Wednesday, August 14, 2013

தலை முக்காடு தடையில்லை இனி..


ஸலாம்.

இந்திய அரசுப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடுடன் படிப்பதற்கு எவ்விதத் தடையும் இந்திய அரசியல் சாசன சட்டத்திலோ, கல்வித் துறை வழிகாட்டலிலோ இல்லை என்ற போதும் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல ஊர்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விரும்பி தலை முக்காடு அணிந்தால் பள்ளி நிர்வாகம் அதை தடுத்தும், கண்டித்தும் மாணவிகளை மன உளைச்சளுக்கு ஆளாக்கி வந்துக் கொண்டிருக்கின்றது. 


அப்படிப்பட்ட ஊர்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக இந்த அவலம் நீடித்தாலும் முறையாக இதை எதிர்கொண்டு நம் உரிமையை நிலை நாட்டும் வாய்ப்பை நம் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

முந்தைய ஊரின் பொது ஜமாஅத்துகள் இது குறித்து சொன்னத் தகவலில் "முஸ்லிம் மாணவிகளே - தங்களுக்கு தலை முக்காடு போட விருப்பமில்லை - என்று எழுதி கொடுத்துள்ளார்கள், நாம் என்ன செய்வது..?" என்ற செய்தியே கிடைத்தது.

மாணவிகள் ஒரு தவறான முடிவெடுத்தால் அதை மாணவிகளிடம் சுட்டிக் காட்டி அவர்களை வென்றெடுப்பதற்கு பதில், தவறான புரிதலையே பொது சட்டமாக்கி மக்கள் முன் வைத்த அவலம் நெஞ்சை சுட்டது.

ஆனாலும் இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்து வந்தன.  சமூக மாற்றங்களுக்கு மிக முக்கிய பங்காற்ற வேண்டிய ஜும்ஆ மேடைகளின் மூலம் இது வீரியமடைந்தது. பொது குழுமங்களில் விவாதிக்கப்பட்டது.

துணிச்சலுடன் தலை முக்காடு போட்டுக் கொள்ளும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் உடனுக்குடன் தலையிட்டு இந்திய குடி மக்களுக்கு இந்திய அரசு வழங்கி இருக்கக் கூடிய உரிமைகள் சுட்டிக் காட்டப்பட்டு வந்தன.

கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளை சந்தித்து முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சளுக்கு உணர்வு ரீதியான தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மிக நீண்ட போராட்டம், கோரிக்கை, வாத பிரதிவாதங்களுக்கு பிறகு இந்த கல்வியாண்டில் நமதூர் அரசு பெண்கள் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு போட்டுக் கொள்ள அனுமதி கிடைத்ததையும் நம் மாணவிகள் தற்போது தலை முக்காட்டுடன் பள்ளியில் படிப்பதையும் நாம் அறிவோம்.

இதை மெருகூட்டி இனி வரும் காலங்களில் மாணவிகள் தொடர்ந்து தலை முக்காடு அணிந்து பள்ளியில் படிக்கும் சூழ்நிலையை நாம் கவனத்துடன் உருவாக்க வேண்டும்.  இன்றைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போன்று காலாகாலத்திற்கும் இதை தக்கவைப்பதும் முக்கியமாகும்.

நூற்றுக்கணக்கான மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.  வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம்.  எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் தலை முக்காடு அணிவதன் அவசியத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் அதை கழற்றத் தேவையில்லை என்ற அறிவையும் ஏற்படுத்த வேண்டும். 

தலை முக்காட்டை ஒரு சடங்காக பார்க்காமல் அதை ஒரு இஸ்லாமிய பண்பாட்டு அடையாளமாகவும், பெண்கள் அணியும் உடைகளில் அதற்கும் முக்கியப் பங்குண்டு என்பதையும் நம் மாணவிகளின் உள்ளத்தில் அழுத்தமாக பதிய வைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பரங்கிப்பேட்டையின் அனைத்து முஸ்லிம் வீடுகளுக்கும் இந்த செய்தி எட்டியுள்ளதா.. என்று நமக்கு தெரியவில்லை.   எனவே சமுதாய அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்து வந்தால் பலனளிக்கும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள மிகப் பெரிய மீடியாவான ஜும்ஆ மேடைகளில் அவ்வப்போது இதை நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

தலை முக்காட்டிற்கெதிராக பள்ளியில் மாணவிகள் ஏதும் பிரச்சனையை சந்தித்தால் அதை அலட்சியப்படுத்தாமல் பெற்றோர்கள், அல்லது பொறுப்புதாரிகள் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

நமது அலட்சியப்போக்கே ஏராளமான உரிமைகளை இழந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் என்பதை முஸ்லிம்கள் அறிவார்ந்து சிந்தித்து உணர வேண்டும். இது நடந்தால் உரிமைகளை வென்றெடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks