பட்டவர் மீது ஜகாத் கடமையாகாது.
தம் தேவைக்காக இல்லாமல் பிற நோக்கங்களுக்காக கடன்படுவோராக இருந்தால் அவர்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தப்பிக்க முடியாது.
இனி செல்வந்தர் ஒருவர் பிறருக்கு கடன் கொடுத்தால் அவர் கடன் கொடுத்த தொகைக்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டுமா... என்பதை பார்க்க வேண்டும்.
10 லட்சங்களுக்கு சொந்தக்காரரான ஒருவர் பிறரது கஷ்ட நிலையைப் போக்குவதற்காக 2 லட்சங்களை கடன் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் 10 லட்சத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது கடனாக வெளியில் நிற்கும் 2 லட்சம் போக மீதி 8 லட்சத்திற்கு ஜகாத் கொடுத்தால் போதுமா...
மொத்த தொகைக்கும் கொடுக்கத்தான் வேண்டும் என்பது சிலரது கருத்தாக இருந்தாலும் கடனாக கொடுத்தத் தொகை மீண்டும் கைகளுக்கு வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையாகாது என்பதற்கே ஆதாரம் கிடைக்கின்றது.
செல்வ நிலையிலிருந்து பிறருக்கு கடன் கொடுத்து உதவுபவர்களுக்கு இஸ்லாம் சில அறிவுரைகளை முன் வைக்கிறது.
(செல்வந்தர்களே உங்களிடம்) கடன் பெற்றவர் வசதியற்றவராக இருந்தால் அவருக்கு வசதி ஏற்படும் வரை (கடனை திருப்பிக் கொடு என்று அவசரப்படுத்தாமல்) பொறுத்திருங்கள். (அவரின் ஏழ்மை நிலைப் பற்றிய) உண்மையை நீங்கள் அறிந்தவர்கள் என்றால் (அந்த தொகையையே அவர்களுக்கு) தர்மமாக விட்டு கொடுத்து விடுங்கள் அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். (அல் குர்ஆன் 2:279)
செல்வ நிலையில் இருப்பவர்களிடம் இருக்க வேண்டிய பரந்த மனப்பான்மையையும், கடன் பட்டவர்கள் தாம் பெற்ற கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டிய அக்கறையையும் இறைவன் இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளான்.
'வசதி வரும் வரை பொறுத்திருங்கள்' என்பது கடன் பட்டவர் கடனை திருப்பி அடைக்க வேண்டும், அதற்கான சூழ்நிலைகளை முயற்சித்து உருவாக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாகும்.
'விட்டு கொடுத்து விடுங்கள்' என்பது கடன் பட்டவரின் கஷ்ட நிலையை உணர்ந்து அன்பளிப்பாக விட்டு கொடுத்து விடுதலையும், அல்லது அந்த செல்வந்தர் கொடுக்க வேண்டிய தர்மமான ஜகாத் தொகையிலிருந்து அந்த கடனை கழித்துக் கொள்ளலாம் என்பதையும் உள்ளடக்கியதாகும்.
கடன் பட்டவர் அதை திருப்பி அடைக்க முடியாத கஷ்ட நிலையில் இருக்கிறார் என்பது தெரிய வரும் போது கடனை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் அவரை தள்ளுவது முறையல்ல. கடன் பட்டவர் தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் அந்த கடனை திருப்பி அடைத்துத்தான் ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் போது பல விபரீதங்கள் நிகழ்கின்றன.
கடன் சுமையால் வீடு வாசலை விற்றுவிட்டு நடுத்தெருவுக்கு குடும்பம் வந்து விடுவது, குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்வது, கடனுக்கு பகரமாக குடும்பப் பெண்கள் கற்பை இழக்க நேரிடுவது போன்ற கொடூரங்கள் உலகில் நிகழ்கின்றன.
ஏழ்மையில் இருக்கும் ஒரு மனிதனின் நிலைக் கண்டு அவனுக்கு உதவி அவனை முன்னுக்கு கொண்டுவர வேண்டிய மன நிலையைப் பெற்றிருக்கும் மனித சமுதாயத்தின் பெரும் பகுதி அவனது ஏழ்மையையும், இயலாமையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதாபிமானமற்ற நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.
இஸ்லாம் இதில் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதை மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.
பிறருக்கு கடன் கொடுத்தவர்கள் கடன் பட்டவரால் அதை திருப்பி அடைக்க முடியாத சூழ்நிலையை உணர்ந்தால் 'இறைவனுக்காக' அதை அவருக்கே விட்டு கொடுத்து விட வேண்டும்.
ஒரு மனிதர் மரணித்து அடக்கப்பட்டார். 'நீ என்ன நன்மையை சொல்லி (செய்து) விட்டு வந்தாய்?' என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கள் செய்து வந்தேன். மக்களிடம் கடன் தொகையை வசூல் செய்யும் விஷயத்தில் வசதியுள்ளவர்களுக்கு அவகாசமும், வசதியற்றவர்களின் கடனை மன்னித்து (தள்ளுபடி) செய்தும் வந்தேன்' என்றார். இறைவன் அவரை மன்னித்தான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஹூதைஃபா(ரலி) புகாரி 2391)
தொகை பெரிதாக இருக்கிறது அவ்வளவையும் விட்டு கொடுக்க முடியாது என்றால் - அது தனக்கு இழப்பை ஏற்படுத்தும் என்றால் - முடிந்த அளவு கடனை தள்ளுபடி செய்து மீதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதுவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் முஸ்லிம்களுக்கு போதிக்கப்பட்டப் பாடமாகும்.
எனது தந்தை கடன் பட்ட நிலையில் உஹது போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனை கேட்டு கடுமைக் காட்டினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றிக் கூறினேன். அதற்கு நபி(ஸல்) கடன் கொடுத்தவர்களிடம் 'என் தோட்டத்து பேரித்த பழங்களை (கடனுக்கு பகரமாக கிடைப்பதைப்) பெற்றுக் கொண்டு மீதி கடனை தள்ளுபடி செய்துவிடுமாறு' கேட்டுக் கொண்டார்கள் என ஜாபிர் பின் அப்தல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 2395)
இந்த விவரத்தையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்வோம்.
ஒருவர் இன்னொருவருக்கு கடன் கொடுக்கிறார் என்றால் அவர் மூன்று நிலைகளை கையாள வேண்டும்.
1) கடன் கொடுத்தவருக்கு அவகாசம் கொடுத்து கடன் தொகை திரும்ப கிடைக்கும் வரை பொறுத்திருத்தல்.
2) கடன் பட்டவரின் ஏழ்மை நிலையை உணரும் அதே வேளையில் முழு தொகையையும் விட்டு கொடுக்க முடியாத மன நிலை இருந்தால் கலந்து பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு மீதியை தள்ளுபடி செய்தல்.
3) கடன் தொகை முழுவதையும் இறைவன் பாதையில் அவருக்காக விட்டு கொடுத்து விடுதல்.
இந்த மூன்றில் ஒருவர் எதை தேர்ந்தெடுத்தாலும் அது அவரது விருப்பத்தை சார்ந்ததாகும். இப்போது பிரச்சனைக்கு வருவோம்.
ஒருவர் இன்னொருவருக்கு ஒரு பெரிய தொகையை கடன் கொடுக்கிறார் இப்போது கடன் கொடுத்த தொகைக்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டுமா என்றால் வழங்க வேண்டியதில்லை. ஏனெனில் கடனாக வெளியில் சென்ற தொகை மீண்டும் இவர் கைகளுக்கு வந்து சேருமா... என்பது இங்கு உறுதி படுத்தப்படாத நிலையில் உள்ளது.
அந்த தொகை திரும்ப கிடைக்காமலும் போகலாம் அல்லது அதிலிருந்து சிறிதளவு மட்டும் கிடைக்கலாம் என்ற நிலைகளெல்லாம் அதன் மீது இருக்கும் போது அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
எனவே கடனாக கொடுக்கபட்ட தொகை மீண்டும் தன்னிடம் வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையில் என்பதே சரியாகும். அந்த தொகை கையில் கிடைத்த பிறகு அதற்குறிய ஜகாத்தை கொடுத்தால் போதும்.
இன்னும் சொல்லப் போனால்,
ஒருவர் இரண்டு லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆண்டு இறுதியில் தன்னிடம் உள்ள சொத்துக்கு ஜகாத்தை கணக்கிடுகிறார். 25 ஆயிரம் ஜகாத் கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது கடனாக கொடுக்கப்பட்ட தொகை திரும்ப கிடைக்காது என்று உணர்ந்தால் இந்த 25 ஆயிரத்தை அந்த இரண்டு லட்சங்களிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
அதாவது கடன் பெற்றவருக்கு 25 ஆயிரத்தையும் ஜகாத் தொகையாக வழங்கிவிட்டதாக கூறி அவரிடமிருந்து வர வேண்டிய கடன் தொகையை 1 லட்சத்து 75 ஆயிரமாக ஆக்கிக் கொள்ளலாம். ஜகாத் தொகையைப் பெற தகுதி பெற்றவர்களில் கடனாளிகளும் அடங்குவர். அந்த அடிப்படையில் கடனாளிக்கே முழு ஜகாத் தொகையையும் வழங்கி அவரை கடன் சுமையிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்யலாம்.
இதில் எந்த நிலையை தேர்ந்தெடுத்தாலும் கடனாக வெளியில் உள்ள செல்வத்திற்கு ஜகாத் கடமையாகாது என்பது மட்டும் உறுதியானதாகும்.
அடுத்து தன் கைவசம் இல்லாத ஆங்காங்கே சேமிக்கப்படும் வைப்பு நிதிகளுக்கு ஜகாத் கடமையா... என்பதை பார்ப்போம்.
Labels:
ஜக்காத் சட்டங்கள் - 4
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment