Tuesday, May 3, 2011

யார் குர்ஆனைத் தொடுவது? பதில்கள் தொகுப்பு - 2

24 கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? ஷஃபிகுர் ரஹ்மான்.

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான்.

'நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். 'இல்லை' என்றேன். 'நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். 'இல்லை' என்றேன். 'அப்படியானால் நோன்பை முறித்துவிடு' என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் 'வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடைசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரியில் உள்ள ஹதீஸ் எண்: 1984, 1986, 1986, - திர்மிதி - 740)

வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் - வெள்ளி, அல்லது வெள்ளி - சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

**********

25 கேள்வி: மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை தொடுவதற்கும், ஓதுவதற்கும், பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்கும் தடையுண்டா? பிரான்ஸிலிருந்து முஹம்மது இஸ்மாயில்.

ஓரு சகோதரர் குர்ஆன் பற்றிக் கூறும்போது - அது எல்லா புத்தகங்களை போன்ற ஒரு புத்தகம்தான். அதனை கீழே வைப்பதற்கோ, கால்களில் வைத்துக் கொண்டு ஓதுவதற்கோ தடையில்லை. குளிப்பு கடமையான நிலையிலும், ஒளு இல்லாமலும் குர்ஆனை ஓதலாம் என்கிறார். இது பற்றி விளக்கவும். ஷஃபிகுர் ரஹ்மான்.

அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வனத்திற்கான விளக்கம் என்ன?.

பிரான்ஸிலிருந்து முஹம்மது இஸ்மாயில்.

மேற்படி கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இது பற்றி விரிவாக அலசுவோம்.

மேற்படி கேள்விகள் எல்லாம் வருவதற்கு முதல் காரணம் குர்ஆன் நமக்கு மட்டும் சொந்தம் என்று முஸ்லிம் சமுதாயம் விளங்கி வைத்திருப்பதுதான். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கைக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் உண்டு. தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்). இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27.

இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 650கோடி பேர்களில் 250 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம். புடிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது - இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இந்த குர்ஆனை தொடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக சில அறிவிப்புகள் உள்ளன. அந்த அறிவிப்புகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை காண வேண்டும்.
1. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், குர்ஆனிலிருந்து எதையும் ஓதக் கூடாது என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபுதாவூத், திர்மிதி, இப்னுமாஜாவில் இந்த செய்தி இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களின் தொடரில் 'இஸ்மாயில் பின் அய்யாஸ்' என்ற ஒருவர் இடம் பெறுகிறார். இவர்; ஹிஜாஸ்வாசிகளிடமிருந்து கேட்டு அறிவிப்பவை பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை 'மூஸா பின் உக்பா' என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். இந்த ஹதீஸை ஏற்கத் தேவையில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் கருத்து போன்றே தாரகுத்னியின் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானது.
2. நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின், குர்ஆன் ஓதுவார்கள். எங்களுடன் மாமிசம் உண்பார்கள். ஜனாபத் (பொருந்தொடக்கு) தவிர வேறெதுவும் குர்ஆன் ஓதுவதிலிருந்து அவர்களை தடுக்காது என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத், இப்னுமாஜா, நஸயி, திர்மிதி, பைஹகி போன்ற நூல்களில் இந்த செய்தி வருகிறது.
இமாம் ஷாஃபி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸலாமா என்பவர்தான். இவருக்கு வயதான காலத்தில் நினைவு தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஹதீஸை முதுமையில்தான் அறிவிக்கிறார் என்று ஷிஃபா அவர்கள் கூறுகிறார்கள். இதே காரணத்திற்காகத்தான் இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். அஹ்மத், அத்தாபி, நவவி போன்ற அறிஞர்களும் அந்த ஹதீஸஸ விமரிசித்து உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ்; பலவீனமானதாகும்.
3. நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள். அமீருப்னு ஹஸ்மு (ரலி) மூலம் ஹாக்கிம், தாரகுத்னி, நூல்களில் இந்த செய்தி வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் வருகிறார். இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும்.
நஸயீயில் இடம்பெற்ற ஹதீஸில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் வருகிறார். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலகீனமாகும். (ஒரு ஹதீஸ் எப்படி பலகீனப்படுகிறது என்பதை 'ஹதீஸ்கள் பலவீனப்படுமா?. எப்படி?.. என்ற கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளோம். படித்து பாருங்கள்).

ஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.

இனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்.

இந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், 'தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது' என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.

'நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்).

இந்த வசனத்தில் இடம் பெறும் 'தூய்மையானவர்கள்' யார்? என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் 'அதனை' என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

'அதனை தொடமாட்டார்கள்' என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் 'தொடக் கூடாது' என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் 'தொடமாட்டார்கள்' என்று படர்க்கையாக 'செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.

தொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி?.

ஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் - ஒளுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

'இனி தொடமாட்டார்கள்' என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை - குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

எனவே 'தொடமாட்டார்கள்' என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் 'தொடக்கூடாது' என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'அதனை' என்பது என்ன?.

'அதனை' என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் - குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய 'வஹி' யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.

'இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 - ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).

'(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)

மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.

'எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)

மேற்படி வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஓசையும் - உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் - யாராலும் தொட முடியாது. அப்படியானால் 'அதனை' என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் 'அதனை' என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தூய்மையானவர்கள் என்றால் யார்?.

இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் - ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.

உள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் 'அதனை' என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.

இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல 'சொல்' தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று 'ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்' என்பதாகும்.

மேற்படி 'சொல்' தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.

'இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)

'இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)

மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத 'தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் 'அதனைத் தொடமாட்டார்கள்'

என்று இறைவன் தெளிவாக அறிவித்து விட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).

அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,

'தூய்மையானவர்களைத் தவிர' என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,

அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் - குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.

குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.

**********

26 கேள்வி: அல்ட்ரா சவுண்ட் மூலம் தாயின் வயிற்றில் வளரும் கருவைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? எஸ்.எம். அப்துல் காதர்.

தாயின் வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி, எடை, இயக்கம், தன்மை இவைகளைக் காண, கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அக்கரை கருதி ஸ்கேன் மூலமாகவோ, அல்ட்ரா சவுண்ட மூலமாகவோ கருவை காண்பதில் அல்லது அணுகுவதில் இஸ்லாத்தில் தடையில்லை.

'நாம் மனிதனை மண்ணிலிருந்தும், பின்னர் அவனை உயிரணுவாக்கியும், பின்னர் அலக் என்ற நிலையிலாக்கியும், பின்னர் தசை பிண்டமாக்கியும் பின்னர் எலும்களை உருவாக்கியும், பின்னர் அந்த எலும்புகளுக்கு இறைச்சியை போர்த்தியும், பின்னர் அதை வேறொரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 23 ஸூரத்துல் முஃமினூனின் 12, 13, 14வது வசனங்கள்)

கருவில் உருவாகும் குழந்தை ஒரு நிலையிலிருந்து மறுநிலை, அதிலிருந்து அடுத்த நிலை என்று மாறியே வளர்கிறது. ..பின்னர் என்ற வார்த்தைகளின் மூலம் கருவானது ஆறுநிலைளை கடந்து ஏழாவது நிiயிலேயே மனித உருவமாக மாறுவதாக குர்ஆன் கூறுகிறது. குர்ஆன் குறிப்பிடும் குழந்தை வளர்ச்சியின் நிலைகளை அறிய வேண்டுமானால் ஸ்கேன் மூலம், அல்ட்ரா சவுண்ட் மூலம் இன்னும் அதிநவீன கருவிகள் மூலம் கருவியலை அணுக வேண்டும். மேற்படி அணுகு முறைகளை அனுமதிக்கும் இஸ்லாம் கருவில் உள்ள உயிரை கொல்வதற்கு தடைவிதிக்கிறது.

அருள்மறை குர்ஆனின் 06வது அத்தியாயம் ஸூரத்துல் அன்-ஆம் - ன் 151வது வசனத்தின் ஒரு பகுதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்..'

அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் ஸூரத்துல் பனீ-இஸ்ராயீல் - ன் 31 வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளை) அளிக்கிறோம். - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்.'

வளர்ந்துள்ள அறிவியல் அறிவின் மூலம் லட்சக் கணக்காக உயிர்கள் குறிப்பாக அவைகள் பெண் சிசுக்கள் என்று கண்டறியப்பட்டபின் கருவிலேயே அழிக்கப்படுவது இன்றைய உலகில் சர்வ சாதாரணமாகி விட்டது. (இது பற்றிய அதிகமான புள்ளி விபரம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதிலில் உள்ளது) கருவில் ஒரு உயிர் உருவான பின் அதனை அழிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தன் குழந்தைக்கு சமாதி கட்டும் எண்ணத்தில் மனிதன் இத்தகைய அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தவதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் மூலம் கருவின் வளர்ச்சிக்கு எந்தவித இன்னலோ அல்லது தடையோ ஏற்படாது என்றால் மேற்படி செயலுக்கு தடை இல்லை.

**********

27 கேள்வி: இரவில் உறங்கும்போது ஸ்கலிதம் ஏற்பட்டு விடுகிறது. கடுங்குளிர் அல்லது உடல்நிலை சரியில்லாத நிலையில் ஸூப்ஹ் தொழுகைக்காக குளித்துதான் ஆக வேண்டுமா?. தயமும் செய்வதாக இருந்தால் மண் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் என்ன வெய்வது?. அன்ஸார் ஹஸன் - சவுதி அரேபியா.

அருள்மறை குர்ஆனின் 04வது அத்தியாயம் ஸூரத்துல் நிஷாவின் 43வது வசனத்தின் ஒருபகுதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'..நீங்கள் நோயாளியாவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) நீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும், தடவி 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.'

1. நோயாளியாக இருந்து தண்ணீர் கிடைத்தும் அதனை பயன் படுத்த முடியாவிட்டால்,

2. பிரயாணத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால்,

3. மனைவியோடு உறவு கொண்டு தண்ணீர் கிடைக்காவிட்டால்,

4. மல-ஜலம் கழித்தபின் தண்ணீர் கிடைக்காவிட்டால்

இவர்கள் தூய்மையான மண்ணைத் தொட்டு 'தயம்மும்' செய்து கொள்ளலாம் என அருள்மறை குர்ஆன் அனுமதியளிக்கிறது. அதே நேரத்தில் கடுங்குளிர் என்கிற வார்த்தை நேரடியாக இடம் பெறவிட்டாலும், அதை அனுமதிக்கும் பொதுமான அருள்மறை வசனம் உள்ளது:

'உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கருணையுடையவனாக இருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 4 ஸூரத்துல் நிஷாவின் 29வது வசனம்)

ஒருவர் நோயாளியாக இருக்கிறார். காய்ச்சல், தலைவலி, இதர வெளி காயங்கள் போன்ற ஏதாவது ஒரு நோயால் அவதிப்படுகிறார். சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீரைப் பயன் படுத்தினால் மேலும் நோய் அதிகரிக்கலாம் அல்லது மணரம் நேரிடலாம் எனறு உணர்கிறார் எனில், இவர் எந்தத் தடையுமின்றி தயம்மும் செய்து கொள்ளலாம். காலம் முழுவதும் தண்ணீரை பயன் படுத்த முடியாவிட்டாலும் அவர் தயம்மும் செய்து கொண்டால் போதும்.

'நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். கல் உருண்டு விழுந்து ஒரு மனிதரை காயப்படுத்தி விட்டது. இந்நிலையில் அவருக்கு ஸ்கலிதமும் ஏற்பட்டு விட்டது. அவர் மற்றவர்களை பார்த்து,'எனக்கு தயம்மும் செய்து கொள்ள அனுமதி உண்டா?. எனக் கேட்டார். 'நீங்கள் தண்ணீரைத்தான் உபயோகிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு சக்தி இருக்கிறது' என்று உடனிருந்தவர்கள் கூறினர். உடனே அவர் குளித்தார். குளிப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்ததும் 'அவரை கொன்றவரை அல்லாஹ் கொல்வானாக!. சட்டம் தெரியாவிட்டால் கேட்க வேண்டாமா?.. அறியாமைக்கு நிவாரணம் கேட்டு அறிவதாகும். அவருக்கு தயம்மும் போதுமானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கடுங்குளிரில் குளித்தால் ஏதாவது ஏற்படும் என்ற பயம் உள்ளவர்கள் தயங்காமல் தயம்மும் செய்து கொள்ளலாம்.

அம்ரு-இப்னு-ஆஸ் (ரலி) அவர்களுக்கு பயணத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு, கடுங்குளிரின் காரணமாக - குளிக்காமல் - தயம்மும் செய்து, நபித் தோழர்களுக்கு ஸூப்ஹ் தொழுகையை ஜமாத்தாக தொழ வைத்தார்கள். மேற்படி செய்தியை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அம்ரு-இப்னு-ஆஸ் (ரலி) அவர்களை அழைத்து விசாரிக்கிறார்கள். குளிரில் தயம்மும் செய்து தொழுதாயா?.. என்று. 'ஆம். அப்படியேதான் செய்தேன். அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் 29வது வசனம்தான் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது,' என்று அம்ரு-இப்னு-ஆஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, மௌனமானார்கள்..! என்ற செய்தி அஹ்மத், அபூதாவூத், ஹாக்கிம், தராகுத்னி போன்ற ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் கடுங்குளிர் போன்ற வேளைகளில் தண்ணீரை சூடாக்கி பயன்படுத்தும் வசதிகள் தாராளமாக உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தண்ணீர் கிடைக்காவிட்டால், கிடைத்தும் பயன்படுத்த முடியாவிட்டால், தயம்மும் செய்யலாம். தூய்மையான மண்ணைத் தொட்டு தயம்மும் செய்ய இறைவன் சொல்வதால், அப்படியே செய்ய வேண்டும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு உடனே மண் கிடைப்பது கஷ்டமாக இருக்கலாம். இவர்கள் முன்கூட்டியே மண்ணை வீட்டில் வைத்துகள் கொள்ளலாம். அதற்கும் இயலாவிட்டால் தரையிலோ, சுவற்றிலோ கைகளை வைத்து தயம்மும் செய்து கொள்ளலாம். ஏனெனில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:
'அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும், அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 286வது வசனத்தின் ஒரு பகுதி).

**********

28 கேள்வி: பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?. ஆம் எனில் அல்லது கூடாது எனில் ஆதாரத்துடன் விளக்கவும். சகோதரி. ஆயிஷா தஸ்லிமா.

பெண்களைப் பெருத்தவரை புருவங்களின் முடிகளை முழுமையாக மழித்து அழகுபடுத்தவதையும், பச்சைகுத்தி அழகுபடுத்திக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. தங்க நகை, பட்டாடை உட்பட அழகு சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்வதற்கு தடையில்லை. அதுபோல அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று மேக்கப் சாதனங்களால் தம்மை அழகு படுத்திக் கொள்ள தடை இருப்பதாக பார்க்க முடிவதில்லை.

பொதுவாக இன்றைக்கு வரும் மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் உடலுக்கும், உடல் அழகுக்கும் பாதிப்பை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. மேக்-அப் சாதனங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சினிமா கூத்தாடிகள் மாத்திரம் உபயோகிப்பதாக இருந்தது. மற்றபடி சாதாரண குடும்பப் பெண்கள், மற்றும் கல்லூரிp பெண்கள் போன்றவர்கள் சாதாரண பவுடர் மற்றும் ஃபேர் அண்;ட் லவ்லி போன்ற க்ரீம்களை மாத்திரமே பயன் படுத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சினமா பூச்சுக்கள் நாகரீக மேக்-அப்செட்கள் என்ற பெயரில் வீடுகளில் நுழைந்து விட்டன. சாதாரண பெண்கள் முதல் டீன் ஏஜ் பெண்கள் வரை அதனை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். மேற்படி மேக்-அப் செட்களில் இருக்கும் இரசாயணப் பொருட்களினால் உடலுக்கும், உடல் அழகுக்கும் ஏற்படும் கெடுதிகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. ஆரம்ப காலங்களில் இவை முகத்திற்கு பொலிவையும் அழகையும் கொடுப்பது போல் தோன்றினாலும், பிறகு வரும் நாட்களில் அதுவும் இளமையின் மத்தியிலேயே முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. கடைசியில் மேக்-அப் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடுகிறது.

எனவேதான் மேக்-அப் இல்லாத சினிமா கூத்தாடிகளை பார்க்க சகிப்பதில்லை. தொலைகாட்சிகளில் இப்போது வரும் தொடர் சீரியல்களிலும் சரி, சாதாரண நிகழ்ச்சிகளிலும் சரி மேக்-அப் போட்டுக் கொண்டு போலி அழகிகளை கண்டு - இதர குடும்ப பெண்களும், கல்லூரி பெண்களும் தாமும் அதுபோல் அழகாக தோன்ற வேண்டும் என்று உடலுக்கும், உடல் அழகுக்கும், பணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மேக்-அப் சாதனங்களை நாடுகிறார்கள்.

இந்த செயற்கை கவர்ச்சியில் பெண்களின் இயற்கையான எழிலை பாழ்படுத்தும் சக்தி உள்ளது என்பதை அறிந்து இதுபோன்ற மே-அப் சாதானங்களை உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது.

