Friday, April 15, 2011
வைப்பு நிதிகளுக்கான ஜக்காத் - தொடர் - 5
ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்
- தேவைக்கு போக மீதமுள்ளவற்றிர்க்கே ஜக்காத் தொடர் - 2
- விளைச்சலுக்கான நிபந்தனைகள் தொடர் - 3
- கடனாளி - கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள் தொடர் - 4
வைப்பு நிதிகளுக்கான ஜக்காத் - 5
கடன் பெற்றத் தொகை - கடன் கொடுத்தத் தொகை இவற்றிர்க்கு ஜகாத் உண்டா என்பதை சென்ற தொடரில் அலசினோம். சேமிப்பு நிதி - வைப்பு நிதிகளின் நிலவரம் என்ன என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சேமிப்பு நிதி
சேமிப்பு நிதி - வைப்பு நிதி என்பது பல வகையை சார்ந்ததாகும். ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார். அவர் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பின் கொடுப்பதற்காக அரசு ஒரு தொகையை அரசு அவர் பெயரில் ஒரு தொகையை சேமித்து வருகிறது. இப்போது இந்த தொகையின் மீது ஜகாத் கடமையாகுமா...?
தனியார் நிறுவனங்களிலும் இதே முறை கையாளப்படுகிறது.
வெளி நாடுகளில் வேலை செய்பவர்களுக்காக அவர்கள் பணி புரியும் இடங்களில் வேலையிலிருந்து விடைப் பெற்று செல்லும் காலங்களில் அவர்களுக்குக் கொடுப்பதற்காக அவர்களின் மாத ஊதியத்தைப் பொருத்து ஒரு தொகை கணக்கில் இருக்கும். இத் தொகை அவர்கள் தன் வேலையை விட்டு விட்டு தாயகம் திரும்பும் போது அவர்களுக்குக் கிடைக்கும். இத்தகைய தொகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா..?
இது போன்ற வைப்பு நிதிகளைப் பொருத்தவரை அவற்றின் மீதுள்ள சில நிபந்தனைகளைப் பொருத்தே அவற்றிர்க்கு ஜகாத் கடமையாகுமா.. ஆகாதா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது.
அரசாங்கத்திடமோ அல்லது தனியார்களிடமோ வேலை செய்பவர்கள் பெயரில் சேமிக்கப்படும் வைப்பு நிதி என்பது அரசாங்கமோ அல்லது தனியாரோ அந்தத் தொகையை அன்பளிப்பாக அல்லது நன்கொடையாகக் கொடுக்கிறதா.. அல்லது அவரது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை பிடித்து அதை வழங்குகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
அவை அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் அன்பளிப்பு - நன்கொடைப் போன்றவை கைக்கு வந்தப் பிறகே உரியவருக்குரிய பொருளாகும். கைக்கு வராதவரை அவற்றின் மீது உரியவர் எந்த உரிமையும் கோரமுடியாத நிலை இருப்பதால் அவற்றின் மீது ஜகாத் கடமையாகாது.
'நான் உங்களுக்கு ரூ10-000 அன்பளிப்பாக கொடுக்கப் போகிறேன்' என்று நான் ஒருவரிடம் கூறினால் அது ஒரு முன்னறிவிப்புத் தானே தவிர அந்தத் தொகை அவருக்கு கிடைத்து விட்டது என்று பொருளல்ல. இது போன்றுதான் நமது வேலைக்காக கிடைக்கும் அன்பளிப்புகளும் நன்கொடைகளும்.
நமக்கு கிடைக்கும் தொகை நமது ஊதியத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாகும் அந்தத் தொகைதான் நமது பணிகாலத்திற்கு பிறகு நமக்கு கிடைக்கும் என்றால் அதன் மீது ஜகாத் கடமையாகுமா..?
இங்கு சற்று ஆழமாக சிந்திக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒருவரது ஊதியத்திலிருந்து அவரது எதிர்காலத்திற்காக அரசாலோ அல்லது தனியாராலோ ஒதுக்கப்படும் தொகை எவ்வித தங்கு தடையுமின்றி அவருக்கு கிடைத்து விடும் என்றால் இப்போது அந்தத் தொகை வங்கியில் சேமிக்கப்படும் தொகைக்கு ஒப்பாகி விடுகிறது. அதாவது தனது சொந்த பணத்தை வங்கியிலில்லாமல் பணி செய்யும் இடத்தில் அவர் சேமிக்கிறார். அதன் மீது முழு அதிகாரமும் அவருக்கு இருக்கிறது என்ற நிலை உள்ளதால் அந்த தொகையையும் மற்ற சொத்துக்களுடன் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.
ஆனால் தமது சொந்த பணம் பணி இடங்களில் 'தமது எதிர்கால நிதியாக' ஒதுக்கப்பட்டாலும் கடைசியில் அதை பெறுவதில் சிக்கல்கள் இருக்கிறது என்ற நிலை இருந்தால் (பல இடங்களில் இந் நிலை நீடிக்கவே செய்கின்றது. தேவையற்ற குற்றச்சாட்டுகள் - வழக்குகள் - தொகையில் மோசடி அல்லது கழிவு என்று பல பிரச்சனைகளை வேலை செய்யும் ஊழியர்கள் சந்திக்கத்தான் செய்கின்றார்கள். இதில் சில தனியார் கம்பெனிகளிடம் ஊழியர்கள் படும் அவதி மிக மோசமானது) இப்போது அந்தத் தொகைக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது நிலை உருவாவதால் பிரச்சனைகள் முடிந்து அந்தத் தொகை கைக்கு வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையாகாது.
வங்கியின் வைப்பு நிதி
வங்கியில் சேமிக்கப்படும் தொகை என்பது வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடனாகவே கருதப்படும். ஆனாலும் எந்நேரமும் அதை திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை இருப்பதால் அது அவரது கை வசம் இருக்கும் நிதிக்கு ஒப்பான நிலையையே பெறுகிறது. இந் நிலையில் வங்கி சேமிப்புகளுக்கு ஜகாத் கடமையா என்றப் பேச்சுக்கே இடமில்லை அவற்றிர்க்கு கணக்கிட்டு கட்டயாம் ஜகாத் கொடுத்தாக வேண்டும். (வங்கித் தொகைப் பற்றி மேலதிக விளக்கம் தேவைப்படின் அவற்றை வாசகர்கள் எழுதவும்)
பங்கு நிறுவனங்கள்
பங்கு வர்த்தகம் என்பது உலக அளவில் - குறிப்பாக இந்தியாவில் - கொடிகட்டிப் பறக்கும் சூழ்நிலையைப் பெற்றுள்ளது. இந் நிலையில் பங்கு வர்த்தக சந்தையில் முதலீடு செய்பவர்கள் - பங்கு பத்திரம் வைத்திருப்பவர்கள் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களுக்கு சமமான அந்தஸ்த்தையே பெறுகிறார்கள். விரும்பும் நேரத்தில் பங்கை விற்க முடியாவிட்டாலும் அவர்கள் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட முடியாது. வருமானம் வரும் சேமிப்பு நிதியாகவே பங்குப் பத்திரங்கள் கருதப்படும். எனவே ஜகாத்தை கணக்கிடும் தருணங்களில் பங்கு பத்திரத்தின் அன்றைய நிலவரத்தை மதிப்பிட்டு ஜகாத் வழங்கியாக வேண்டும்.
இதுவரை ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் என்னென்னவென்று பார்த்தோம். இனி எந்தெந்தப் பொருள்கள் மீது எந்த அளவிற்கு ஜகாத் கடமையாகும்? கால அளவுகள் என்ன? ஒட்டகம் - ஆடு - மாடு என்று வரும் ஹதீஸ்களையெல்லாம் எப்படிப் புரிந்துக் கொள்வது? இன்னபிற ஏராளமான தொழில் வளர்ச்சிக்குரிய ஜகாத் மதிப்பீடுகளை எப்படி வகுப்பது என்பதையெல்லாம் தொடராக தெரிந்துக் கொள்வோம் இறைவன் நாடட்டும். (வளரும்)
Labels:
ஜக்காத் சட்டங்கள் - 5
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்
No comments:
Post a Comment