முக்கியமாக பெண்கள் தங்களை எப்படி அழகு படுத்திக் கொண்டாலும், அந்த அழகை தம்போன்ற பெண்களிடமும், உரிமையுள்ள ஆண்களிடமும்(கணவன், சகோதரர்கள், தந்தை போன்றவர்கள்) மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். பிற ஆண்களிடம், பெண்கள் தம் அழகை வெளிக்காட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. மேக்-அப் போட்டுக் கொண்டால்தான் இந்த தடை என்றில்லை. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள் என்பதால் இந்த கட்டளை எல்லா வேளைகளிலும் பொதுவானதுதான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸூரத்துந் நூரின் 31வது வசனம் குறிப்பிடுகிறது:

**********

29 கேள்வி: வட்டியின் எல்லா வழிகளும்-கொடுப்பது,எடுப்பது,சாட்சி சொல்வது-இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முஸ்லிம் வங்கியில் வேலை செய்து வரும் பணத்தில் வாழ்க்கை நடத்தலாமா..? ஹராத்தை உட்கொண்டவன் உடல் சுவனம் நுழையாது என்று நபிமொழியுள்ளதே..! எஸ்-எம்-எம் முனவ்வர்

நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலேயே வட்டிப்பற்றி கடும் எச்சரிக்கை செய்யும் இரண்டு ஹதீஸ்கள் அடங்கியுள்ளன. கேள்விக்குறிய பதிலும் அதிலேயே அடங்கியுள்ளது.(வட்டிப் பற்றி விரிவான கட்டுரை நமது வெப் தளத்தில் இடம் பெறும் இறைவன் நாடட்டும்)

**********

30 கேள்வி: இன்று நம்மில் பலர் அரசிடம் முறையற்ற தகவலை வழங்கி லட்சகணக்கில்; பணத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தால் ஹஜ் செய்தால் அந்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா..? (எஸ்.எஸ்.எம் முனவ்வர்)

பொதுவாகவே உலகில் உள்ள இறை நிராகரிப்பு அரசுகள் முஸ்லிம்களை ஒடுக்கவே முயற்சிக்கின்றன.உண்மை இப்படி இருக்கும்போது முஸ்லிம்கள் அரசிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பெறுகிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. அரசுகளிடமிருந்து ஈட்டுத்தொகை பெறுவதாக இருந்தால் அதற்கு போதிய சான்றுகள் இருக்க வேண்டும். போதிய சான்றுகள் இருந்தாலும் ஈட்டுத்தொகை குறைவாகவே கிடைக்கும் இதையெல்லாம் கவணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முறையான வழியில் அல்லாமல் வரும் பணத்தில் ஹஜ் செய்யலாமா..? என்று கேள்வியை கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம்.

ஹஜ் என்பது செய்தே தீர வேண்டும் என்று விதிக்கப்பட்ட கடமையல்ல இறைவனின் அந்த ஆலயம் சென்று வர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்கிறது குர்ஆன் (3:79) சக்தி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து ஹஜ்ஜூக்கா செலவிடப்படும் தொகை அதை செய்பவருக்கு முறையான-ஹலாலான-வழியில் வந்திருக்க வேண்டும் என்hதை விளங்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்துக் கொள் கடவுளுக்குறிய தொகையை மட்டும் முறையாக உண்டியலில் காணிக்கையாக்கி விடு என்று சொல்லும் மார்க்கமல்ல இஸ்லாம்.

பணம் வரும் வழியும் அது செலவிடப்படும் முறையும் இறைவனால் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எல்லா அமல்களுக்கும் இஸ்லாம் முன் வைக்கிறது.

நன்மையை நாடி செலவு செய்யப்படும் எதுவும் நல்லப் பொருள்களிலிருந்தே செலவு செய்யப்பட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான். (பார்க்க 2:215)

மெய்யாகவே அல்லாஹ் இறையச்சமுடையவர்களின் அமல்களைத்தான் ஏற்றுக் கொள்கிறான் (பார்க்க 5:27)

ஹஜ் என்ற பெரும் கடமையை செய்ய நாடுபவர்கள் குறுக்கு வழியில் பணம் திரட்ட எண்ண மாட்டார்கள்-எண்ணக் கூடாது ஏனெனில் அவை அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்படாது.

**********

31 கேள்வி: விபச்சாரம் செய்பவன் விபச்சாரியையன்றி திருமணம் முடிக்க மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது, இந்நிலையில் விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாமிய பண்பாட்டை ஒழுகி நடக்கும் ஒரு பெண்ணை திருமனம் செய்கிறான் இந்நிலையில் மேற்கண்ட வசனத்தின் நிலை என்ன..? எஸ்,எம்,எம் முனவ்வர்

ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks